டீக்கடை பெஞ்சு

இந்த கிறிஸ்மஸ்க்கு ‘நேரடியாய் போய்தான் பார்த்து வருவோமே’ என்று நினைத்து நிஜமாகவே இயேசு நம்மிடையே வந்தமர்ந்தால்......? எப்படி இருக்கும்.

இயேசு ஒரு பாமரனாக டீக்கடை பெஞ்சில் தினத்தந்தி படித்துக் கொண்டு ‘‘ஒரு டீ போடுப்பா’’ என்றார்.
டீக்கடைக்காரன் இவரைப் பார்த்து “என்னா இதுக்கு முந்தி பார்த்ததில்லியே. ஊருக்குப் புதுசா” என்றான்.
“இல்ல பழசுதான். இதுக்கு முந்தி ஒருதடவை வந்திருக்கேன்.”
“அப்படியா? அய்யாவுக்கு எந்த ஊரு? என்ன பேரு?”
“ஊரு ரொம்ப தூரம். பேரு.. இயேசு.”
“அட! என்னப்பா கடவுள் பேர வச்சிருக்க. உண்மையிலேயே உன் பேரு அதானா?” நம்ப முடியாமல் பார்த்தான்.
“சரி சரி. எதுவானா இருந்திட்டு போ. டீ’க்கு காசு வச்சிருக்கியா?”
“இருக்கு”

இந்த உரையாடல் முடிவதற்குள்ளே காதில் செல்போனை வைத்துக் கொண்டு ஒருத்தன் கத்திக்கிட்டே வந்தான். “டேய் மாப்ள.ஹேப்பி கிறிஸ்மஸ்டா”
எதிர்முனைகாரன் சொன்னான் “அப்படி சொல்லி நீ எஸ்கேப் ஆக முடியாதுடோய். பார்ட்டி எப்ப.அதச் சொல்லு முதல்ல,”
“ஆமா நீ எங்கடா இருக்க”
“அண்ணாச்சி டீ கடை முன்னால வந்திரு. அங்கதான் இருக்கேன்.”
“அடப்பாவி நானும் அங்கதாண்டா இருக்கேன்”
“இங்கயா.எங்கடா.டீக்கடை பெஞ்சில ஒரு கிறுக்கன்தான் இருக்கான்”
“திரும்பிப்பாரு.மடையா உன் முதுகுக்கு பின்னாலதாண்டா இருக்கேன்”
“அடப்பாவி.இங்கதான் இருக்கியா. சரி வந்துதொலை. கொண்டாடி தீர்ப்போம்”
பார்ட்டி ரெண்டும் பார்ட்டிக்குப் போக...

குக்கரை தூக்கிட்டு ஒருத்தன் கத்திக்கிட்டே வந்தான்.
“டேய் நான் என்ன கேணப்பயல்னு நினைச்சியா. வாரேண்டா இப்ப வாரேன்.”
டீக்கடை காரன் கேட்டான் “ஏண்டே.இப்படி கோபமா கத்திகிட்டு வார”
“எப்படியெல்லாம் நம்மளை ஏமாத்துறான் பாருண்ணே.”
“அப்படி என்னடே ஏமாந்த?”
“ஒண்ணுமில்லண்ணே.ஒரு குக்கர் வாங்க போனேனா.கிறிஸ்மஸ் சலுகை விலைன்னு சொன்னான். அஞ்சு விசில் அடிச்சா அரிசி வேகும்னு சொன்னான். ஆறு விசில் அடிச்சா பருப்பு வேகுமாம். பத்து விசிலுக்கு கறி வேகுமாம். நானும் ஆசைப்பட்டு மூவாயிரம் ரூபா கொடுத்து வாங்கினேனா. வீட்டுக்கு வந்து விசில் அடிச்சி அடிச்சி பாக்கிறேன்.ஒண்ணும் நடக்கலை.சரி நாம அடிச்சிதான் வராது போலிருக்குன்னு வீட்டில ஒவ்வொருத்தரா அடிச்சி அடிச்சி பாக்கிறோம்.ஒண்ணும் ஆகல.எப்படி ஏமாத்திட்டான் பாரு.அதான் அவனை இந்த குக்கராலே மண்டைய உடைச்சிட்டு வாரேன்.” ‘மப்ல அவன் உளறிகிட்டே போக..

அந்த நேரம் பதறிக் கிட்டே இன்னொருத்தன் ஓடி வந்தான்.
“ஏண்டே இப்படி கண்ணு மண்ணு தெரியாம ஓடி வர..”
“மினி பஸ் போயிட்டாண்ணே”
“அது எப்ப வரும்னு யாருக்குத்தெரியும்”
“சே!அவசரமா போணுமே.என்ன செய்யிறது..”
“ஏண்டா. யாருக்காவது உடம்பு கிடம்பு சரியில்லயா. ஆஸ்பத்திரிக்கு போகனுமா.”
“அட போங்கண்ணே. சும்மா விளையாடிகிட்டு...”
“என்னடா இது நான் கேட்டது விளையாடும்படியாவா இருக்கு. அப்படி என்னதாண்டா உனக்கு அவசரம்”
“கிறிஸ்மஸ்க்கு தலைவர் படம் வருதில்ல. முத ஷோவில முத ஆளா பாக்கணுமில்ல.லேட்டாப் போனா டிக்கெட் கிடைக்குமா.இதெல்லாம் உனக்கு எங்க புரியும்.இந்த பஸ்காரன் எங்க போய் தொலஞ்சான்..ஏய்..ஏ ஆட்டோ...”
ஆட்டோவை விரட்டிக்கொண்டே அவனும் போய்விட..

இயேசுவைப் பார்த்து டீக்கடைகாரன் சொன்னான். “இதப்பாரு. நாலுபேரு வந்து போற இடம். டீயை குடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பு”

பாவம் அவரை அடையாளம் கண்டு கொள்வார் யாருமில்லை.


நன்றி பெ. பெவிஸ்டன்

(பரிபூரண ஐீவன் இதழ் பதிவிற்க்காக)


No comments