வெறுமையாய்த் திரும்பாத வேதாகமம்..


வெறுமையாய்த் திரும்பாத வேதாகமம்..

ஸ்பெயின் நாட்டில் ஒரு அம்மையார் நூதன முறையில் ஊழியம் செய்ய நினைத்தார்கள். பணம் கொடுத்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கி, அதனை தனக்கு அறிமுகமானவர்களுக்கு இலவசமாக கொடுத்து வந்தார்கள். அந்த தாயாரின் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டின் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. தூர இடங்களிலிருந்து வந்திருந்த கொத்தனார்கள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரகளில் பிரதான கொத்தனாரின் பெயர் பிரதாபன். அவர் தெய்வபயமற்ற நாத்திகவாதியாக வாழ்ந்து வந்தார். இதை அறிந்த அந்த தாயார், அவருக்காக நல்லதொரு வேதாகமத்தை வாங்கி அதில் பிரதாபனின் பெயரை எழுதி, கட்டாயம் வாசிக்கும்படியாக அவனிடம் கொடுத்தார்கள்.

நாத்திகவாதியான பிரதாபனோ, நானும் இந்த வேதாகமத்தை படிக்க மாட்டேன். மற்றவர்களையும் படிக்க விடமாட்டேன் என்று சொல்லி, தாம் கட்டிக்கொண்டிருந்த கட்டிடச் சுவருக்குள் ஒரு செங்கலுக்குப் பதிலாக பைபிளை வைத்து பூசிவிட்டார். வேதாகமத்தின் கதையை முடித்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தார். கட்டிட வேலை முடிந்து சில ஆண்டுகள் ஓடினது. அந்தப் பகுதியில் ஏற்ப்பட்ட பூமி அதிர்ச்சி காரணமாக அந்த வீடு இடிந்து விழுந்தது. அதைப் பார்வையிட வந்த அரசு அதிகாரி, செங்கற்களின் நடுவே இருந்த பரிசுத்த வேதாகமத்தைக் கண்டு வியந்து போனார். அதை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க ஆரம்பித்தார். வேத வசனங்கள் அவருடைய உள்ளத்தில் பாய்ந்தன. அந்த வசனங்கள் அவருக்குள் பலத்த கிரியை செய்ய ஆரம்பித்தன. கிறிஸ்துவின் திருப்பணிக்காய் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். பின்னர் வேதாகம சங்கத்தில் சேர்ந்து பரிசுத்த வேதாகமத்தை பிறருக்கு கொடுத்து ஊழியம் செய்யத் தொடங்கினார்.

ஒரு நாள் அவ்வாறு பரிசுத்த வேதாகமத்தைக் கொடுக்க செல்கையில், நாத்திகவாதியான பிரதாபனைக் கண்டார். அவர் நிலநடுக்கத்தால் அனைத்து பொருட்களையும் வீட்டையும் இழந்திருந்தார். பிரதாபனிடம் ஆறுதலாக பேசிய பிறகு தன்னிடமிருந்த பரிசுத்த வேதாகமத்தைக் கொடுத்தார் அந்த ஊழியர். வேதகமதைக் கண்ட பிரதாபனுக்கு பழைய செயல்கள் நினைவிற்கு வந்தது. “பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயார் எனக்கொரு வேதாகமத்தைக் கொடுத்தார்கள். அப்போதிருந்த வெறுப்பில் கட்டிட சுவரில் செங்கலுக்கு பதிலாக அதை வைத்துப் பூசிவிட்டேன்” என்ற அந்த ஊழியரிடம் நடந்தவற்றைக் கூறினார் பிரதாபன்.

கட்டிட இடிபாடுகளிலிருந்து தமக்கு கிடைக்கபெற்ற வேதாகமத்தை எபோழுதும் தமது பையிலேயே வைத்திருப்பார் அந்த ஊழியர். பிரதாபன் வைத்து பூசிய வேதாகமம், ஒருவேளை தமது வேதாகமமாக இருக்கலாம் என்று எண்ணிய ஊழியர், தமது பையிலிருந்த வேதத்தை எடுத்து பிரதாபனிடம் காண்பித்தார். அந்த வேதாகமத்தின் முதல் பக்கத்தில் “பிரதாபன்” என்று அந்த தாயார் எழுதிய பெயர் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து நின்றார் பிரதாபன். நிச்சயமாகவே தேவன் இருகின்றார் என்று சொல்லி இயேசு கிறிஸ்துவிடம் தமது வாழ்கையை அர்ப்பணித்தார். பின்னர் இருவரும் நண்பர்களாகி மிகச்சிறந்த ஊழியர்களாக மாறினார்கள்.

“என் (தேவன்) வாயிலிருந்து புறப்படும் வசனமும்.. வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” ஏசாயா 55:11.

No comments