பாஸ்டர். மோசஸ் ராஜசேகர்


அறிந்த முகம்,அறியாத செய்தி 
பாஸ்டர். மோசஸ் ராஜசேகர்

* சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் வால்பாறையில் இருந்து சென்னையை நோக்கி கிளம்பிய புயல், பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் அவர்கள்.

* "அப்பாலே போ சாத்தானே...! அப்பாலே போ சாத்தானே..." என்ற பாடலின் மூலமும் "கிறிஸ்தவன டிஸ்டப் பண்ணாதே...! அவன அசால்டாக எண்ணிவிடாதே"
என்ற பாடலின் மூலமும் உலகெங்கும் பிரசித்தி பெற்றவர் பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் அவர்கள்.

* இவர் 31.05.1967ஆம் ஆண்டு கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை என்னும் பகுதியில் உள்ள வேர்வேல்லி என்ற மலைபிரதேச ஊரில் திரு.மோசஸ் & திருமதி. மாரியம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

* பாஸ்டர். மோசஸ் ராஜசேகர் அவர்கள், 10ஆம் வகுப்பு படித்து முடித்த சில நாட்களில் சகோதரி. பத்மா முதலியார் அவர்களின் வேதாகம கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய இறையியல் படிப்பை முடித்தார்.

* இறையியல் படிப்பை முடித்த சில வருடங்களுக்கு பின்பு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார். பின்பு நெசப்பாக்கம் பகுதியில் உள்ள Holy cross என்னும் பள்ளயில் ஆராதனை நடத்தி வந்த வேளையில், அதே பகுதியில் உள்ள சூளைப்பள்ளம் என்ற இடத்தில சொந்தமாக ஒரு இடத்தை வாங்க கர்த்தர் கிருபை செய்தார்.

* அந்த இடத்தில் குடிசை போட்டும், சுவருக்கு பதிலாக குடிசையை சுற்றிலும் சேலைகளை கட்டியும் ஆராதனை செய்து வந்தார்.

* தான் ஊழியம் செய்து வந்த இடத்தின் ஒரு மூலையில் தன் குடும்பத்தினரோடு வசித்து வந்தார்.

* பசி, பட்டினி, ஊழிய தேவைகள் என்று பல கஷ்டத்தின் மத்தியிலும் கர்த்தருக்காக ஒரு ஆலயத்தை கட்டவேண்டும்மென்று அயராது உழைத்தார்.

* தன்னுடைய 19ஆம் வயதிலேயே சக்கரை நோய் பாதிப்பு இருந்ததினால் அதிக பெலவீனம் மத்தியிலும் கர்த்தருக்காக உற்சாகமாய் ஊழியம் செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் கர்த்தர் அவருக்கு கொடுத்திருந்த பாடல் தாலந்தை பயன்படுத்த ஆரம்பித்தார் .

* பல மேடைகளிலும் , ஆலயங்களிலும் கர்த்தருடைய பாடல்களை பாடி ஆண்டவருடைய நாமத்தை உயர்த்தினார் .

* தன்னுடைய "கிருபையே தேவ கிருபையே" என்ற பாடல் சிடியை 1998ஆம் ஆண்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ சபையில் வைத்து அந்த சபையின் மூத்த போதகர்.சாம் சுந்தரம் ஐயா அவர்கள் வெளியிட்டார்கள்.

* சூளைப்பள்ளம் என்ற பகுதியில் ஊழியம் நடந்து வந்த இடத்தில இடம் பற்றாகுறையால் அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலை போலீஸ் பூத் அருகில் இருந்த ஒரு காய்கறி கடையை வாடகைக்கு எடுத்து சபையை நடத்தினார் .

* குக்கிராமங்களையும், எளியமனிதர்களையும் வெகுவாய் கவரும் "கதைப்பாடல்" வடிவத்தை இவர் பெரிதும் உபயோகித்தார்.இவர் வெளியிட்ட பாடல்கள் (CD Vol 1 to 17, MP3, DVD) கிறிஸ்தவ உலகில் ஒரு எழுப்புதலை உண்டாக்கியது.

* சாதாரணமாக எளிய மக்கள் பேசும் கொச்சை தமிழில் எழுதப்பட்ட பல பாடல்கள் அடித்தட்டு மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்பட்டன. சென்னைப் புகழ் "கானா" இசையில் இவர் மெட்டமைத்த பாடல்கள் ஒலிக்காத குப்பங்கள் இல்லையென்று சொல்லலாம்.

* வாடகை இடத்தில் ஊழியம் செய்து, பின்னர் அதையே சொந்தமாக வாங்க கர்த்தர் கிருபைசெய்தார்.

* இதற்கிடையில் 2005ஆம் ஆண்டு இரு சிறுநீரகமும் இழந்ததினால் இரத்த மாற்று அறுவை சிகிச்சை அடுத்து வந்தார். ஆனாலும் கடுகளவும் சோர்ந்து விடாமல் கர்த்தருடைய ஊழியதிற்கென்றும் , கர்த்தருக்காக ஒரு ஆலயத்தை கட்டிமுடிக்க வேண்டுமென்றும் அயராது உழைத்து வந்தார்.

* எட்டு வருடங்களில் சுமார் 2600க்கும் அதிகமான முறை இரத்தமாற்றம் சிகிச்சை செய்துக்கொண்டார்.

*2008ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பயங்கரமான போரட்டத்தை சந்தித்தார், தன் இரண்டு கண்களையும் இழந்தார். ஆனாலும் போதகர் அவர்கள் சற்றும் சோர்ந்து போகாமல் கர்த்தர் தனக்கென்று கொடுத்த ஊழியத்தை செய்துவந்தார்.

* 2011ஆம் ஆண்டு ஒரு மகிமையான ஆலயத்தை கர்த்தருக்கென்று கட்டிமுடிக்கவும் அதனை சகோதரர்.மோகன் சி.லாசரஸ் அவர்களால் திறந்து வைக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.

* இப்படி பல சோதனையின் பாதையிலும், கண்ணீரின் பாதையிலும் கர்த்தருக்காக உழைத்த போதகர் அவர்கள் 05.11.2012 ஆம் நாள் மாலை 8மணிக்கு தான் மிகவும் நேசித்த இயேசுவிடம் சேர்ந்தார் .

* போதகருக்கு ரூத் ராஜசேகர் என்ற மனைவியும், பிரியா ராஜ்குமார் மற்றும் பிலோமினா நாகுல் என்ற மகள்களும் கிங்க்ஸ்லி ராஜசேகர் என்ற மகனும் உள்ளனர்.

* இவருடைய குடும்பதிற்க்காகவும், இவர் விட்டு சென்ற ஊழியதிற்க்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

No comments