• Saturday 20 July, 2024 03:52 PM
  • Advertize
  • Aarudhal FM

ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர்

இலங்கை:

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து ஐந்துவருடங்கள் கடந்தாலும் இன்னும் அதன் வடு ஆறவில்லை. தாக்குதல்களில் உயிரிழந்தோர் ஒருபக்கம் இருக்க காயமடைந்தவர்கள், அவயங்களை இழந்தோர் இன்றும் உடல், உள வேதனைகளுடன் அன்றாடம் போராடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம், கிழக்கில் சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தின ஆராதனை ஆரம்பித்து அது முடிவடைவதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது.

அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது மகனை இழந்து மாற்றுத்திறனாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த திலினா ஹர்ஷனி அண்மையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார். ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர் அவராவார்.

திலினா ஹர்ஷனி மனவலிமை மிக்க, ஆற்றல்கள் நிறைந்த பெண். எத்தகைய விமர்சனங்கள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை புன்சிரிப்புடன் எதிர்கொள்வார். நீர்கொழும்பிலுள்ள பிரபல கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். பாடசாலையில் அனைவராலும் அறியப்பட்ட நடனக்கலைஞராகவும் இருந்தார்.

அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கவில்லை. தனது மூன்று பிள்ளைகளுடன் அவருடைய வாழ்க்கை அழகாய் நகர்ந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு திருப்பலிக்காக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு சென்ற அவருக்கு எதிர்பாராத இழப்புகளும் ஏமாற்றங்களும் கிடைக்கும் என்பதை அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஒருநொடியில் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது.

அன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிறைவடைவதற்கு சிறிதுநேரமே இருந்தது. அனைவரும் உயிர்த்த இயேசுவின் திருச் சொரூபத்துக்கு முன்பாக ஆசிர்வாதத்துக்காக காத்திருந்தனர். அப்போது திலினவின் கையிலிருந்த ஆசிர்வதிக்கப்பட்ட நூல் கழன்றமையால் அதை கட்டுவதற்காக மூத்த மகனை தூக்கி தனது மடியில் அமர்த்திக்கொண்டார்.

அப்போது திடீரென ஒரு பயங்கர சத்தம், மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் அங்கும் இங்கும் ஓடினர். திலின பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அவரின் பின்னால் அமர்ந்திருந்த தாய் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். தாயார் உடனே பதறியடித்துக் கொண்டு மகளின் மற்றைய இரண்டு பிள்ளைகளையும் தேடி ஒருவழியாய் கண்டுபிடித்தார். அவர்கள் இருவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியிருந்தனர். எனினும் திலினவின் மடியிலிருந்த மூத்த மகன் உயிருடன் இருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து திலினவை தாயார் தேடியபோது அவர் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தார். உயிர் ஊசலாடிகொண்டிருந்து. அவரைச் சுற்றி இரத்த வெள்ளமாக காட்சியளித்தது. உடனே தாய் அங்கிருந்தவர்களின் உதவியுடன் திலினவை முச்சக்கர வண்டியில் ஏற்றி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்தார். 14மாதங்களின் பின்னர் இடது கண்ணை இழந்த நிலையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மீண்டு வீட்டுக்கு வந்தார் திலின, அப்போது தான் மூத்தமகன் உயிருடன் இல்லையென்பதை அவர் அறிந்துகொள்கின்றார். அவரால் அதை தாங்கிகொள்ளவே முடியவில்லை. கடைசியாக தனது மடியிலே மகனின் உயிர் பிரிந்ததை எண்ணி எண்ணி மனம் நொந்தார். எனினும் எந்த சூழ்நிலையிலும் அவர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. படுக்கையிலேயே இருந்தார். கிட்டதட்ட 5 பெரிய சத்திரசிசிச்சைகள், 3 சிறிய சத்திரசிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டிருந்தன. இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத போதும் மற்றைய கண்ணை பாதுகாப்பதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திலினவுக்கும் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் கத்தோலிக்க திருச்சபை பெரும் பலமாக இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கரித்தாஸ் அமைப்பின் ஊடாக திலினவுக்கான பிரத்தியேக அறையொன்று நவீன வசதிகளுடன் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் திலினவுக்கு பக்கபலமாக இருந்தனர். திலினவை காப்பாற்ற போராடினர். இலங்கையிலுள்ள முன்னணி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடமும் ஆலோசனைக்காக திலினவைக் கொண்டுசென்றனர். வைத்தியர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததுடன் அதற்கு பெருந்தொகைப் பணம் செலவாகும் எனவும் தெரிவித்தார். குடும்பத்தினர் ஆரம்பத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்த போதிலும், அவருக்கு அனைத்து மருத்துவக் கட்டணங்களும் மருத்துவமனையால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் எந்தவொரு முயற்சியும் கைகூடவில்லை. நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் அவர் கடந்த 29ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்சமயம் பிள்ளைகள் இருவரும் தாத்தா, பாட்டியின் பாராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

திலினவின் இறந்த மூத்த மகனுக்கு அரசாங்கத்தால் வழக்கப்பட்ட நஷ்டஈட்டு தொகையையும் அவர் செலவழிக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதை ஒருகாலத்தில் பிள்ளைகள் இருவரும் எடுத்துக் கொள்ளட்டும் என்று திலின வைப்பிலிட்டதாகத் தெரியவருகின்றது. அதுமட்டுமின்றி அவருக்கு கிடைத்த உதவித்தொகையும் பிள்ளைகளுக்காக வைப்பிலிட்டதாக தெரியவருகின்றது.

எதுஎவ்வாறாயினும் திலின போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வசந்தா அருள்ரட்ணம்

ஈஸ்டர் சன்டே கிறிஸ்துவர்களை சந்தித்த கேரள பாஜக : சி.பி.எம், காங்கிரஸ் எச்சரிக்கை

பாஜகவின் இந்த முயற்சி முக்கிய கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே என்று கூறியுள்ள எதிர்கட்சிகள், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை பற்றி கேள்வி எழுப்பியுள்ளன.

Kerala BJp
கேரளா பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்துவர்களுடன் சந்திப்பு

ஈஸ்டர் சன்டே நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களிடடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஒரு இடத்தை பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா பாஜகவின் முக்கிய தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளையும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ மக்கனை சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கியது.

பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், பிரதமர் நரேந்திர மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பாஜகவினர், சமூக வலைதளங்களில், பாஜகவின் பல்வேறு அதிகாரப்பூர்வ பக்கங்களில், உயிர்த்தெழுந்த இயேசுவின் படங்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகளால் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் கேரளா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் இரண்டு பிஷப்களை சந்தித்தார், மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் திருவனந்தபுரம் பேராயத் தலைவர் தாமஸ் ஜே நெட்டோவுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். கண்ணூரில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லாகுட்டி, மூத்த தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் உடன் தலச்சேரி பேராயர் ஜோசப் பாம்ப்ளனியை சந்தித்தார்.

பாஜகவின் இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை மதக் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் வலுவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவாவில் நல்லாட்சியின் பலன்களை கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் பார்த்து வருவதாக, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இதேபோன்ற மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஈஸ்டர் நாளில், கேரளாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த கிறிஸ்தவக் குழுவான கத்தோலிக்கர்கள் மட்டுமே பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபையானது “லவ் ஜிஹாத்” க்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தது, இது கத்தோலிக்க திருச்சபையையும் சங்க பரிவாரத்தையும் சமீபத்திய வெளிப்பாட்டிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நெருக்கமாக கொண்டு வந்தது.

இருப்பினும், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் பாசெலியோஸ் மார்தோமா மேத்யூஸ், பாஜகவின் கிறிஸ்தவப் பணியை மறுத்துள்ளார். “ஈஸ்டர் தின வருகையால் பாஜக மீதான கிறிஸ்தவர்களின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. நாட்டில் தேவாலயங்கள் தாக்கப்பட்டபோது, பாஜக அதைக் கண்டுகொள்ளவில்லை. இது அந்தத் தாக்குதல்களை கட்சி அமைதியாக ஆதரித்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அடுத்த லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு சங்பரிவாரின் பரப்புரைத் திட்டம், வடக்கில் உள்ள தேவாலயங்கள் மீதான இந்து வலதுசாரிகளின் தாக்குதல் சம்பவங்களைத் தூண்டிய ஆளும் சிபிஐ (எம்) (CPI(M) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் இந்தியாவிற்கு உள் நாட்டு அச்சுறுத்தல்களாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. தற்போது சிறுபான்மையினரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் முயற்சி சிரிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் “கடந்த கிறிஸ்துமஸின் போது, நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பரவலான தாக்குதல்களை எதிர்கொண்டனர். வட இந்தியாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் முழுமையாக முடிவடையாத நேரத்தில் கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். அறிவொளி பெற்ற கேரள மக்கள் பாஜகவின் அணுகுமுறையை உணர்ந்து கொள்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சங்பரிவாரின் அரசியலின் ஆபத்துக்களை உணர்ந்து பிற இடங்களில் உள்ள கிறிஸ்தவ குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கியதாக சிபிஐ(எம்) கூறியது. “பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சங்பரிவார் பயன்படுத்திய மிரட்டல் மற்றும் தூண்டுதல், இப்போது கிறிஸ்தவப் பிரிவினரை அதன் மடியில் கொண்டு வர பயன்படுத்தப்படுகிறது. பாஜக தலைவர்களின் பிஷப்புகளுடனான சந்திப்பு அதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அக்கட்சி கூறியது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், பிஜேபி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனால் சிறுபான்மை சமூகத்தின் மீதான அதன் “புதிய காதல்” அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். “நூற்றுக்கணக்கான தேவாலயங்களில் வழிபாட்டை பாஜக சீர்குலைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் சங்க பரிவார் அமைப்புகள் ஏராளமான தேவாலயங்களை சேதப்படுத்தியுள்ளன.

சங்பரிவார் தாக்குதலில் இருந்து பாதுகாப்புக் கோரி, பல கிறிஸ்தவ அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் கேரளாவில் கிறிஸ்தவ இல்லங்களுக்குச் செல்கின்றனர். கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வலையில் சிக்க மாட்டார்கள். கேரளாவில் பாஜக மிகப்பெரிய இந்துத்துவா பிரச்சாரத்தை நடத்தியது, ஆனால் மாநிலத்தில் 90% இந்துக்கள் அதற்கு எதிராக உள்ளனர், ”என்று அவர் கூறினார்.