• Wednesday 17 December, 2025 01:39 AM
  • Advertize
  • Aarudhal FM

சாத்தான்குளம் கிணற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்களுக்கு கனிமொழி அஞ்சலி! கதறிய உறவினர்கள்

சாத்தான்குளத்தில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (18/05/2025) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.

உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த 5 பேரின் சடலங்களுக்கும் கனிமொழி அஞ்சலி செலுத்திய போது அவர்களது உறவினர் கதறி அழுத போது கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.