இதயத்தின் விருப்பம்

Share this page with friends

உடல் உறுப்புகளில் தானாக இயங்குவது, இதயமாகும்

THE HEART IS THE FIRST ORGAN
TO FORM DURING DEVELOPMENT OF THE BODY

ஒரு தாயின் கருவில் முதலில் உருவாகும் உறுப்பு இதயமாகும்

இது உன்னதரின் அற்புத படைப்பாகும்
இங்கிருந்து பயணமாகும் இரத்தம்
உச்சி முதல் பாதம்வரை பாய்ந்தோடும்
என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகும்.

இந்த இதயத்தைப் பற்றியும்
மனித வாழ்வைப் பற்றியும்
வாழ்வுதரும் வார்த்தைகள்
பரிசுத்த வேதாகமத்தில் உண்டு

மனித இரயில்கள் ஒழுங்காக ஓடுவதற்கு
தேவன் போட்டுக்கொடுத்த இருப்புத்
தண்டவாளங்கள் அவைகள், என்று
சொன்னால் அது மிகையாகாது.

வாழும் ஒவ்வொரு இதயமும் நாவும்
இணைந்து இரயில் வண்டி போல ஓடினால்
வாழ்வு வளம் பெறும், நாடும் நலம் பெறும்

நீதியுண்டாக, நீதிமன்றத்திற்கல்ல
இருதயத்தில் விசுவாசித்தால் நீதியுண்டாகும்

இரட்சிப்புண்டாக வாயினால்
அறிக்கை பண்ண வேண்டும் – இது
நீதிபரரின் மாற்ற முடியாத ஏற்பாடு

இதைப் புதிய ஏற்பாடு தனது புத்தகத்தில் ரோமர் 10:9,10-ல் பதிவுசெய்து வைத்திருக்கிறது

வானத்தின் கீழிருக்கும் எல்லா மனுஷரும்
இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற
அறிவை அடையவும் அவர்
சித்தமுள்ளவராய் இருக்கிறார்
என்று பவுல் மூலம் பரிசுத்த ஆவியானவர்
எழுதி வைத்திருக்கிறார் (1 தீமோத்தேயு 2:4)

ரேஷன் கார்டும், ஆதார் அட்டையும்,
பாஸ்போர்ட்டும், பான்கார்டும்
வாழும் வரை தான்.

ஜீவபுஸ்தகத்தில் பெயர்
இடம் பெற்றுவிட்டால் வாழ்ந்த பின்னும்
நித்திய ஜீவனைப் பெற்று வாழலாம்

இருப்பது ஒருமுறை இதிலென்ன வரைமுறை
இதயம் இயங்கும் வரை மனசும் மாம்சமும்
விரும்பினதைச் செய்து
மனம்போல் வாழ்வேன்
என்னை யாரும் அசைக்க முடியாது என்று
மார்தட்டிப் பேசிய ஒருவன்
அசைக்கமுடியாத சிக்கலில்
சிக்கிக்கொண்டான்

இஷ்டப்பட்டபடி வாழ்ந்தவன்
திடீரென நஷ்டப்பட்டுப் போனான்

சுட்ட கோழி போல சுருண்டு
படுத்துகொண்டான், காரணம்,
தீவிரவாதம் அல்ல, திமிர்வாதம்

பாவத்தினாலும், பக்கவாதப்
பாதிப்பினாலும், பாதிப்புக்குள்ளாகி
கட்டிலில் படுத்திருந்தாலும்
கண்ணீரில்தான் மிதந்துகொண்டிருந்தான்

விருந்தும் மருந்தும்
மூன்று நாட்கள் என்பார்கள்
நான்காவது நாளையும்,
Lock Down போல
கடந்துபோகுமானால்
அகமும் முகமும் மாறும்
ஏச்சும் பேச்சும் இடம்பெறும்
வீடு சந்தைவெளியாகிவிடும்

பல மாதங்கள் அவன்
படுக்கையில் கிடந்ததால்
படுக்கையைத் தவிர
அத்தனையும் மாறிவிட்டது

வீட்டாரே சத்துருவாகிப் போனார்கள்
அனைவரின் அன்பும், பண்பும்,
நேசமணி அண்ணனின்
நேசமும் பாசமும் மாறிவிட்டது

அவமானத்தையும், நிந்தையையும்,
ஏளனத்தையும், பரியாசத்தையும்
கட்டாயக் கஷாயம்
போல குடித்துக்கொண்டு
சகாயம் இன்றி சாயும் நிழலைப் போல
சாவை எதிர்நோக்கிப் படுத்துகிடந்தான்

இயேசுவானவர் இவனது வீட்டிற்கு அருகில்
இன்னொருவர் வீட்டில்
நற்செய்திக் கூட்டம்
நடத்திக்கொண்டிருந்தார்

இனி வரும் நாட்களில் இப்படித்தான்
நாமும் நற்செய்திக்கு கூட்டம்
நடத்தவேண்டும் போல

மேடை அலங்காரத்திற்கும்
ஆடை அலங்காரத்திற்கும்

மின்னொளிப் பிரகாசத்திற்கும்
செலவு செய்வதை
சாமானிய விசுவாசிக்குச்
செலவு செய்து
காணிக்கை வாங்காமல்
ஆகாரம் கொடுத்து அனுப்பலாம்

ஆலயத்தில் நடக்காத அற்புதங்கள் எல்லாம்
வீடுகளில் நடக்கப்போகிறது
திமிர்வாதக்காரர்கள் நடக்கப்போகிறார்கள்

இயேசுவைச் சுற்றிலும்
மலர்களைத் தேடி வந்த
வண்டுகளை போல
ஜனக்கூட்டம் நிரம்பி வழிந்தது

இயேசுவானவர் நடுவீட்டில் அமர்ந்து நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருந்தார்
மரியாளைப் போல அவர் பாதத்தில் அமர்ந்து
வசனம் கேட்டுக்கொண்டிருந்தவர்களின்
கூட்டம் மிகுதியாயிருந்தது

என்னதான் வசனத்தைக் கேட்டாலும்,
மற்றவனின் விசனத்தை
விளங்கிக்கொள்ளாத
வினோதமான விசுவாசிகளும்
குற்றம் கண்டுபிடிக்க கூடியிருந்த
குள்ள நரிகளும் அங்கே
சங்கமமாயிருந்தன

படுக்கையோடு ஒருவனை
சுமந்துகொண்டு
நாலுபேர் வருகிறார்களே
நறுக்கென்று
நகர்ந்துகொள்வோம்
என்று ஒருவருக்கு கூட

சிந்தையில் உதிக்கவில்லை

உணர்வுகளை அடமானம்
வைத்துவிட்டார்களோ
என்னவோ?

தங்களது பாரங்களையே பெரிதாக
நினைத்துக்கொண்டு அவ்வப்போது
கைகளை உயர்த்தி, தாங்கள்
உயிருடன் இருப்பதை
உறுதிசெய்து கொண்டிருந்தார்கள்

எடுத்தகாலைப் பின்வைக்காத
சிங்கத்தின் கால்களை போன்ற அந்த
நாலு நண்பர்களும் அந்த திமிர்வாதக்காரனை சடுதியில்
கூரை மீது ஏற்றி,
அனுமதி கேட்காமலேயே
கூரையைப் பிரித்து தங்கள்
பக்கவாத நண்பனை பக்குவமாய்
இயேசுவின் பாதத்தில்
இறக்கிவைத்துவிட்டார்கள்

நாமாக இருந்திருந்தால்
Tension ஆகியிருப்போம்
ஆண்டவர் அதை
Mention கூடப் பண்ணவில்லை

மத்தேயு 10:8 என்ற வசனத்தின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வண்டிக்கு 108 என்று பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ?

இந்த நாலு நண்பர்களுக்கும்
பெயர் ஏதும் இல்லை எனவே
இவர்களை
ONE NOT EIGHT FRIENDS
என்று கூட அழைக்கலாம்
வழக்குத் தொடுக்க
யாருமில்லை

அவர்கள் தங்கள் அன்பையும்
விசுவாசத்தையும் கயிறுகளாக்கித்
தடுப்புச் சுவர்களைத் தகர்த்து

கூரையைத் திறப்பாக்கி
பாதிக்கப்பட்டவனை
இயேசுவின் பாதத்திற்கு முன்
இறக்கிவைத்துவிட்டார்கள்

இப்படிச் செய்வதற்கு
ஊரடங்கு ஒருபோதும்
தடையாய் இராது

பட்டுப்போன மரம் போன்ற
மக்களின் வாழ்க்கை துளிர்க்குமே
அவர்களும் ஆபிரகாமின் குமாரர்களாக,
குமாரத்திகளாக இருக்கிறார்களே!

பாதிக்கப்பட்டவனை
உற்றுப்பார்ப்பதற்கு முன்
ONE NOT EIGHT அதாவது
அவசர ஊர்தி
போல செயல்பட்ட அந்த
நாலுபேரின் பாசத்தையும்
நேசத்தையும்
விருப்பத்தையும்
விசுவாசத்தையும்
உற்றுப் பார்த்து
அதை நீதியாக எண்ணினார்

பின்னர் படுத்துக்கிடந்தவனை பரிவுடன் பார்த்து
மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது
உன் படுக்கையை எடுத்துக்கொண்டு,
உன் வீட்டுக்குப் போ என்றார்

உடனே அவன் எழுந்து தன் வீட்டுக்குப் போனான்

அங்கு கூடியிருந்த ஜனங்கள் எல்லாரும்
ஆச்சரியப்பட்டு நாம் ஒருக்காலும்
இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி,
தேவனை மகிமைப்படுத்தினார்கள்

அவனது நல்ல நண்பர்களால்
அவனது வாதையும் பாதையும்
மாறிவிட்டது

அந்த நாலு பேரின்
இதயத்தின் விருப்பம்
அன்றையதினம்
நிறைவேறிவிட்டது.
அல்லேலூயா.

(மாற்கு 2:1-12 வரையுள்ள வேதப் பகுதியில் உள்ளும் புறம்பும் சென்றபோது கண்டடைந்த மேய்ச்சல்)

சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும்
என்பதே என் இருதயத்தின் விருப்பமும், நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது
(ரோமர் 10:1)


பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்,
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends

You may also like...