வானசாஸ்திரிகளின் 3 காணிக்கைகள்

வானசாஸ்திரிகளின் 3 காணிக்கைகள்
************************************************
மத்தேயு 2:11
***************
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தனர்.
*******************************************************************
வானசாஸ்திரிகள் பிள்ளை இயேசுவையும் தாய் மரியாளையும் கண்டார்கள். ஆனால் அவர்கள் மரியாளையல்ல, பிள்ளை இயேசுவுக்கு முன்பாக மட்டும் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டார்கள்.

அவர்கள் மரியாளுக்கு அல்ல, பிள்ளை இயேசுவுக்கு மாத்திரம் 3 காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
நாமும் இந்த மூன்று காணிக்கைகளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டும்.

(1) பொன் (முதல் காணிக்கை):
-------------------------------------------------------
"அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். (1பேதுரு 1:7). நாம் பொன்னைக்காட்டிலும் விலையேறப்பெற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் மாசற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டு இரட்சிக்கப்பட்டவர்கள் என்று 1பேதுரு 1:18-19 சொல்லுகிறது. ஆகையால் நாம் அதிகவிலையேறப்பெற்ற நமது விசுவாசத்தை நமது வாழ்க்கையின் எல்லாவிதமான சோதனைகளிலும் இயேசுகிறிஸ்துவுக்குக் காணிக்கையாக அநுதினமும் கொடுக்க வேண்டும். யோவான் 14:1 ல் இயேசுகிறிஸ்து சொல்லுகிறார்: "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்."

(2) தூபவர்க்கம்(இரண்டாம் காணிக்கை)
-------------------------------------------------------------------------
"அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து " (வெளி.5:8).

'ஜெபங்களாகிய தூபவர்க்கம்' என்று இந்த வசனத்தில் வாசிக்கிறோம். ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக வணக்கமாய்ப் பணிந்து நமது அநுதின ஜெபங்களுடன் உபவாச ஜெபம் துதிஆராதனை ஜெபங்களையும் காணிக்கையாக தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் அவர் மூலம் பிதாவாகிய தேவனுக்கும் செலுத்த வேண்டும்.

(3)வெள்ளைப்போளம்(3-வதுகாணிக்கை) --------------------------------------------------------------------------
'வாசனையுள்ள வெள்ளைப்போளம்' என்று உன்னதப்பாட்டு 5:5 சொல்லுகிறது. வெள்ளைப்போள வாசனையினால் கர்த்தர் மகிழுகிறார் என்று சங்கீதம் 45:8 சொல்லுகிறது. நாமும் இந்த வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலேயும் கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்த வேண்டும் என்று 2கொரிந்தியர் 2:14 சொல்லுகிறது. நாம் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் என்று 2கொரி.2:15 சொல்லுகிறது. நாம் ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம் என்று 2கொரி.2:16 ல் வாசிக்கிறோம். இந்த வாசனையுள்ள காணிக்கையை நாம் நமது வார்த்தையின் மூலமாகவும் நமது வாழ்க்கையின் மூலமாகவும் சாட்சியாக தேவனுக்கு செலுத்தி தேவனை மகிழ்விப்போம்.

இந்த 3 காணிக்கைகளையும் தினமும் இயேசு கிறிஸ்துவுக்காக தேவனுக்கு செலுத்தி கிறிஸ்துவுக்குள்ளான சந்தோஷத்தினால் அநுதினமும் நிரப்பப்படுவோமாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ஹால்லேலூயா!!

No comments