- 8
- 20250701
மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன்களில் மூழ்கி இருப்பதை பார்த்து வருகிறோம். வேலை செய்யும் போது, சாப்பிடும் போது என அனைத்து அன்றாட செயல்முறைகளின் போதும் மொபைல் போன்களைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதிலும் தூங்கும் முன் செல்போன் பார்க்கும் பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி விட்டனர்.
மொபைல் போன்கள் மட்டுமல்லாமல் மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது வேறு சில திரைகளைப் பார்ப்பது பொதுவானதாக மாறிவிட்டது. ஆனால், சாப்பிடும் போது இந்த திரைகளைப் பார்ப்பது மிகவும் கெடுதலாகும். சாப்பிடும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைக் காணலாம்.
சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதன் பக்க விளைவுகள்
உணவு உண்ணும் போது மொபைல் போனைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும். இதில் உணவு உண்ணும் சமயத்தில் மொபைல் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்
கவனச்சிதறல்
உணவு உண்ணும் போது, டிவி பார்ப்பது, மொபைல் போன் பார்ப்பது போன்றவற்றால் மூளை திசைதிருப்பப்படுகிறது. இதனால் சாப்பிடுவதில் கவனம் இல்லாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. உணவை சரியான முறையில் கவனத்துடன் உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.
அஜீரணக் கோளாறு
தொலைக்காட்சி, மொபைல் பயன்பாட்டின் போது சாப்பிடுவதால் சில சமயங்களில் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் இல்லாமல் போகலாம். இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் உடலால் உண்ணப்படும் உணவின் அளவையோ அல்லது எந்த வகையான உணவையோ சரியாக செரிமானம் செய்ய முடியவில்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடல் பருமன் பிரச்சனை
தொலைக்காட்சி அல்லது மொபைல் பார்க்கும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் அதிகம் சாப்பிடும் நிலை ஏற்படலாம். இதனால் சில சமயங்களில் அதிகளவு உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிகம் உணவு உட்கொள்வது உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
திருப்தியில்லாமல் இருப்பது
மனம் ஒரே நேரத்தில் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலையில், ஒன்றை மட்டும் சரியாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
குறைந்த வளர்ச்சிதை மாற்றம்
சாப்பிடும் போது திரைகளைப் பார்ப்பது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கிறது. இதனால் உணவு மெதுவாக செரிமானம் அடையலாம். மேலும், உடலில் கொலஸ்ட்ராலும் மெதுவாக கரைகிறது.
இவ்வாறு மொபைல், டிவி, மடிக்கணினி போன்ற பல்வேறு திரைகளைப் பார்ப்பது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.