middle ad

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

பாஸ்டர். பெவிஸ்டன்

ஹாய்... உங்கள் யாவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன். எல்லாரும் சுகமாயிருக்கிறீர்களா? அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் எல்லாரும் எப்படியிருக்கிறாங்க? நான் விசாரித்ததாக மறக்காம சொல்லிருங்க. ஓக்கே... இந்த புதிய கல்வியாண்டு உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற நாங்கள் ஜெபித்து வருகிறோம். நீங்களும் ஜெபத்தோடு ஆயத்தப்படுங்கள். வெற்றி உங்களுக்கே.

அண்ணா.. சும்மா பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணாம கதைக்குள்ள வாங்கனு சொல்லுறது எனக்கு நல்லாவே தெரியுது. வாங்க கதைக்குள்ள போகலாம்.

பகலின் குளிர்ச்சியான வேளை. ஆசிரியர் ஒருவரை ஒரு மாணவன் வந்து சந்திக்கிறான்.

''ஐயா, ஒரு மாணவன் அல்லது மாணவி எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு ஆசிரியர், வெரிகுட் சூப்பரான ஒரு கேள்வி கேட்டிருக்கிறாய். இங்கே உட்காரு என கூறிக்கொண்டே இருவரும்  பள்ளி வளாகத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்தனர். பின்பு ஆசிரியர் அந்த மாணவனிடம் ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். அப்புறம்...  உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சார்..'' என்றான்.
''கொக்கு, ஆற்றங்கரையில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் கச்சிதமாக பிடித்து விடும். அதுபோல தான், ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று  மாணவன் கேட்க, ஆசிரியர் ''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

''அடுத்தது.. உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''
''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது தன்னை மறைத்து பிறருக்கு சுவை கொடுக்கும். உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் இந்த இளையோர் சமுதாயத்தில் தன்னை மறைத்து அதாவது தாழ்மையுள்ள சிந்தையோடு கிறிஸ்துவின் செயல்களை பிரதிபளித்து பிறர் வாழ்வில் சுவை கொடுக்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி ஐயா.. உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... என்னை போல ஏன் பிறர் இருக்க வேண்டும்? அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ,  அல்லது தன் நலன் மேல் அக்கறை கொண்ட ஒருவரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். நீ இப்பொழுது அதை சரியாக செய்தாய். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் ஆசிரியர்.
அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி கூறினான்.

அன்பான தம்பி.. தங்காய்.. கதை எப்படியிருந்தது? இந்த புதிய கல்வியாண்டில் கொக்கினை போல வாய்ப்பை சரியாய் பயன்படுத்துங்கள். கோழியை போல சரியானதை மட்டும் உள்வாங்கி கொள்ளுங்கள். உப்பினை போல உங்களை மறைத்து இறைச்சுவை கொடுங்கள். இறுதியாக உங்கள் மனதில் அவ்வப்போது எழும் சந்தேகங்கள், கேள்விகளை சரியான நபர்களிடத்தில் கேட்டு பதிலை, ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள். இவைகளை சரியாய் கடைபிடித்தால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். விடுதலை சத்தியம்.

இப்பகுதி குறித்த உங்களது மேலான கருத்துக்களை 9750381784 எண்ணிற்கு பண்ணுங்க. அடுத்த இதழில் விறுவிறுப்பன கதையோடு உங்களை சந்திக்கிறேன்.

Similar Videos