30 ஜூலை 2024, 6:59 pm
கேரளத்தின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தொழிலாளி பலியானார். கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
காணாமல் போன பலரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் கேரள மாநிலத்தின் வயநாட்டை ஒட்டியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் தினமும் வேலைக்காக வயநாடு சென்று வருகின்றனர்.
அப்படிச் சென்றவர்களில் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் பலியானார். அவர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை, சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி நியூஸ்