• Monday 9 September, 2024 07:42 AM
  • Advertize
  • Aarudhal FM

இயேசு கேட்ட கேள்விகள்

நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?

( யோவான் 18 : 34 )

இயேசுவைப் படுகொலை செய்ய வேண்டுமென யூத மதத் தலைவர்கள் அவரை பிலாத்துவின் முன்னால் நிறுத்துகிறார்கள். பிலாத்து அவர்களிடம், ‘நீங்களே கொண்டு போய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தண்டனை வழங்குங்கள்’ என்கிறான். அதாவது யூத சட்டப்படி தண்டனை வழங்கச் சொல்கிறார். அப்போது யூதர்கள் “சட்டப்படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்கின்றனர்.

யூதர்களுடைய மரண தண்டனை என்பது கல்லால் எறிந்து கொல்வது. ஆனால் இயேசு சிலுவையில் அறையுண்டு மரிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம். எனவே ரோம முறைப்படி தான் தண்டனை நிறைவேற்றியாக வேண்டும். யூதர்கள் தங்களை அறியாமலேயே இறைவார்த்தைகளை அங்கே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பிலாத்து இயேசுவைப் பார்த்துக் கேட்டான், ‘நீ யூதர்களின் அரசனா ?’

அந்தக் கேள்வியை பிலாத்து அலட்சியமாய்க் கேட்டிருக்கலாம். அல்லது ஏளனமாய்க் கேட்டிருக்கலாம். காரணம் மரண தண்டனைக்காக அவனிடம் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் கலகக் காரர்கள். அல்லது அதிகாரத்துக்கு எதிராய் கடுமையாய்ப் போராடுபவர்கள். அவர்கள் யாருமே இயேசுவைப் போல அமைதியாய் நிற்பதும் இல்லை. தெளிவாய்ப் பேசுவதும் இல்லை.

தன்னை ஒருவன் அரசனாக்கிக் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு ஆதரவாளர்கள் இருக்க வேண்டும். அவருடைய ஆடைகள் கண்டிப்பாக பகட்டின் ஆடையாய் இருக்க வேண்டும். ஆனால் இயேசுவிடம் எதுவும் இல்லை. தனியாய் நிற்கிறார். மிகவும் எளிமையாய் நிற்கிறார். அமைதியாய் நிற்கிறார். இப்போது பிலாத்துவிடம் வியப்பும் ஏளனமும் சரி விகிதத்தில் கலந்திருக்கலாம். எனவே தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

இயேசு அதற்கு ஒரு கேள்வியையே பதிலாய்த் தருகிறார். அந்தக் கேள்வி தான் மிகப்பெரிய ஆன்மிக சிந்தனைகளை உள்ளடக்கிய ஒரு கேள்வி. “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்கிறார் இயேசு ! அதாவது நான் யார் என்பதை அறியும் ஆவல் உமக்கு இருக்கிறதா ? அல்லது அடுத்தவர்கள் என்னை அரசன் என்கிறார்கள் அது உண்மையா என அறியும் ஆவல் இருக்கிறதா ? இதுவே இந்தக் கேள்வியின் பொருள்.

நீராகக் கேட்கிறீர் என்றால், இயேசு உண்மையில் யார் என்பதை அறியும் முயற்சி.

பிறர் சொல்வதை வைத்துக் கேட்பதெனில், இயேசுவைச் சிலுவையில் அறையும் முயற்சி !

பிலாத்து,

இயேசுவை அறிய விரும்புகிறானா ? அறைய விரும்புகிறானா ?

இயேசுவின் கேள்வியில் பிலாத்து தடுமாறியிருக்க வேண்டும். உண்மையிலேயே இயேசுவை பிலாத்து அறிய விரும்பினானா ? இயேசு நோய்களை நீக்கினாரே, பேய்களை விரட்டினாரே, நீர் மீது நடந்தாரே, அதிசய அப்பங்களைத் தந்தாரே, அற்புதமான போதனைகள் தந்தாரே, விண்ணக வாழ்வின் வழியைக் காட்டினாரே.. இவற்றையெல்லாம் அறிய விரும்பினானா பிலாத்து ?

இல்லை, கூட்டத்தினர் இவரைக் கொலை செய்ய வேண்டுமெனும் வெறியில் கொண்டு வந்திருக்கிறார்களே. அந்த குற்றச் சாட்டை நிரூபிக்க நினைத்தானா ? குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலை செய்வது எளிதாகிவிடும் என நினைத்தானா ?

நம்மை நோக்கி இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வோம் ?

நாம்

இயேசுவை அறிய நினைக்கிறோமா ?

இயேசுவைப் பற்றி அறிய நினைக்கிறோமா ?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று அன்பினால் இணைவது. இன்னொன்று தகவல்களினால் கட்டமைக்கப்படுவது. ஒன்று சித்தாந்தங்களோடு ஒன்றிப்பது, இன்னொன்று மேம்போக்காக தெரிந்து கொள்வது. ஒன்று அவரை நம் வாழ்வின் பாகமாய் மாற்றுவது, இன்னொன்று அவரை தூரத்தில் வைத்து எட்டிப் பார்ப்பது !

நாம் இயேசுவை எப்படி அறிய விரும்புகிறோம் ?

பிலாத்து இயேசுவை அறிய விரும்பவில்லை. இயேசு அவனிடம் சொன்னார், ‘அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்று. பிலாத்து இயேசுவைப் பார்த்து, ‘உண்மையா அது என்ன?’ என்று கேட்டான்.

பிலாத்து

உண்மையா அது என்ன ? என கேட்காமல்

உண்மையா அது யார் ? என கேட்டிருக்கலாம். ஏனெனில் நானே உண்மை என்றவரிடம், எது உண்மை என்று கேட்கிறான் பிலாத்து. யார் உண்மை என கேட்டிருந்தால், விடை கிடைத்திருக்கும். களம் மாறியிருக்கும்.

பிலாத்து உண்மையின் முன்னால் நின்ற பொய் ! அவனுக்கு உண்மை என்ன என்பது தெரிந்திருந்தது. இயேசுவைப் பொறாமையால் தான் கையளித்தார்கள் எனும் உண்மை ! இயேசு குற்றம் செய்யவில்லை எனும் உண்மை ! இயேசு சாவுக்குரியவர் அல்ல எனும் உண்மை ! தான் நினைத்தால் இயேசுவை விடுதலை செய்ய முடியும் எனும் உண்மை. எல்லா உண்மையும் தெரிந்த அவனுக்கு, ‘உண்மை’ என்பதே இயேசு தான் என்பது தெரியவில்லை. அவன் உண்மையைக் கொன்ற பொய்யாய் மாறிப் போனான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டபின் அவன் சிலுவையில் வைக்க ஒரு பலகை தயாராக்குகிறான். அதில் எழுதுகிறான் “யூதர்களின் அரசன்”. சீனாய் மலை கட்டளைகளை எழுதியது, கல்வாரி மலை அதில் கையொப்பமிட்டது ! ‘நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசன்” என !

நீ யூதனின் அரசனா ? என மரணத்துக்கு முன் கேள்வி எழுப்பியவன். ‘நீர் யூதரின் அரசன் தான்” என மரணத்திற்குப் பின் விடை எழுதுகிறான். விடையைத் திருத்தச் சொன்னவர்களை கோபத்துடன் திருப்பி அனுப்புகிறான் !

நான் விண்ணில் உயர்த்தப்படும் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றார் இயேசு ! அதில் பிலாத்துவும் ஒருவனா ?

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம் !

நான் இயேசுவை அறிய விரும்புகிறேனா

அறைய விரும்புகிறேனா ?

Thanks to Bro. சேவியர்