• Tuesday 10 December, 2024 12:13 AM
  • Advertize
  • Aarudhal FM

மோடி 3.0 அமைச்சரவையின் ‘கேரள சர்ப்ரைஸ்’ – பாஜகவின் கிறிஸ்தவ முகம் ஜார்ஜ் குரியனின் பின்புலம்

கோட்டயம்: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் கேரள பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படும் ஜார்ஜ் குரியனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேரளாவில் இருந்து 2 பேர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் நடிகர் சுரேஷ் கோபி அமைச்சராக இடம்பெற்ற நிலையில், சர்ப்ரைஸாக கேரள பாஜகவின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

யார் இந்த ஜார்ஜ் குரியன்? – கேரளாவில் பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படுபவர் இந்த ஜார்ஜ் குரியன். கோட்டயத்தை சேர்ந்த இவர், தற்போது கேரள பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். வழக்கறிஞரான இவர், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்பதால் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நபரும் கூட.

மேலும், கேரளாவில் பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவர்களின் பேச்சுக்களை மொழிபெயர்ப்பதும் இவரே. 1980-ல் இருந்தே பாஜகவில் இருக்கும் இவர், பாரதிய யுவ மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளர், பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இந்த சமயத்தில் கேரளத்தில் கிறிஸ்தவ பெண்கள் காதல் திருமண விவகாரத்தில் லவ் ஜிஹாத் செய்யப்படுகிறது எனக் கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இவர், 2006-ல் புதுப்பள்ளி தொகுதியில் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், தொடர்ந்து தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் குரியன் இடம் பெற்றிருப்பது, கிறிஸ்தவ சமூகத்துடன் பழகுவதற்கான பாஜகவின் மற்றொரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், குரியன் கேரளாவின் மிக முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்.

சமீப காலமாக கேரள கிறிஸ்தவ குழுக்களின் ஆதரவை பெற பாஜக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கு பலன்களும் கிடைத்து வருகின்றன. திருச்சூரில் சுரேஷ் கோபியின் வெற்றிக்கு ஓரளவு கிறிஸ்தவர்களின், குறிப்பாக கத்தோலிக்கர்களின் ஆதரவே காரணம் என பாஜக தரப்பு சொல்கிறது. இந்த பின்னணியில் தான் தற்போது ஜார்ஜ் குரியனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.