இலங்கை:
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து ஐந்துவருடங்கள் கடந்தாலும் இன்னும் அதன் வடு ஆறவில்லை. தாக்குதல்களில் உயிரிழந்தோர் ஒருபக்கம் இருக்க காயமடைந்தவர்கள், அவயங்களை இழந்தோர் இன்றும் உடல், உள வேதனைகளுடன் அன்றாடம் போராடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம், கிழக்கில் சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தின ஆராதனை ஆரம்பித்து அது முடிவடைவதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது.
அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது மகனை இழந்து மாற்றுத்திறனாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த திலினா ஹர்ஷனி அண்மையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார். ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர் அவராவார்.
திலினா ஹர்ஷனி மனவலிமை மிக்க, ஆற்றல்கள் நிறைந்த பெண். எத்தகைய விமர்சனங்கள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை புன்சிரிப்புடன் எதிர்கொள்வார். நீர்கொழும்பிலுள்ள பிரபல கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். பாடசாலையில் அனைவராலும் அறியப்பட்ட நடனக்கலைஞராகவும் இருந்தார்.
அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கவில்லை. தனது மூன்று பிள்ளைகளுடன் அவருடைய வாழ்க்கை அழகாய் நகர்ந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு திருப்பலிக்காக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு சென்ற அவருக்கு எதிர்பாராத இழப்புகளும் ஏமாற்றங்களும் கிடைக்கும் என்பதை அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஒருநொடியில் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது.
அன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிறைவடைவதற்கு சிறிதுநேரமே இருந்தது. அனைவரும் உயிர்த்த இயேசுவின் திருச் சொரூபத்துக்கு முன்பாக ஆசிர்வாதத்துக்காக காத்திருந்தனர். அப்போது திலினவின் கையிலிருந்த ஆசிர்வதிக்கப்பட்ட நூல் கழன்றமையால் அதை கட்டுவதற்காக மூத்த மகனை தூக்கி தனது மடியில் அமர்த்திக்கொண்டார்.
அப்போது திடீரென ஒரு பயங்கர சத்தம், மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் அங்கும் இங்கும் ஓடினர். திலின பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அவரின் பின்னால் அமர்ந்திருந்த தாய் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். தாயார் உடனே பதறியடித்துக் கொண்டு மகளின் மற்றைய இரண்டு பிள்ளைகளையும் தேடி ஒருவழியாய் கண்டுபிடித்தார். அவர்கள் இருவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியிருந்தனர். எனினும் திலினவின் மடியிலிருந்த மூத்த மகன் உயிருடன் இருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து திலினவை தாயார் தேடியபோது அவர் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தார். உயிர் ஊசலாடிகொண்டிருந்து. அவரைச் சுற்றி இரத்த வெள்ளமாக காட்சியளித்தது. உடனே தாய் அங்கிருந்தவர்களின் உதவியுடன் திலினவை முச்சக்கர வண்டியில் ஏற்றி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்தார். 14மாதங்களின் பின்னர் இடது கண்ணை இழந்த நிலையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மீண்டு வீட்டுக்கு வந்தார் திலின, அப்போது தான் மூத்தமகன் உயிருடன் இல்லையென்பதை அவர் அறிந்துகொள்கின்றார். அவரால் அதை தாங்கிகொள்ளவே முடியவில்லை. கடைசியாக தனது மடியிலே மகனின் உயிர் பிரிந்ததை எண்ணி எண்ணி மனம் நொந்தார். எனினும் எந்த சூழ்நிலையிலும் அவர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை.
முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. படுக்கையிலேயே இருந்தார். கிட்டதட்ட 5 பெரிய சத்திரசிசிச்சைகள், 3 சிறிய சத்திரசிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டிருந்தன. இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத போதும் மற்றைய கண்ணை பாதுகாப்பதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திலினவுக்கும் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் கத்தோலிக்க திருச்சபை பெரும் பலமாக இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கரித்தாஸ் அமைப்பின் ஊடாக திலினவுக்கான பிரத்தியேக அறையொன்று நவீன வசதிகளுடன் கட்டிக்கொடுக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் திலினவுக்கு பக்கபலமாக இருந்தனர். திலினவை காப்பாற்ற போராடினர். இலங்கையிலுள்ள முன்னணி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடமும் ஆலோசனைக்காக திலினவைக் கொண்டுசென்றனர். வைத்தியர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததுடன் அதற்கு பெருந்தொகைப் பணம் செலவாகும் எனவும் தெரிவித்தார். குடும்பத்தினர் ஆரம்பத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்த போதிலும், அவருக்கு அனைத்து மருத்துவக் கட்டணங்களும் மருத்துவமனையால் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனினும் எந்தவொரு முயற்சியும் கைகூடவில்லை. நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் அவர் கடந்த 29ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்சமயம் பிள்ளைகள் இருவரும் தாத்தா, பாட்டியின் பாராமரிப்பில் இருந்து வருகின்றனர்.
திலினவின் இறந்த மூத்த மகனுக்கு அரசாங்கத்தால் வழக்கப்பட்ட நஷ்டஈட்டு தொகையையும் அவர் செலவழிக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதை ஒருகாலத்தில் பிள்ளைகள் இருவரும் எடுத்துக் கொள்ளட்டும் என்று திலின வைப்பிலிட்டதாகத் தெரியவருகின்றது. அதுமட்டுமின்றி அவருக்கு கிடைத்த உதவித்தொகையும் பிள்ளைகளுக்காக வைப்பிலிட்டதாக தெரியவருகின்றது.
எதுஎவ்வாறாயினும் திலின போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
வசந்தா அருள்ரட்ணம்