தானியேல் நூல் – ஒரு அற்புதமான பெட்டகம்
விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம்.
இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட்சியில் இருக்கிறார்.
தானியேல் பாபிலோனில் இறைவனுக்கு சாட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார், அங்குள்ள மக்களையும் இறைவனின் அருஞ்செயல்களைக் காண வைக்கிறார். மக்கள் இறைவனை நாடி வர காரணமாகிறார் என்பது இந்த நூலின் ஒரு வரிச் செய்தி எனலாம்.
எபிரேய மொழியிலும், அரேமிய மொழியிலும், கிரேக்க மொழியிலும் என மூன்று மொழிகளில் கலந்து எழுதப்பட்ட நூல் தானியேல். விவிலியத்தில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 166 தானியேல் நூலில் இடம்பெற்றிருக்கிறது என்பது வியப்பான விஷயம். இதில் பெரும்பாலானவை குறியீடுகள்.
கிமு 605, 606 களில் தானியேல் பாபிலோனுக்கு கொண்டு வரப்படுகிறார். அரசவையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் அவருடைய மூன்று நண்பர்களும் அங்கே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு பாபிலோனிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்களை மாற்றிக் கொண்டாலும் இறைவனை மாற்றிக் கொள்ளவில்லை அவர்கள். இறைவன் தந்த கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்கின்றனர்.
இந்த நூல் தானியேலின் 75 ஆண்டு கால வாழ்க்கையையும், இஸ்ரேல் மக்களின் 440 ஆண்டு கால வரலாற்றையும் பதிவு செய்கிறது. தானியேல் நூலில் பன்னிரண்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் ஆறு அதிகாரங்களும் எளிமையாகவும், வியப்பூட்டும் அற்புதங்களாலும் நிரம்பியிருக்கின்றன.
ஒரு நிகழ்வில் மன்னன் நெபுகத்நேசர் ஒரு கனவு காண்கிறார். பொதுவாக கனவுக்கு விளக்கம் கேட்கத் தான் அறிஞர்களை அழைப்பார்கள். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக மன்னன் ஒரு கட்டளை இடுகிறார். அறிஞர்கள் மன்னர் கண்ட கனவையும் சொல்ல வேண்டும், அதன் பலனையும் சொல்ல வேன்டும். யாராலும் விடுவிக்க முடியாத இந்தப் புதிரை தானியேல் விடுவித்தார். கனவையும் சொல்லி அதன் பலனையும் அவர் விளக்கினார். அந்தக் கனவு கடவுளால் நெபுகத்நேசருக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. அரசுகளை அமைப்பதும், கலைப்பதும் என்னால் ஆகும் என்பதை இறைவன் இந்த கனவின் மூலம் மன்னருக்குப் புரிய வைக்கிறார்.
இன்னொரு நிகழ்வில், மன்னன் தன்னுடைய பொற்சிலை ஒன்றை வடிக்கிறான். அது 90 அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் உடையது. அதை மக்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என்பது அரச கட்டளை. எல்லோரும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஆனால் தானியேலின் நண்பர்கள் “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ” ஆகியோர் மன்னனை வணங்காமல் கடவுளை மட்டுமே வணங்குகின்றனர். அதனால் கோபமுற்ற மன்னன் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்குகிறார். அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடான நெருப்புச் சூளையில் அவர்கள் எறியப்பட்டனர். அவர்களை நெருப்பில் எறியச் சென்றவர்கள் அந்த வெப்பத்தில் கருகி இறந்தனர். ஆனால் நெருப்புக்குள் விழுந்தவர்களோ நெருப்பின் நடுவே இறைவனோடு உலவினார்கள். அதிர்ந்து போன மன்னன், இவர்களின் கடவுளே உண்மைக் கடவுள் என பிரகடனம் செய்தான்.
இன்னொரு கனவில் ஒரு மிகப்பெரிய மரம் வானளாவ வளர்ந்து நிற்கிறது. எல்லா வித விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது நிழலும், கனியும் தருகிறது. அது பின்னர் கடவுளின் தூதனால் வெட்டி வீழ்த்தப்படுகிறது. ஆனாலும் அதன் அடிமரம் மட்டும் விட்டு வைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகள் அது அப்படியே இருக்கும் என உரைக்கப்படுகிறது. அதன் விளக்கத்தையும் தானியேலால் மட்டுமே கூற முடிந்தது.
கனவின் படி மன்னனே அந்த மரம். மன்னன் வீழ்வான். ஏழு ஆண்டுகள் அவன் விலங்கைப் போல அலைவான். புல் தின்று, பனியில் நனைந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனாய் வாழ்வான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரசு அவனுக்குக் கிடைக்கும். தானியேலின் விளக்கத்தின் படியே அனைத்தும் நடந்தன.
இன்னொரு முக்கியமான நிகழ்வில் மன்னனை வழிபட மறுத்த தானியேல் சிங்கத்தின் குகையில் வீசப்படுகிறார். அப்போது மன்னனாய் இருந்தவர் தாரியு. தானியேலின் வயது 90 ! தானியேல் சிங்கத்தின் குகைக்குள் அமைதியாய் துயில்கிறார் சிங்கங்கள் அவரை எதுவும் செய்யவில்லை. மறுநாள் எல்லோரும் வியப்படைகின்றனர். தானியேலின் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது குகையில் எறியப்படுகின்றனர். தரையை அடையும் முன் சிங்கங்கள் அவர்களைக் கவ்விக் கிழிக்கின்றன !
இரண்டாம் பாகமான ஏழு முதல் 12 வரையிலான அதிகாரங்கள் கொஞ்சம் கடினமான குறியீடுகளால் ஆனது. அவை மிகப்பெரிய இறையியல் சிந்தனைகளும், துல்லியமான எதிர்கால தீர்க்கத்தரிசனங்களும் அடங்கியது.
மொத்தத்தில், தானியேல் நூல் இறைவனின் வலிமையையும், திட்டங்களையும் விளக்கும் ஒரு அற்புதமான பெட்டகம்
Thanks to Bro. Xavior