• Sunday 3 November, 2024 04:33 AM
  • Advertize
  • Aarudhal FM

தேவன் இப்போதும் நம்மோடு பேசுகிறாரா?

இந்த கேள்வி சில தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய சிருஷ்டிகர் தம்முடைய சிருஷ்டிப்போடே எப்பொழுதும் பேசவே விரும்புகிறார். ஆம், அவர் பேசுகின்ற தேவன் (ஆதி 3 : 9 ; 6 : 13 ; 12 : 1).

நம்முடைய தேவன் ஏன் நம்மோடு பேச விரும்புகிறார், எப்படி பேசுகிறார், யார் மூலமாக அல்லது எதன் மூலமாக பேசுகிறார், பேசுகிறது அவர்தானா? என்பதை நாம் சிந்தித்து அறியவேண்டியது அவசியம்..

தேவன் ஏன் நம்மோடு பேசுகிறார்?

முதலாவது நாம் தேவனுடைய பிள்ளைகள். தகப்பன் எப்பொழுதுமே தன் பிள்ளைகளோடு பேசவே விரும்புகிறார். நம்மோடு அவர் பேசுவதன் மூலம் அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்துகொள்ள செய்கிறார். காரணம், நாம் அவருடைய சித்தத்தின்படி நடக்க வேண்டுமென அவர் விரும்புகிறார் (யோவா 10:3,4). அவர் நம்மோடு பேசுகிறபோது நாம் அவருக்கு செவி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எபி 12 : 25ல் வாசிக்கிறோம் பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்.

தேவன் எப்படி பேசுகிறார்?

தேவன் நம்மோடு நேரடியாகவே பேச விரும்புகிறார் “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபிரேயர் 1:1,2) என்று வேதம் சொல்லுகின்ற பிரகாரமாய், வார்த்தையாகிய தம்முடைய குமாரன் மூலமாகவே நம்மோடு பேசுகிறார்.

  • வேத வாக்கியங்களின் மூலமாய் நம்மோடு பேசுகிறார். 2 தீமோ 3:15-17

எழுதி கொடுக்கப்பட்ட வேதாகமம் தேவசித்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது.நாம் நன்றாய் அறிந்திருக்கிறபடி, தேவன் என்னோடு பேச வேண்டுமென ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும் போது வேத வசனத்தின் மூலமாக தேவன் நம்மோடு நேரிடையாகவே பேசுகிறார். “வேதம் தேவனின் குரலிலேயே நம்மோடு பேசுகிறது” என்றார் சி.எச். ஸ்பர்ஜன்.

நாம் ஆயத்தத்தோடே அவர் பேச காத்திருக்கவேண்டும் (சங் 119 : 148), 

தேவனோடுகூட செலவிடும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நிச்சயமாய் நமக்கு பிரயோஜனமுள்ளதாயிருக்கும் (ஏசா 48 : 17).

  • தம்முடைய தாசர்களைக் கொண்டு தேவ சமூகத்தில் கூடிவரும்போது நம்மோடு பேசுகிறார்

தேவன் நம்மோடு நேரடியாய் வேத வசனத்தின் மூலம் நம்மோடு பேசின காரியங்களை நாம் தேவ சமூகத்திற்கு செல்லும்பொழுது, தேவன் நமக்கு கொடுத்திருக்கிற மேய்ப்பர்களைக் கொண்டு நம்மோடு பேசின விஷயத்தை உறுதிப்படுத்துகிறார் (எசே 43 : 6, அப் 10 : 33)

  • தேவ பிள்ளைகளைக் கொண்டு பேசுகிறார் (அப் 18 : 26)
  • ஆவியானவர் மூலமாக நம்மோடு பேசுகிறார் (அப் 11 : 12, 28; 1கொரி 2 : 10, எபி 3 : 7)
  • ஏன் சமயங்களில் மிருக ஜீவன்களை கொண்டுக்கூட பேசுகிறாரே (எண் 22 : 30, 1சாமு 15 : 14, வெளி 5 : 13). 

ஆக, தேவன் நம்மோடு பேசுகிறார் என்பது உண்மை. 

ஆனால் தேவன் தான் நம்மோடு பேசுகிறாரா என்பதை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது (1தெச 5 : 21), ஏனென்றால் பொல்லாத சத்துருவாகிய வஞ்சகம் நிறைந்த சாத்தானும் போலியாக நம்மோடு பேசி நம்மை வஞ்சிக்க பார்ப்பான் (ஆதி 3 : 1, 1 சாமு 28 : 14 – 19, யோபு 1 : 16). 

தேவ சத்தத்தையும் சத்துருவின் சத்தத்தையும் எப்படி கண்டுபிடிப்பது ?

முதலாவது தேவசத்தம் பரத்திலிருந்து வருகிறதாயும் சாந்தமும் சமாதானம் நிறைந்ததாய் இருக்கும் (யாக் 3 : 17), சத்துருவின் சத்தமோ கேள்வியும் வஞ்சகமும் நிறைந்ததாய் இருக்கும் (ஆதி 3 : 1, 1இராஜா 13 : 18; 22 : 22, லூக் 4 : 3).

தேவன் நம்மோடு பேசும் விதங்கள்.

தேவன் நம்முடைய சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பேசுகிறார். 

  • சில நேரம் அமைதியாக பேசுகிறார்  – நம்மை கேட்கச்செய்யும்படி (1 இராஜா 19 : 12,13). 
  • சில நேரம் பொறுமையாக பேசுகிறார் – நமக்கு நம்பிக்கை உண்டாகும்படி (ரோ 15 : 4). 
  • சில நேரம் கோபமாக பேசுகிறார் – நம்மை உணர்த்தும்படி (யோபு 38 : 1). 
  • சில நேரம் எச்சரிப்பாக பேசுகிறார் – அவருக்குப் பிரியமில்லாததையும் பொல்லாங்கையும் விட்டுவிலகும்படி ( ஆதி 31 : 24, யாத் 19 : 12; 23 : 21, உபா 4 : 23, 6 : 12; 8 : 17, 2இராஜா 6 : 10, மத் 16 : 6, லூக் 11 : 35; 12 : 15; 21 : 8..).

இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து போகும் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார் என்னே தேவனுடைய அன்பு!

தேவன் நம்மோடு பேசினவற்றுக்கு நாம் கீழ்ப்படியும் போது நமக்கு என்ன நன்மைகள் உண்டாகிறது?

  • இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறோம் (அப் 8 : 30 – 38).
  • தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறோம் (ஆதி 6 : 22 – 7 : 1, 9 : 1 ; 22 :17, 18)
  • ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறோம் (சங் 19 : 7, நீதி 4 : 11).
  • தேவ சாயலைப் பெற்றுக்கொள்கிறோம் (யோவான் 1 : 39, 46; 4 : 29, 11 : 34; மாற் 14 : 70).
  • தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொள்கிறோம் (பிலிப் 4 : 9).
  • தேவ கிருபையைப் பெற்றுக்கொள்கிறோம் (யாக் 4 : 4 , 5).
  • பரலோக வாழ்வின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்கிறோம் (மத் 7 : 21).

நிறைவாக

நாம் வேதத்தின் அடிப்படையில் சிந்தித்தபடி, தேவன் இப்போது மட்டுமல்ல எப்போதும் நம்மோடு திட்டமும் தெளிவுமாய் பேசுகின்ற ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். 

ஆகவே, ஆபத்து நிறைந்திருக்கிற, அடுத்து என்ன என்கிற பயம் சூழ்ந்திருக்கிற, கவலைகளும் கஷ்டங்களும் நெருக்கித் தள்ளுகிற இந்த போராட்டமான வாழ்வில் நாம் சமாதானத்தோடு நம் இலக்கை அடையவேண்டுமானால், நம்மோடு பேசுகின்ற தேவனாகிய கர்த்தருக்கு நாம் செவி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். 

வேதத்தில் அநேகர் தேவ சத்தத்திற்கு செவி கொடாமல் வழி விலகிச் சென்று தேவ ஆசீர்வாதத்தை இழந்தது மாத்திரமல்லாமல், அதற்குரிய விளைவுகளையும் பெற்றுக் கொண்டதை நாம் கவனமாய் பார்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தேவ பிள்ளைகளே, தேவன் இன்றும் நம்மை நேசிக்கிறார் நம்மில் அன்பு கூறுகிறார் நம்மோடு இடைபட விரும்புகிறார். நம்மோடு பேசுவது அவர் உரிமை; அதைக் கவனித்துக் கேட்டு அதன்படி செயல்பட வேண்டியது நம்முடைய கடமை.

ஆகவே, இப்போதும் நம்மோடு பேசுகின்ற உயிருள்ள தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுத்து அவர் சித்தம் செய்வோம், அவருடைய பரிசுத்த நாமம் என்றென்றும் மகிமைப்படுவதாக. ஆமென். 

S. ஜெயச்சந்திரன்

சகோதர சுவிசேஷக் கூடம் – மதுரை