- 39
- 20250905
மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

மதம் மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற அதிமுக பெண் கவுன்சிலரின் தலைவர் பதவியை பறித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக் கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேரூர் பேரூராட்சியில் 2022-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானேன். பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த தேர்தலில் 2-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதாராணி வெற்றி பெற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். 2005-ம் ஆண்டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து, கிறிஸ்தவரை திருமணம் செய்தவர். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வேறு மதத்துக்கு மாறினால், அவர் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது.
இந்நிலையில், கிறிஸ்தவரான அமுதாராணி, தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இது சட்டவிரோதமானது. எனவே, தேரூர் பேரூராட்சித் தலைவராக உள்ள அமுதாராணியின் பட்டியலின சாதிச் சான்றிதழை ரத்து செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கௌரி விசாரித்து, “இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.
ஒருவர் ஒரே நேரத்தில் இரு சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. இது அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயலாகும். எனவே, அமுதாராணி தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமுதாராணி மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது
இந்த வழக்கின் உண்மையான பிரச்சினை அமுதாராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்கிறாரா, அவர் ஞானஸ்நானம் பெற்றாரா என்பதுதான். மனுதாரர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்துக்கு மாறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும்.
ஆனால், ஞானஸ்நானத்துக்குப் பிறகு புதிய அடையாளத்தை மறைத்து, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கும் நோக்கத்துக்காக, பட்டியல் இன சமூக நிலையில் தொடரும்போது சிக்கல் ஏற்படுகிறது.
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி உள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.