• Monday 9 September, 2024 03:30 PM
  • Advertize
  • Aarudhal FM

உடல் ஆரோக்கியத்திற்காக கிழங்கு சாப்பிட்ட இளைஞர் முகம் வீங்கி துடிதுடித்து பலி

Aug 3, 2024, 1:50 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் வசித்து வருகிறார். விவசாய பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி வரும் மணிகண்டனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே மாச்சம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மணிகண்டன் தேங்காய் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளைந்திருந்த காட்டு கருணைக் கிழங்கை மணிகண்டன் சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதனை சமைக்காமல் சாப்பிட வேண்டாம் என்று கூறியதற்கு, பச்சையாக சாப்பிட்டால் தான் கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த கிழங்கை சாப்பிட்டுள்ளார்.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டு அவரது முகம், உடலின் சில பகுதிகள் வீங்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எந்தவித முன்னேற்றமும் தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

thanks to asianet news tamil

கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை

Aug 2, 2024, 6:57 PM

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்யாவள்ளி கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி செல்வதற்காக இன்று காலை தனது காரில் புறப்பட்ட உதயகுமாரின் உடல் மைலேரிபாளையம் அருகே கோழிப்பண்ணை முன்பாக கிடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஓடும் காரில் இருந்து உதயகுமார் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்தவுடன் மர்ம நபர்கள் அவரை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கறிஞரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது காரிலேயே தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த உதயகுமாரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

thanks to asianet news tamil

சென்னையில் பயங்கரம்! 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

Aug 2, 2024, 12:07 PM

சென்னையில் 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டு உடல் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அடையாறு ஆற்றின் கரையோரம் வெட்டுக்காயங்களுடன் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்பதும் இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

thanks to asianet news tamil

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

Aug 1, 2024, 12:01 PM

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தர்மலிங்கம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி பால்பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் பால்பாண்டியை மறக்க முடியாததால் ஜோதி அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி விடுமுறைக்கு ஊருக்கு வந்த தர்மலிங்கம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திட்டமிட்டு வேனை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனைவி ஜோதி, கொலைக்கு உதவியாக இருந்த 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

thanks to asianet news tamil

ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! தாயின் கண்முன்னே கொடூரக் கொலை!

Jul 28, 2024, 3:59 PM

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் ஒன்பது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டீன் ஏஜை கூடத் தாண்டாத சிறுமியின் அண்ணன் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏப்ரல் 24 அன்று இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை மூடி மறைக்க தாயும் இரண்டு மூத்த சகோதரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 24 அன்று ஜாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் அவரது வீட்டின் முற்றத்திலேயே கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் அண்ணனான 13 வயது சிறுவன், 17, 18 வயதான இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் அவர்களின் தாய் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மகன் செய்த குற்றத்தை மறைக்க முயன்றதாக ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டு முற்றத்தில் தூங்கியிருக்கிறார். அவருக்கும் அருகில் சிறுவனும் தூங்கியுள்ளார். தனது கைப்பேசியில் ஆபாசப் படத்தைப் பார்த்த சிறுவன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி தந்தையிடம் புகார் செய்யப்போவதாக மிரட்டியதால், சிறுவன் தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் தனது தாயை எழுப்பி நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு வந்த சிறுவன், சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மீண்டும் கழுத்தை நெரித்துச் சாகடித்துள்ளார். அதற்குள் அவர்களின் இரண்டு சகோதரிகளும், படுக்கை இருந்த இடத்தை மாற்றி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனும், அவனது குடும்பத்தினரும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

விசாரணையை திசைதிருப்ப சிறுமியை விஷ பூச்சி கடித்ததாக கூறி நாடகமாடியுள்ளனர். சிறுமியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்தபோது, அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான எந்த அறிகுறியையும் இல்லை என்றும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றும் குடும்பத்தினர்  மழுப்பலாகவே பதில் கூறியுள்ளனர். தொழில்நுட்ப உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து, 50 பேரிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என போலீசார் கூறுகின்றனர்.

Thanks to Asianet news tamil

நாகையில் பெண் கொல்லப்பட்ட விவகாரம்; கள்ளக்காதலனை  ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

Aug 3, 2024, 8:02 PM

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 38). இவரது கணவர் ரமேஷ். கருத்து வேறுபாடு காரணமாக ரமேசும், ஈஸ்வரியும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரி தனது மகனோடு தனியாக வசித்து வந்த அப்பகுதியில் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் ஈஸ்வரி கடந்த 1ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் ஆள்நடமாட்டம் இருக்கும் போதே  ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள்  ஈஸ்வரியை சராமாறியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஈஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனி படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட உத்தரவிட்டார். இதனையடுத்து எஸ்பி ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பொரவாச்சேரியை சேர்ந்த ராஜா என்பவரையும், வெளிப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்கின்ற கருப்பசாமி ஆகிய  இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த ஈஸ்வரியின் அக்கா கணவர் தான் ராஜா என்பதும் தெரியவந்தது. 

ராஜா ஈஸ்வரியை திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க சென்று கடைசியில் ஈஸ்வரியின் அக்காவை திருமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது. அதில் இருந்து ஈஸ்வரிக்கும், ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த ஈஸ்வரியின் கணவர் ராஜா பிரிந்து சென்றுவிட்ட நிலையில் ராஜா, ஈஸ்வரி இடையேயான உறவு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக ராஜா உடனான உறவை விட்டுவிட்டு மற்றொருவரோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா மற்றொருவருடான உறவை விட்டு விடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் ஈஸ்வரி அதை கேட்காமல் தொடர்ந்து வேறரொருவருடன் பழகி வந்ததாகவும், ராஜாவை வீட்டிற்கு வர கூடாது எனவும் கூறி உள்ளாதாக தெரிகிறது.  

இதனால் ஆத்திரமடைந்த ராஜா தனது நண்பர் வினோத் என்கின்ற கருப்பசாமியோடு சேர்ந்து ஈஸ்வரியை  வெட்டிக் கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாவையும், வினோத்தையும் போலிசார் கைது செய்ய முற்பட்ட போது தப்பி ஓடிய ராஜா தடுக்கி விழுந்ததில்  கை, கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து மாவு கட்டுப்போட்டு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.