• Friday 24 January, 2025 04:06 PM
  • Advertize
  • Aarudhal FM

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கைதான ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், ஞானசேகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் குண்டர் சட்டம் அவர் மீது பாய்ந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த 2 மணி நேரத்தில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொடர்ந்து இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஞானசேகரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு 6.30 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியது. இதில் லேப்டாப், ஹார்டு டிஸ்க், பட்டா கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அளித்த பரிந்துரைப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே 3 முறை ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நன்றி