Rev. Adam Durai Kovilpatti

தமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்

தமிழ் பிரதேச தேவசங்க ஸ்தாபனத்தின் தங்க தலைவர்களில் ஒருவரான சங்கை ஆதாம் துரை அவர்கள் 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி நெடுவயல் அச்சம்புதூர் என்ற கிராமத்தில் திரு சீனி முத்து – திருமதி வெள்ளையம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார்.

c.m.s. சபையோடு பெற்றோர் அங்கம் வகித்த படியினால் பாஸ்டர் ஆதாம் துரை அவர்களுக்கு சிறு வயது முதல் ஆலயத்திற்கு சென்று கர்த்தரை ஆராதிக்கும் பழக்கம் இருந்தது.   1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி சங்கை ஆதாம் துரை அவர்கள் எட்வர்ட்ஸ் மிஷனரி மூலம் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

உலகின் முதல் தமிழ் வேதாகம கல்லூரி என்ற அந்தஸ்தை பெற்ற மதுரை தமிழ்நாடு வேதாகம கல்லூரியில் 1950 ஆம் ஆண்டு படிக்க சென்றார்கள். 1953 ஆம் வருஷம் மார்ச் மாதம் படிப்பை முடித்து, புளியங்குடி சபை பொறுப்பேற்றார்கள். 1953ஆம் வருடம் ஜூலை மாதம் 8-ம் தேதி சகோதரி குளோரி அவர்களை திருமணம் செய்தார்கள்.

1956 முதல் 1958 வரை கணக்கப்பிள்ளை வலசையில் ஊழியம் செய்தார்கள்.   1959 ஆம் வருஷம் கோவில்பட்டிக்கு வந்து சவாலாக இருந்த ஊழியத்தை பொறுப்பெடுத்து மிக சிறப்பாகச் ஊழியம் செய்தார்கள். 60 ஆண்டுகளில் சபை 5 குடும்பங்களிலிருந்து 3000 பேர் பங்கு வரும் சபையாக வளர்ச்சியடைந்தது. கோவில்பட்டியில் ஒரு பெரிய ஆலயத்தை கட்டவும், சுமார் 6 ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும் தேவன் அவர்களை பயன்படுத்தினார்.

தேவன் அவர்களுக்கு கொடுத்த நான்கு பிள்ளைகளும் பல்வேறு நிலைகளில் தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.   சங்கை. ஆதாம் துரை அவர்கள் மூன்று ஆண்டுகள் தமிழ் பிரதேச தேவசங்க சபைகளின் பொருளாளராகவும், ஒரு ஆண்டு தலைவராகவும், 22 ஆண்டுகள் உதவித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு நிலைகளில் கர்த்தருடைய ஊழியத்தை சிறப்பாக செய்து தேவசங்க ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்த சங்கை ஆதாம் துரை அவர்கள் 1.12.2019 அன்று தேவனுடைய மகிமைக்குள் பிரவேசித்தார்கள்.

பிறருக்கு உதவிசெய்வதில் பெரிதும் முன்மாதிரியானவர். நீண்ட கால சபை சரித்திரத்தில் இடம் பெற்ற இவரது வாழ்வில் தாழ்மையும், உண்மையும், தியாகமும், பரிசுத்தமும் இவரது அடையாளங்களாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான சபைகளும் ஊழியர்களும் இவர் மூலம் உருவாக்கப்பட்டு உலகின் பல இடங்களில் சாதித்து வருகின்றனர்.

ஆம் சங்கை ஆதாம் துரை அவர்கள் ஒரு சகாப்தம் என்றால் மிகையாகாது.  

Share this page with friends