middle ad

Kilakku vasal

எருசலேம் கிழக்கு வாசல் ஏன் மூடப்பட்டுள்ளது?

“வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” – மத்தேயு 24:34.

கிறிஸ்து பிறப்பதற்கு 572 ஆண்டுகளுக்கு முன்பு, யூத ஆசாரியர் எசேக்கியேல் உரைத்த,

“பின்பு அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே, பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப் பண்ணினார்; அது பூட்டப்பட்டு இருந்தது. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்”       – எசேக்கியேல் 44:1-2 

இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 600 ஆண்டுகள் கடந்தன. அந்த கிழக்கு வாசல் அருகே திரளான ஜனங்கள், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்பரிக்கும் காலம் வந்தது.

எருசலேமின் குடிகள் தங்கள் வஸ்திரங்களையும் தென்னங்கீற்றுகளையும் நிலத்திலே விரிக்க  ஒருவர் மகிமையோடும் துதிகளோடும் அந்த கிழக்கு வாசலை கழுதை குட்டியின் மேல் அமர்ந்தவராய் கடந்து செல்கிறார்!
“கழுதையையும் குட்டியையும் கொண்டு வந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக் கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள், அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.”                                    -மத்தேயு 21: 7-10

எருசலேமிற்குள் பிரவேசித்த இயேசு, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளி சென்று விட்டார். ஆனால் யூதர்கள் அவரை மேசியா என்று ஏற்கவில்லை.

ஏசுநாதர் சென்று 1400 வருடங்களுக்கு பிறகு எருசலேம் படையெடுக்கப்பட்டு இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.  சுல்தான் சுலைமான் எருசலேமின் மதிற்சுவர்களை சீர்படுத்த தொடங்கினார். “கிழக்கு வாசல் வழியாய் மேசியா வருவார், அவர் நிமித்தமாய் யூதர்களுக்கு சுதந்திரமும் ராஜ்யமும் அதிகாரமும் மீண்டும் தரப்படும்” என்பது யூதர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இதனை அறிந்து கலங்கிய சுல்தான் சுலைமான் எருசலேம் கிழக்கு வாசலை அடைத்து அதன் முன்பு கல்லறைகளை அமைக்க உத்தரவிட்டார். எனவே சுண்ணாம்பு கற்களால் அந்த வாசல் மூடப்பட்டது. அந்த கற்களின் மீது இஸ்லாமிய முத்திரைகள் பொறிக்கப்பட்டன. கல்லறைகள் அதன் முன் கட்டப்பட்டன. கல்லறை பகுதியை மேசியாவிற்கு (இயேசு) முன் வரும் தூதனாகிய ‘எலியா’ கடக்க மாட்டார் என்று சுலைமான் நம்பினார். ஆனால் எலியா ‘ஆரோன்’ வம்சத்தில் பிறந்தவர். ஆரோன் வம்சத்தார், யூதர் அல்லாத பிற மக்களின் கல்லறை வழியாக கடந்து செல்ல வேதம் அனுமதிக்கிறது.

அந்த வாசல் அடைக்கப்பட்டு இதோடு 500 வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்று வரை அந்த வாசல் திறக்கப்படவில்லை. சுலைமானின் செயலினால் எதிர்பாராமல் நிறைவேறிய பைபிள் தீர்க்க தரிசனத்தை அறிந்த இஸ்லாமிய தலைவர்கள் மீண்டும் அந்த வாசலை உடைத்து தீர்க்கதரிசனத்தை முறிக்க முயற்சிகள் மேற் கொண்டனர்.

1917-இல் எருசலேமை ஆக்கிரமித்திருந்த இஸ்லாமிய ராணுவ சேவகர்கள் கிழக்கு வாசலின் வழியை அடைத்து நிற்கும் பெருங்கற்களை உடைக்க நாள் குறித்தனர். அதே நாள், எருசலேமை ஆங்கிலேயர்கள் படையெடுக்க நேர்ந்தது. இஸ்லாமிய படைகள் வீழ்த்தப்பட்டு எருசலேம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது! இதுவரை அதனை திறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனம்,

“அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பது இல்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்” – எசேக்கியேல் 44:2

கி.மு 572-இல் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, கி.பி 30-இல் இயேசு கிழக்கு வாசலை கடந்தார், கி.பி 1542-இல் கிழக்கு வாசல் இஸ்லாமியர்களால் அடைக்கப்பட்டது. 2000 வருடங்களுக்கு பின் எசேக்கியேல் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறி முடிந்தது!

எருசலேமின் கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்படுமா?

“வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே” – சங்கீதம் 24:7-8

மேசியாவின் இரண்டாம் வருகை நேரிடும் போது கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்படும். எருசலேமிற்குள் சென்ற இயேசு மீண்டும் அதன் வழியாய் வெளியே வருவார். அவரது பாதங்கள் ஒலிவ மலையின் மேல் நிற்கும், அவரோடே அனேக பரிசுத்தர்களும் வருவார்கள். உலக முடிவு அன்று சம்பவிக்கும் என்று வேதம் கூறுகிறது.

“கர்த்தர் புறப்பட்டு, யுத்த நாளிலே போராடுவது போல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவ மலையின் மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவ மலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்து போம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப் போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனது போல் ஓடிப் போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்”  – (சகரியா 14:3,4,5)

வாக்கு தந்தவர் சிறந்தவர், உண்மையுள்ளவர், அவரது வார்த்தை சத்தியம்…  ஆமென்.

Similar Videos