கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம்


பண்டைய ஜெர்மானிய நாகரீகத்தில் பிற இனத்தவர் பசுமையான மரங்களை முடிவில்லா வாழ்வின் அடையாளங்களாக வழிபட்டு வந்தனர். தீய சக்திகளைத் துரத்துவதற்கு இவ்வழிபாடு பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, சாக்சன் என்ற இனத்தைச் சார்ந்தவர்கள், தங்கள் முக்கியமான கொண்டாட்டங்களில், பசுமையான மரங்களை வழிபடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் காட்டில் உள்ள மரங்களை வழிபட்டதாகவும், பிறகு அவைகளை வெட்டி வந்து, வீடுகளில் அலங்கரித்து வைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. கி.பி. 700-ல் புனித போனிபாஸ், பிற இனத்தவராக இருந்த ஜெர்மானிய மக்களை மனம் மாற்றியதன் வழியாக, சில பிற இன வழிபாட்டு முறைகள் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளோடு இணைந்தன.

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் முதன்முதல் கிறிஸ்மஸ் மரத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்துப் பயன்படுத்தியவர் மார்ட்டீன் லூத்தர் எனச் சொல்லப்படுகிறது. ஏறத்தாழ கி.பி. 1500-ல் ஒரு கிறிஸ்மஸ் காலத்தில், பனிப்பொழிவின் மாலைவேளை, மார்ட்டீன் லூத்தர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் அழகான நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். அவ்வேளையில், ஒரு கிறிஸ்மஸ் மரக்கூட்டத்தின் இடையே இந்த நட்சத்திரங்கள் தென்படும் அழகைப் பார்த்து வியந்தார். உடனே வீடு திரும்பிய அவர், தன் குடும்பத்தினருடன் அந்த மகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அத்தோடு நில்லாமல், விரைந்து சென்று, ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி வந்து, அதன் கிளைகளிலே சிறு மெழுகுதிரிகளை ஏற்றி, வீட்டில் அலங்கரித்து வைத்தார். அதுமுதல் ஒவ்வொரு வருடமும், அவ்வீட்டின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்மஸ் மரம் முக்கிய பங்கு வகித்தது. காலப்போக்கில் ஜெர்மனி முழுவதுமாக, பிறகு உலகம் முழுவதுமாக, இந்த வழக்கம் இன்றளவும் இடம் பிடித்திருக்கிறது. 

இந்த செய்தியை கூடுதல் தகவல்களோடு வீடியோவாக பார்வையிட  கீழே உள்ள லிங்கை பார்வையிடவும். 

No comments