நரக பாதாள TV செய்திகள்

நரக பாதாள TV செய்திகள்
**********************************
செய்திகள் வாசிப்பது கள்ளத்தீர்க்கதரிசி!
முக்கிய நரக பாதாள செய்திகள்.
தலைவர் லூசிபர் ரோம் நகரத்திற்கு திடீர்  பயணம்.
நரக பாதாளத்தின் தூதர்கள் பூமியின் பல இடங்களில் அதிரடி தாக்குதல்கள்.
நரக பாதாளத்தின் வருகை பதிவேட்டில் என்றுமில்லாத புதிய சாதனை.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்'து'மஸ் கோலாகல கொண்டாட்டம்; பாதாள தூதர்களும் குட்டிப் பிசாசுகளும் கலக்கம்.
விரிவான செய்திகள்:
உலகத்தின் அதிபதியும் நமது நரக பாதாளத்தின் தலைவருமான Dr.லூசிபர் ரோம் நகரத்திற்கு நேற்று நடு இரவில் திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம் உலக நாடுகளின் அரசியலிலும் ஜனங்களின் அன்றாட வாழ்க்கையிலும் பல திடீர் மாற்றங்கள் விபரிதமாக உண்டாகலாம் என்று நமது நரக பாதாளத்தின் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் அவருடைய இந்த பயணம் மர்மமாகவே உள்ளது. "இந்த பயணம், பூமியில் நேரிடப்போகிற நமது தலைவரின் 7வருட உபத்திரவகால ஆட்சிக்கு ஒரு இரகசியமான ஆரம்பம்" என்று நம்முடைய ராஜதந்திரியும் கிறிஸ்தவர்களை வஞ்சித்து இருளுக்குள் தள்ளுகிறவருமான Rev.ஒளியின் தூதன் வேஷம் தரித்தவர் அறிவித்திருக்கிறார்.

இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவில் நம்முடைய நரகபாதாளத்தின் தூதர்கள் பூமியில் பல இடங்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள். பொல்லாப்பு உண்டாக்கும் ஆவிகள் பூமியின் பல இடங்களில் யுத்தங்களையும், வெடிகுண்டு நாசவேலைகளையும் உண்டாக்கி ஐனங்களைப் பீதியடையச் செய்திருக்கிறார்கள். எரிச்சலின் ஆவிகள் ஏராளமான குடும்பங்களில், விசேஷமாக கிறிஸ்தவகுடும்பங்களில் பகையையும் சண்டைகளையும் உருவாக்கி நிலைகுலையச் செய்திருக்கின்றார்கள். வேசித்தன ஆவிகள் சினிமா, TV, Internet, மற்றும் ஆபாச புத்தகங்கள் மூலம் பலகோடி இளைஞர்கள், வாலிபப் பிள்ளைகள் மட்டுமில்லாமல் முதியவர்களையும்கூட பாவங்களுக்குள் தள்ளி வீழ்ச்சியடையச் செய்திருக்கிறார்கள். கனநித்திரையின் ஆவிகள் ஏராளமான கிறிஸ்தவர்களை ஜெபிக்க முடியாத அளவிற்கு தூக்கத்தை உண்டாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சாதனை நம்முடைய நரகபாதாளத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று நமது Director Mr.வஞ்சக ஆவி தெரிவித்திருக்கி்றார். நமது விசேஷ அதிகாரி (Special Hell officer) திரு.அந்திக்கிறிஸ்துவின் ஆவி அநேகம் பண ஆசை உள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்கு தீர்க்கதரிசனங்களையும் பொய்யான அற்புதங்களையும் கொடுத்து கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களைக் கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடையாதபடி செய்து ஒரு அந்தகார இருளுக்குள் அடைத்து வைத்திருக்கிறார். தலைவர் லூசிபர் இவரை வாழ்த்தி பாதாள மெடல் ஒன்றையும் பாராட்டுப் பத்திரம் ஒன்றையும் வரும் புத்தாண்டு தினத்தன்று கொடுத்து கௌரவிக்க இருக்கிறார்.
விளம்பர இடைவெளிக்குப் பிறகு செய்திகள் தொடரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஏராளமான பொய் விளம்பரங்களை உண்டாக்கி ஜனங்களுக்குள் வீண் செலவுகளையும் பணஆசை பொருளாசைகளையும் உண்டாக்கி குடும்பங்களுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தி நிம்மதியைக் கெடுத்துவிடுங்கள். விளம்பரங்கள் என்ற பெயரில் ஆபாசமான எண்ணங்களை உருவாக்கும் காட்சிகளை இரகசியமாக திணித்து விடுங்கள். இத்தகைய விளம்பரங்களை பூமிக்கு எடுத்து சென்று ஜனங்களை வஞ்சிக்க திறமையான ஏஜண்டுகள் தேவை. திறமை உள்ள பாதாளத்தின் தூதர்கள் எங்களை அணுகலாம்.
Post Box No. 666
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  மீண்டும் செய்திகள் தொடர்கின்றன.
நரக பாதாளத்தின் வருகை பதிவேட்டில் என்றுமில்லாத அளவு இந்த ஆண்டில் ஒரு சாதனையை நமது நரக பாதாள தூதர்கள் படைத்திருக்கிறார்கள். ஒரு நாளில் 200000 பேர் பூமியில் மரிக்கிறார்கள். இவர்களில் 190000 பேர் நமது பாதாள உலகிற்கு வந்துவிடுகின்றனர். இந்த வருடத்தில் நமது நரக பாதாள பதிவேட்டில் 69350000 பேர் பதிவாயிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டின் சாதனையைவிட 15.5% கூடுதலாகும். "வரும் ஆண்டில் இந்த சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்துவோம்" என்று இன்று பாதாள உலக சபையில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்து பிறந்ததை நினைவுகூரும் வகையில் 'கிறிஸ்மஸ் விழாக்கள்' குதுகுலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனால் நரக பாதாளத்தின் அநேகம் தூதர்களும் லேகியோன்களும்  கலக்கமடைந்திருக்கிறார்கள். "இந்த கலக்கம் தேவையற்றது" என்று நமது வெளிநாட்டு தூதர் Mr.வேறொரு இயேசு அறிவித்திருக்கிறார். அவர் தம்முடைய செய்தியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்: "இயேசு கிறிஸ்து ஒரு மனிதனுடைய இருதயத்தில் பிறக்காத வரைக்கும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மறுபடியும் பிறக்காத ஒரு கிறிஸ்தவனாலோ அல்லது மறுபடியும் பிறக்காத இரட்சிக்கப்படாத கிறிஸ்தவர்களின் ஊழியங்களினாலோ நமக்கு எந்த இழப்போ நஷ்டமோ ஏற்படப்போவதில்லை" என்றும் அவர் ஆவேசமாக சூழுரைத்திருக்கிறார்.

இத்துடன் இந்த நரக பாதாள செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் செய்திகளை 2019 டிசம்பரில் இதே நாளில் இதே நேரத்தில் கேட்கலாம். வணக்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இந்த உலக வாழ்க்கை நிரந்தரமற்றது. நமது நிரந்தரமான வாழ்க்கை பிசாசுகளோடு வேதனையான நரகத்திலா? அல்லது கிறிஸ்துவோடு சந்தோஷமான பரலோகத்திலா? கலாத்தியர் 5:19-21 ல் சொல்லப்பட்ட பாவங்களில் ஒன்று நம்மில் காணப்பட்டாலும் பரலோகத்தை இழக்க நேரிடும். உபவாச ஜெபத்தை ஏறெடுங்கள். தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். சாத்தானின் தந்திரங்களை முறியடியுங்கள். ஜீவபாதையைப் பற்றிக்கொள்ளுங்கள்.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

No comments