கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டா கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் இன்று நீண்ட வரிசையில் அணிவகுத்துநின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் விழா, வாரவிடுமுறை நாட்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இன்று (டிச. 25) காலை முதலே அதிகரித்துக் காணப்பட்டது. மலைச்சாலையில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்றன.
பகல் 11 மணிக்கு மேல் வாகனங்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. கொடைக்கானலின் நுழைவுவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துநின்றன.
இதனால் கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் கொடைக்கானலுக்குள் செல்ல அதிகநேரம் பிடித்தது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பசுமைப்பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தது.
வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் காரணமாக கொடைக்கானல் பேருந்து நிலையம் சாலை, அண்ணா சாலை, கலையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோக்கர்ஸ் வாக் பகுதியில் மேகக்கூட்டங்கள் இறங்கிவந்து சுற்றுலாப் பயணிகளை தழுவிச்சென்றது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். பிரையண்ட் பூங்காவிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டம் அதிகம் காரணமாக நீண்டநேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால் இரண்டு நாட்களும் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Thanks: Hindu Tamil Isai (25 Dec 2020 19:29 pm)