• Monday 9 September, 2024 03:48 PM
  • Advertize
  • Aarudhal FM
சிலுவை மொழிகள் – நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்

சிலுவை மொழிகள் – நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்

( லூக்கா 23 : 43 )

இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறைந்தது.

“யூதர்களின் அரசன்” என நக்கல் தொனியுடன் ஒரு வாசகத்தையும் இயேசுவின் சிலுவையின் உச்சியில் வைத்தார்கள். அங்கே அவர் அருகிலிருந்த ஒரு கள்ளனிடம் சொன்னதே இந்த வாக்கியம்.

கேட்கத் தயாராக இருக்கிறார்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வலி மிகுந்த தருணத்திலும், அருகில் இருந்தவர்களின் உரையாடல்களை செவிகொடுத்துக் கேட்கிறார்.

சிலுவையில் உச்சியில் தொங்கிய இயேசுவைப் போன்ற வலியோ, துயரமோ நம்மைச் சந்திப்பதில்லை. அப்படியே சந்தித்தாலும், பிறருக்காய் காதுகளைத் திறந்தே வைத்திருங்கள், என்பதே இயேசுவின் செயல் சொல்லும் செய்தி.

அவமானங்கள் மன்னிக்கப்படும்
இயேசுவின் ஒரு புறம் இருந்த கள்வன் இயேசுவை நோக்கி பேசினான். அவனுடைய குரலில் கேலியும், பழியும் இருந்தது.

“நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று”

இயேசு எரிச்சலடையவில்லை. கோபமடையவில்லை. மௌனமாய் இருந்தார். இயேசுவின் மௌனம் அவருடைய பேரன்பின் வெளிப்பாடு. மரணத்தின் நுனியிலும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனமும், பலமும் வேண்டும் என்பதை இயேசு சிலுவையில் நிகழ்த்திக் காட்டினார்.

சுய பரிசோதனை வாழ்வளிக்கும்
ம‌ற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா நாம் தண்டிக்கப்படுவது முறையே. இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.

இருவருமே திருடர்கள் தான். இருவருமே சிலுவைச் சாவுக்கு தகுதியானவர்கள் தான். ஒருவனுக்கு அது தெரிந்திருந்தது. இன்னொருவனுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

தன்னை பரிசோதனை செய்ததால் கள்ளன் கூட “நல்ல கள்ளன்” எனும் அடைமொழியைப் பெறுகிறான்.

இயேசுவின் தூய்மையை உணர்தல்
“இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என ஒரு கள்ளன் மற்ற கள்ளனைப் பார்த்துச் சொல்கிறான். “இயேசு குற்றவாளி” என மறைநூலைக் கரைத்துக் குடித்தவர்கள் தீர்ப்பிட்டார்கள். இயேசுவை கூட இருந்தவனே காட்டிக் கொடுத்து காசு வாங்கினான்.

ஆனால் இயேசுவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கள்ளன் இயேசுவை குற்றமற்றவர் என சான்று பகர்கிறான். இயேசுவின் ராஜ்யத்தில் பாவிகளும், நிராகரிக்கப்பட்டவர்களும் நுழைவார்கள் என்பதன் இன்னொரு உறுதிப் படுத்துதல் தான் அது எனலாம்.

கேளுங்கள், தரப்படும்.
“இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான் அந்த க‌ள்ளன்.

தனது தவறுகள் பாவங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்வதும். தான் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் முடிவு நரகம் மட்டுமே என்பதைப் புரிவதும் மீட்பின் முதல் படி. இரண்டாவதாக, இயேசுவின் மீது வைக்கின்ற நம்பிக்கை. மூன்றாவதாக,. இறைவனிடம் தனது மீட்புக்காய் மன்றாடுவது.

ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்னும் வேண்டுதலில் தான் கள்ளனுக்கு மீட்பு கிடைக்கிறது.

தனிப்பட்ட மீட்பு
இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

முதலாவது சிலுவை வார்த்தையான, “தந்தையே இவர்களை மன்னியும்” எனும் வார்த்தையில் ஒட்டு மொத்தமாக பொதுவான ஒரு மன்னிப்பை வழங்கிய இயேசு, தனது இரண்டாவது வார்த்தையின் மூலம் மீட்பு என்பது தனிநபருக்குரியது. ஒவ்வொருவரும் தனித்தனியே மீட்பின் பாதையில் வரவேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்.

“கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?” எனும் கள்ளனின் வார்த்தைகளால் அவனுக்குள் பாவத்தைக் குறித்த அச்சமும், மீட்பின் தாகமும் இருப்பது புரிகிறது. கடவுள் மீது அவன் கொண்ட அச்சமே அவனை மீட்பை நோக்கி வழிநடத்தியது.

மீட்பு உடனடிப் பரிசு
இயேசுவை நோக்கிய விண்ணப்பம் வைக்கிறான் நல்ல கள்ளன். இயேசு, “யோசித்து சொல்றேன்” என்று சொல்லவில்லை.

“இன்றே…” என உடனடி மீட்பை அவருக்கு வழங்குகிறார். அத்துடன் நிற்கவில்லை. “என்னுடன்” என சொல்லி அந்தத் திருடனை திக்குமுக்காட வைக்கிறார் இயேசு.

பேரின்ப வீட்டில் இருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றால், அங்கே இயேசுவோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் !

அந்தக் கள்ளனைப் பொறுத்தவரை இயேசுவை அவன் சந்தித்த முதலாவது நிகழ்வு அது. முதல் நிகழ்விலேயே அவன் தனது பாவங்களை உணர்ந்து, இயேசுவிடம் மீட்புக்காக விண்ணப்பிக்கிறான்.

“அறிவிலியே இன்றிரவே உன் உயிரை எடுக்கப் போகிறார்கள்” என்று இயேசு சொன்னது போல, நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியோம். எனவே இறைவனிடம் கேட்பதில் தாமதம் கூடாது

Thanks to Bro. Xavior