middle ad

சிறுவர் பகுதி

தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
பாஸ்டர்.பெவிஸ்டன்

ஹாய்.. வாங்க.. வாங்க.. எல்லாரும் எப்படியிருக்கிறீங்க? காலாண்டு எக்ஸாம் நெருங்கிடுச்சு.. உங்களுக்காக ஜெபிக்கிறோம். நீங்களும் ஜெபத்தோடும் மகிழ்ச்சியோடும் சூப்பரா எக்ஸாம் எழுதுங்க.. ஓக்கே... இன்றைக்கு ஒரு சூப்பரான கதை சொல்ல போறேன். கவனமா கேட்கனும் சரியா? வாங்க கதைக்கு போகலாம்...

ஒரு மனிதனுக்கு மீன்கள் வளர்ப்பதில்
அதிக ஆர்வம். தனது வீட்டு வாசலிலேயே பெரிய தொட்டி ஒன்றைக் கட்டி அதில் ஏராளமான மீன்களை வளர்த்து வந்தான்.
மீன்களுக்கு சரியான நேரத்தில் உணவு இடுவது, அவ்வப்போது தண்ணீரை சுத்திகரிப்பது, தேவைக்கேற்ப மருந்துகள் தருவது, மீன்கள் நன்றாக வளர்ந்து பெருகுவதற்கேற்ற சூழ்நிலையை எப்போதும் கவனித்துக் கொள்வது என்று எல்லா வகையிலும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். மாதம் ஒரு முறை அதை வந்து பரிசோதிக்க 
ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்திருந்தான். மீன்களும் நன்றாக வளர்ந்து பெருகின.

ஒரு நாள் அவன் பதற்றமாக மருத்துவரிடம் ஓடி வந்தான். ஐயா, ஓரிரு நாட்களாக மீன் தொட்டியில் மீன்களின் அசைவையே காணவில்லை. சில மீன்கள் காணாமல் போயிடுச்சு.. கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா டாக்டர்? என்றான். மருத்துவருக்கு ஒரே வியப்பு.
இத்தனை கவனமாக இருக்கின்ற ஒரு இடத்தில் இப்படியெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லையே... மீன்கள் ஏதேனும் வெளியே துள்ளி கிடக்கின்றனவா என்று மருத்துவர் கேட்டார். இல்லை டாக்டர்... நன்றாக பார்த்து விட்டேன். வெளியே விழ வாய்ப்பே இல்லை. அப்படியானால்... யாரேனும் திருடியிருப்பார்களோ.?  காவலுக்கு நாய்கள் இருக்கே டாக்டர்... இதை போய் திருட இவ்வளவு ரிஸ்க் எடுப்பார்களா...? அதுவும் சரிதான் என தலையை அசைத்துக்கொண்டே டாக்டர் கேட்கிறார்... தினமும் சரியான நேரத்தில் சரியான அளவில் தீனி போட்டீர்களா? தவறாமல் போட்டேனே.. தண்ணீரெல்லாம் சரியாக மாற்றினீர்களா..? அதற்கென்றே தனி வேலையாட்கள் வைத்திருக்கிறேனே..
அப்படியானால் மருந்துகளெல்லாம் சரியாக கலந்தீர்களா? போன வாரம் வரை நீங்கள் தானே வந்து கலந்தீர்கள் டாக்டர்...

மருத்துவருக்கு ஒரே குழப்பம். எல்லாமே சரியாதான் செஞ்சிருக்கீங்க...! அப்புறம் எப்படி இப்படி நடக்கும்...? சரி, எனக்குத் தெரியாமல் வேற ஏதாவது மீனை வாங்கி தொட்டியில் விட்டீர்களா...? என்று கேட்க, அவனது முகத்தில் ஒரு வெளிச்சம் வந்தது.  ஒரு வேளை போன வாரம் நான் தொட்டியில் விட்ட சின்ன முதலைதான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்கலாமோ என்று சிந்தித்தவாரே மருத்துவரிடம் கூற.. மருத்துவர் தலையில் அடித்துக்கொண்டே அதுதான் காரணம் என கூறி அவனை திட்டி தீர்த்தார்.

அருமை தம்பி தங்காய் நம்மில் பலரும் புலம்புவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்...
வாரந்தோறும் ஆலயத்திற்கு வருகிறோம். சிறுவர் வகுப்புகளில் தவறாமல் பங்கு பெறுகிறோம். பல வசனங்களை மனனம் செய்கிறோம்.. விடுப்பு எடுக்காமல், காலம் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறோம். எல்லாமே நல்லதுதான். ஆயினும் எதிர்பார்க்கிற ஆசீர்வாதம், நல்ல மதிப்பெண்கள் இல்லையே... காரணமென்ன? சில நேரங்களில் இவர்களால் நமக்கு பிரச்சனையில்லை என்று நீங்கள் சேர்த்துக்கொண்ட சில தீய நண்பர்கள் தான் உங்கள் ஆசீர்வாதங்களுக்கு தடையாக மாறிவிடுகிறார்கள். நீங்கள் கேட்கலாம்... அவர்களை போல நான் கெட்ட வார்த்தையெல்லாம் நான் பேசுவது இல்லையே... உண்மைதான். ஆனால் அவர்கள் அவர்கள் பேசுவதை நீங்கள் கேட்கும் போதே உங்களை அறியாமல் உங்களது சிந்தையை அது கறைபடுத்திவிடுகிறது.

"பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்" (பிர 9 :18) என வேதம் கூறுகிறது.

நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...? கொஞ்சம் திங் பண்ணுங்க.. அழகான வாழ்வு பாழாய்போய்விடகூடாதல்லவா? சரி.. எனக்கு டைம் ஆயிடுச்சு.. உங்க கருத்துக்களை 9750381784 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.. அடுத்த இதழில் மற்றொரு சுவாரசியமான கதையோடு உங்களை சந்திக்கிறேன்.. Byeee

Similar Videos