மணிப்பூரில் பூர்வ இன கிறிஸ்தவ அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்
மணிப்பூரின் 32 இலட்ச மக்களில், 53 விழுக்காட்டினர் இந்துக்கள், பெரும்பாலும் மெய்தி இனத்தவர். 41 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் குக்கி-சோ பூர்வ இனமக்கள்.
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள பூர்வ இன கிறிஸ்தவ அமைப்பு, இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அதன் அலுவலகம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தக் கொடூரமான செயல்களை எங்கள் அமைப்பு சகித்துக் கொள்ளாது என்றும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் வெளியே வந்து பிரச்சனையை விரைவில் தீர்க்கும் வரை எங்கள் அமைப்பு தனது போராட்டத்தை நிறுத்தாது என்றும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக உரைத்துள்ளது அச்செய்தி நிறுவனம்.
பூர்வ இனக் கிறிஸ்தவர்களின் கோட்டையாகக் கருதப்படும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறைச் செயலுக்குப் பூர்வ இன சோமி சமூகத்தின் மாணவர் அமைப்பும் (ZSF) கண்டனம் தெரிவித்துள்ளது என்றும், எதிர்வரும் காலத்தில் இதுபோன்று தாக்குதல்கள் நடந்தால் இவ்வமைப்பு அதனை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் அது எச்சரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது அச்செய்திக்குறிப்பு.
மார்ச் 17, இஞ்ஞாயிறு இரவு சூராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ளபூர்வ இன மக்களின் தலைவர் மன்றத்தின் (ITLF) அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கணினிகள் மற்றும் ஆவணங்களை அழித்துள்ளனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத தலத்திருஅவையின் தலைவர் ஒருவர் கூறியதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
மேலும் அதே இரவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பூர்வ இன கிறிஸ்தவ மக்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் Pu Ginza Vualzong அவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் அவரது இல்லத்தை கும்பல் ஒன்று தாக்கியதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.