போபால்: தன் கர்ப்பகால நினைவுகள் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு, ‘பைபிள்’ என்று பெயரிட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து பதிலளிக்கும்படி அவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், 42, பிரபல நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்தார். தான் கர்ப்பமாக இருந்தது தொடர்பாக, கரீனா கபூர் ஒரு புத்தகத்தை எழுதினார்.
கடந்த 2021ல் வெளியான இந்த புத்தகத்தில், தன் அனுபவங்களுடன், தாயாக தயாராகும் பெண்களுக்கு பல ஆலோசனைகளை அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த, கிறிஸ்டோபர் ஆன்டனி என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘கரீனா கபூர் தன் புத்தகத்தின் தலைப்பில், பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். புனித நுாலாக கருதும் கிறிஸ்துவர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இது அமைந்துள்ளது. அதனால், புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மனுவில் அவர் கூறிஉள்ளார்.
முன்னதாக இது குறித்த புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகவும், கீழமை நீதிமன்றங்கள் அதை விசாரிக்க மறுத்ததாகவும் அவர் மனுவில் கூறிஉள்ளார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.