• Monday 9 September, 2024 03:23 PM
  • Advertize
  • Aarudhal FM
2020-ஐ நோக்கி . . . .

2020-ஐ நோக்கி . . . .

ஆசிரியர்: டேவின் தன்ராஜ் 

இரண்டாயிரத்து  இருபதை நோக்கி

இயேசுவின் அடிச்சுவடுகளில்

இடதுவலது என்று விலகாமல்

இனியப்பயணம் துவங்கிடுவோம்

சீர்திருத்த நாயகனாம் – இயேசுவின்

சீர்மிகுச்சீடர்களாய்

சேதாரம் சிறிதுமின்றி-இந்தியாவை

செதுக்குவோம் சத்தியத்தால்

மங்கியணையும் மனித நேயத்தை

மீண்டும் எரியச்செய்திட

மாறா கடவுளின் நற்செய்தியை

மானிடர்க்கு பகிர்ந்தளிப்போம்

அறிவியலை ஆய்வுச் செய்திட

ஆவிக்குரியவன் சளைத்தவனல்ல

அரியப் பலப்  படைப்புகளை

அள்ளித்தருவோம் மானிடருக்காய்

ஆண்டவரை அறிந்துக் கொண்ட

ஆவிக்குரியத் தலைவர்கள்

அரசியலை அழகு செய்திட

ஆர்வமுடன் உழைத்திடுவோம்

திரைப்படத் தயாரிப்பாளர் – பலர்

திருச்சபையைத் தேடி வரும்

திறமை மிகு கலைஞர்களை 

திருச்சபை வழங்கிடட்டும்

கால்டுவெல் போப்பைப் பின்பற்றிய

கலையாகிய இலக்கியத்தை

கர்த்தரின் பாதங்களுக்கு-கருத்தாய்

காணிக்கை ஆக்கிடுவோம்

பெண்களை முடக்கி வைக்கும்

பொய்களைச் சுட்டெரிப்போம்

பெண்களும் இறைச் சாயலென்று

பெருமையுடன் தோள்கொடுப்போம்

ஊடுருவிய ஊடகத்தால் – உள்ளம்

ஊனமாகியச் சிறுவர்களை 

உயிர்க் கொடுத்த இயேசுவிடம்

உண்மை வழி நடத்திடுவோம்

வாலிபர்களின் வளங்களை-சபை 

வளாகத்தில் முடக்கிடாமல்

வாழ்வுத்தரும் பல்துறைகளில்

வளர்ந்து வர உதவிடுவோம்

சாதி என்னும் பேய்களை

சபையை விட்டு துரத்திடுவோம்

சாட்சியுள்ள சமுதாயமாய்

சடுதியாய் எழும்பிடுவோம்

சூழலை கெடுக்கும் சங்கதிகளை

சபையில் சொல்லி எச்சரிப்போம்

சூழலை காப்பது கடமையென்று

சபையாருக்கு சொல்லித்தருவோம்