• Sunday 3 November, 2024 03:12 AM
  • Advertize
  • Aarudhal FM
பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க ரெடியா?

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க ரெடியா?

இந்தியாவிலுள்ள அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் விவரம்: இந்திய அளவில் 6,128 காலிப்பணியிடங்களுக்கும், தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்களுக்கும் ஆள்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:விண்ணப்பதாரர் ஜூலை 1ஆம் தேதி 20 வயது நிரம்பியவராகவும், 28 வயது அல்லது 28 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ. 850 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி: ஜூலை 21ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 முதல் 17ஆம் தேதி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலுள்ள மையங்களில் அல்லது இணைய வழியில் இப்பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இறுதியான விவரங்கள் www.ibps.in இணையதளத்தில் பதிவிடப்படும்.

பயிற்சியை அடுத்து, முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்:நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழியில் மட்டும் நடைபெறும் முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுகளைத் தமிழ் அல்லது அங்கில மொழிகளில் எழுதலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.