அன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்

சுவிசேஷ அழைப்பு பெற்றவரா நீங்கள்?
சுவிசேஷகர் என்ற பதத்திலிருந்தே அவர் சுவிசேஷ ஊழியத்திற்கென்று வேறுபிரிக்கப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது. இரட்சிக்கப்பட்ட அனைவருக்கும் தேவன் கொடுத்த பிரதான கட்டளையம் கடமையும் சுவிசேஷம் அறிவிப்பதாகும். எனினும் சிலரை தேவன் தமது சுவிசேஷ ஊழியத்தினை செய்யும்படி பிரத்தியேகமாக அழைத்து அதற்கேற்ற கிருபைகளை வரங்களை கொடுத்து பயன்படுத்துகிறார்.
சுவிசேஷகர்களை தேவன் ஏற்படுத்திய நோக்கம் “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” (எபேசியர் 4:12) ஏற்படுத்தியுள்ளார். இந்த வசனத்தில் 5 வகை ஊழியத்தையும் தேவன் ஏற்படுத்திய காரணம் விளக்கப்பட்டு்ளது. இந்த வசனத்தை ஒவ்வொரு ஊழியர்களும் சுவிசேஷகர்களும் தங்கள் இருதயத்தில் மிக ஆழமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

சுவிசேஷகர்களின் கனிவான கவனத்திற்கு
1) உங்கள் அழைப்பையும் ஊழியத்தையும் உறுதி செய்து கொண்டு அதில் உறுதியாக நில்லுங்கள். சமயத்திற்கேற்றபடி, உங்கள் விருப்பத்திற்கேற்றபடி உங்கள் ஊழிய நிலையை மாற்றிக்கொள்ளாதிருங்கள். (இக்கரைக்கு அக்கரை பச்சை)
2) உங்கள் ஊழியத்தை நீங்கள் குறைவாக மதிப்பிடாதிருங்கள். குறைவாக மதிப்பிடுவோரை கண்டுகொள்ளாதிருங்கள். தேவனின் அனைத்து ஊழியமும் தேவராஜ்யத்தில் சமமானதே (சிறு குச்சியும் பல்குத்த உதவும் என்பதை மறந்து விட வேண்டும்)
3) முறையான பயிற்சியெடுங்கள். போதகர்கள் தான் வேதாகம கல்லூரிக்கு செல்ல வேண்டும். சுவிசேஷகர்களுக்கு இப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை இல்லை என்னும் கருத்து பரவலாக சுவிசேஷகர்கள் நடுவில் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. சுவிசேஷகர்கள் உட்பட அனைத்து தரப்பட்ட ஊழிய அழைப்பை பெற்றவர்களும் முறையான வேதாகம கல்லூரி படிப்பு (பயிற்சி) பெறுவது மிக அவசியமானது. இத்தகைய பயிற்சி உங்களுக்கு சாத்தியமில்லையென்றால் மூத்த போதகர்களிடம் சில ஆண்டுகள் அடங்கியிருந்து பயிற்சி பெறுவது நல்லது.
4) சுவிசேஷ ஊழியம் என்பதை உறுதி செய்தவுடனே உங்கள் சபை போதகரிடம் பேசுங்கள். உங்கள் சபை போதகரை மீறி அல்லது அவருக்கு தெரியாமல் ஊழியத்தில் எதையும் செய்யாதிருங்கள்.
5) இரட்சிக்கப்படதாதவர்கள் நடுவில் தான் அதிக அளவில் உங்களது ஊழியம் இருக்க வேண்டும். அந்த ஊழியத்தை உங்கள் சபையின் மூலமாகவே செய்ய பிரயாசப்படுங்கள்.
6) இரட்சிக்கப்படுகிறவர்கள் சபையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் வேத ஒழுங்கு. இந்த ஒழுங்கை மாற்றாதிருங்கள். உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்ளாதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஒருவர் இரட்சிக்கப்படுகிறவரைக்கும் தான் உங்களது ஊழியம். இரட்சிக்கப்பட்டவர் சீஷராக வேண்டுமானல் கட்டாயம் ஒரு ஆவிக்குரிய சபையில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதிருங்கள்.
7) தனியாக ஒரு ஊழியம் ஆரம்பித்துவிடலாம் என்று எண்ணாதிருங்கள். உங்கள் சபை பக்திவிருத்தியடைந்து பெருகும்படி தான் தேவன் உங்களை இந்த ஊழியத்திற்கென்று அழைத்திருக்கிறார். ஆகவே உங்கள் சபையின் மூலம் ஆத்தும ஆதாய ஊழியத்திற்கென்று திட்டமிடுங்கள். கிராமங்களை தத்தெடுத்து போதகரின் அனுமதியோடு ஊழிய வாஞ்சையுள்ள சபை விசுவாசிகளோடு அங்கு சுவிசேஷ ஊழியம் செய்யுங்கள்.
8) ஊழியத்தினிமித்தம் பிற சபைகளுக்கு பிரசங்கிக்க செல்லும் முன்பு உங்கள் போதகரிடம் கூறி ஜெபித்து செல்லுங்கள். உங்கள் சபையும் உங்களுக்காக ஜெபிக்கும்போது உங்கள் ஊழியம் ஆசீர்வாதமாக இருக்கும்.
9) சுவிசேஷ ஊழியத்தில் உங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை மேம்படுத்துங்கள். பிறருடைய ஊழிய மாதிரியை தேவ அனுமதியோடு பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால் பிறருடைய நடை உடை பாவனையை பின்பற்றுவது உங்கள் மீதான நன்மதிப்பை இழக்க நேரிடும்.
10) ஊழியங்களுக்காக பிற இடங்களுக்கு செல்லும்போது ஒருவரும் உங்களை குறை கூறாதபடி நடந்து கொள்ளுங்கள். தனித்து ஜெபிக்க வரும்போது அவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது, அவர்கள் கொடுக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்வது, அவர்களது தொலைபேசி எண்களை, விலாசத்தை கேட்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். உங்களை அழைத்த சபை போதகருடைய அனுமதி இல்லாமல் அல்லது போதகர் விரும்பாத எதையும் அங்கு செய்யாதிருங்கள்.
11) உங்கள் பிரசங்கங்கள் மனதுருக்கம், தேவ அன்பு, விடுதலை, சமாதானம், பாவ மன்னிப்பு, விசுவாசம் ஆகியவைகளை மையப்படுத்தியிருப்பதாக. பிற ஊழியங்களையோ, ஊழிய ஸ்தாபனங்களையோ, போதகர்களையோ குறை கூறி உங்களது நேரங்களை வீணடிக்காதிருங்கள்.
12) நல்ல தரமான சுவிசேஷ ஊழியர்களின் மற்றும் மிஷனெரிகளின் வரலாற்று புத்தகங்களை வாசியுங்கள். தரமான சுவிசேஷ பிரசங்க குறிப்புகளை ஆயத்தம் செய்து வையுங்கள். இன்றைக்கு அவைகள் பயன்படவில்லையென்றாலும் என்றாவது அவைகள் பயன்படும் என்பதில் சந்தேகமேயில்லை.
13) சுவிசேஷ ஊழியத்தின் நிமித்தம் வரும் காணிக்கைகளில் தசமபாகமெடுத்து உங்களது சொந்த சபைக்கு கொடுக்க மறக்க வேண்டாம்.
14) சபையை விட்டு விலகி சென்று அல்லது சபைக்கு இணையாக அல்லது சபைக்கு எதிராக ஒரு கூட்டத்தை கூட்டிவிடாதிருங்கள். சுவிசேஷ ஊழியங்களில் தாராளமாக ஈடுபடுங்கள். உங்கள் முழு கவனமும் இரட்சிக்கப்படாவர்கள் மேல் தான் இருக்க வேண்டும். இரட்சிக்கப்பட்டவர்கள் அல்ல. சபை செய்ய வேண்டியதை செய்ய இடங்கொடுங்கள்.
15) சுவிசேஷகர்கள் சில தருணங்களில் ஊழியங்களினிமித்தம் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். பயண நேரத்தை முன் கூட்டியே திட்டமிடுங்கள். கூடுமானவரை பேருந்தில் பயணம் செய்வதை தவிர்த்து ரயில் பயணம் மேற்கொள்ளுங்கள்.
16) உங்கள் ஸ்தல சபை ஐக்கியத்திலும் உறவிலும் உறுதியாக இருங்கள். சபை உறவிலிருந்து என்று விலகுகிறீர்களோ அன்றே உங்கள் ஊழியத்தின் நோக்கத்திலிருந்து விலகுகிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.