என் சர்வாயுதவர்க்கங்கள்

என் சர்வாயுதவர்க்கங்கள்

அன்றொரு நாள்.....
என் வாழ்வில் வசந்த கால பூக்கள்
கண் சிமிட்டிய நாள்.....!
என் இரட்சகர் எனக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவித்து,
நீதி எனும் சால்வையை அணிவித்து,
அழகு பார்த்து மகிழ்ந்த பொன்னாள்..!

அன்று முதல்...
என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவித்த
என் மாஸ்டர் இயேசுகிறிஸ்துவுடன்
உற்சாகமாய் தொடர்ந்தேன் என் ஆவிக்குரிய யுத்தத்தை......!

எனக்கு எதிராக.....
வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகளின் சேனைகளும்,
இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகளும்
தந்திரங்கள் எனும் அக்கினியாஸ்திரங்களுடன் தரித்து நிற்க.....

என் துணையாக என் மாஸ்டர் இயேசுகிறிஸ்து,
என் தேற்றரவாளர் பரிசுத்தஆவியானவர் மற்றும் கோடானுகோடி தூதர்கள்.......!

என்னை நானே தொட்டுப்பார்க்கிறேன்.....!
இது கனவா? இல்லை நனவா....?
ஒரு போர்வீரனைப் போன்ற மிடுக்குடன் ஆயுதங்கள் தரித்தவளாய் நான்....!

என் தலையிலே இரட்சிப்பு எனும் கவசம்!
என் இடையிலே சத்தியம் எனும் கச்சை!
என் மார்பிலே நீதி எனும் மார்க்கவசம்!
என் பாதங்களை துரிதப்படுத்தும்         ஆயத்தம் எனும் பாதரட்சை !

ஒரு புயத்தினாலே விசுவாசம் எனும் கேடயத்தைப் பிடித்துக்கொண்ட நான்.....
என் மற்றொரு கரத்தினாலே கூர்மையான வேதவசனப் பட்டயத்தைப் பிடித்துக்கொண்டு
எளிதாக முன்னேறினேன்
என் கர்த்தரின் துணையோடு.....!
இது என் பயணத்தின் துவக்கக்கால அனுபவங்கள்...!

இன்னும் நான் சேருமிடம் வந்து சேராநிலையில்.......
எங்கோ....
ஓர் சூரைச்செடியின் தணலும்
ஆமணக்கு செடியின் நிழலும்
என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்க
என் மனதோ....
என் கடந்த கால அனுபவங்களை ஏக்கத்துடன் அசை போடுகிறது.....
என்னவாகிவிட்டது எனக்கு....?
வெற்றிகளோடு வீறுநடை போட்ட என் கால்களுக்கு ஏன் இந்த தொய்வு ....
நன்றாக தானே தொடங்கினேன்...?
ஏன் இந்த தடுமாற்றம்...?
இதுவும் காலத்தின் கோலம் தானோ?
சற்றுப்பின்நோக்கி என் நினைவுகள் அலையலையாய் செல்கின்றன........

ஐயகோ!
என் வெற்றியை கொண்டாட காத்திருந்த என் ஆத்துமநாதனை....
என் நீதியை பிரகாசத்தைப் போலவும்....
என் இரட்சிப்பை எரிகிற தீவட்டியைப்         போலவும்.....
வெளிப்படுத்த ஆவலாயிருந்த என் மீட்பரை ஏமாற்றிவிட்டு
எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறேனே நான்........!
யுத்தம் செய்து கொண்டு தானே இருக்கிறேன் என நான் எண்ணினாலும் இனம் புரியாத பயங்கள் எனை நெருக்கி சூழ்கின்றன.......!
என்னவாகிவிட்டது எனக்கு...?
மீண்டும் ஒருமுறை என்னை நானே
தொட்டுப்பார்த்துக் கொள்கிறேன்........
எங்கே என் சர்வாயுதவர்க்கங்கள்...?

எங்கோ ஓர் ஏளன சிரிப்பொலி....
கள்ளச்சாத்தான் கொக்கரிக்கிறான்.....
"இன்று தான் உணர்வு பெற்றாயோ?
நான் திருடி பல காலங்கள் ஆகிவிட்டதே" என்று.....

அட...!
இதெல்லாம் எப்படி நடந்தது?😑
குழம்பிப்போன மனநிலையில் நான்....!
சத்தியம் இருந்த என் இடையை தரையோடு தரையாய் கட்டிப்போட்டு விட்டது வீண்பேச்சு பேசுவோரின் கூட்டத்தில் நான் தேடிக்கொண்ட இருக்கை......!
இயேசுவின் நீதி சூழ்ந்திருந்த என் மார்பில்
இப்போழுதோ சுயநீதி எனும் பொய்பிரச்சாரங்கள்.....!
சுவிசேஷத்திற்காய் ஆயத்தமாய் ஓடிக்கொண்டிருந்த என் பாதங்களை
தூக்கமயக்கம் எனும் சோம்பேறியின் ஊஞ்சல் தாலாட்டிக்கொண்டிருக்கிறது....!
கேடயமாம் விசுவாசத்தை சுமந்த
என் கை அவிசுவாசமாம் தெர்மாகோலைப் பிடித்திருக்கிறது.....!
ஆவியின் பட்டயம் கொண்டு எளிதாக யுத்தம் செய்து முன்னேறிய
என் மற்றொரு கை....
இப்போதோ....
வெட்டிவேலை செய்கிறது ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பின் மாயாஜால கீபேடுக்கு.......!
என்னை தம் குழந்தையாக ஏற்றுக் கொண்ட என் பரலோகத் தகப்பன் எனக்களித்த அன்பு பரிசாம்
இரட்சிப்பு எனும் தலைக்கவசத்தை என் இரட்சகரின் பிரசன்னத்தை மறந்து நான் சிந்தித்த கெட்ட சிந்தனைகள்
எங்கோ..... எப்போதோ..... உடைத்தெறிந்து விட்டன....!
இப்போதோ....
நிர்க்கதியாய்....காயப்பட்டவளாக..... நிர்வாணமாக.... பரிதபிக்கப்பட்ட நிலையிலே நான்......!
ஏமாற்றங்கள் எரிச்சல்கள் சூழ்ந்து
வெறுமையான நிலையிலே நான்......!
என் நேசரின் இனிய தோட்டமாக இருந்த என் வாழ்வின் நற்குணங்கள் திருடப்பட்டு.....
கல்மேடான வனாந்திரமானது என் வாழ்வு........!

மீண்டும் ஏங்கி நிற்கிறேன்.......😢

என் இதய காயங்களை ஆற்றித் தேற்றும் நல்லசமாரியனுக்காக........
என் தாகத்தைத் தீர்க்கும் ஜீவத்தண்ணீருக்காக......
என் ஏக்கத்தைப் போக்கவல்ல நல்மணாளனுக்காக.......
காயப்பட்டு....குற்றுயிராய்.....தாகத்தோடு ஏங்கி நிற்கும் என்னை கனிவுடன் நோக்கிப் பார்க்கிறது என் ஆத்துமநேசரின் இனியப் பார்வை......!!!!!
ஓடிச்சென்று அவர் பாதங்களை என் கண்ணீரால் ஸ்நானம் பண்ணுகிறேன்.......!

உடைந்து போன என் வாழ்வை மீண்டும் ஒட்ட வல்லவர் அவரல்லவா!!!!!!!!!!

ஆம் என் இயேசு என்னை ஆற்றித் தேற்றுவார்.........

என் வாழ்நாள் முழுவதும் இனி நான் "அவருக்கே சொந்தம்!"

No comments