பாதுகாக்கும் தேவன் (1 சாமுவேல் 19ம் அதிகாரம்)
சவுல் தாவீதின் மேல் பொறாமை கொண்டு தந்திரத்தினாலும் வஞ்சனையினாலும் அழித்துப்போட முயற்சித்தான் (1 சாமு 18 அதி). ஆனால், கர்த்தர் தாவீதோடிருந்தபடியால் (1 சாமு 18:12, 14, 28) அவரை காப்பாற்றி கனப்படுத்தினானர் (1 சாமு 18:30).
வஞ்சனையும் சூழ்ச்சியும் கைகொடாதபடியினால், தற்போது சவுலே களத்தில் இறங்கி தாவீதை கொன்றுபோட முயற்சிக்கின்றான் (1 சாமு 19:1). அந்த தீமையான யோசனைகளில் தேவன் தாவீதை எவ்விதமாக பாதுகாத்தார் என்பதை இந்த அதிகாரம் நமக்கு கற்றுத் தருகிறது.
“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங் 121:4) என்கிற வேத வசனத்தின்படி, நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளின் நடுவே, “பாதுகாக்கும் தேவன்” உண்டு என்பதை நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்துவோம்.
தாவீதை நான்கு வித சூழ்நிலைகளில் இந்த பகுதியில் கர்த்தர் பாதுகாத்தார்.
1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்தினார்.” (1 சாமு 19:1-7)
சவுல் யோனத்தானோடும், தன் ஊழியக்காரர்களோடும் பேசி தாவீதை கொலை செய்ய முயன்ற போது, யோனத்தானின் ஆலோசனையின் மூலம் (1 சாமு 19:4,5) தாவீதுக்கு ஏற்பட இருந்த “தீமையை தடுத்து நிறுத்தினார்.”
நம்முடைய வாழ்விலும் நமக்கு நேரிட இருந்த தீமைகளை தடுக்கும் படிக்கு, நல்ஆலோசனை கொடுக்க தேவனால் அனுப்பப்பட்ட யோனத்தான்களுக்காக கர்த்தரை துதிப்போம்.
2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவித்தார்.” (1 சாமு 19:8-10)
தாவீதை கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்ட சவுல், தாவீதின் உயர்வைக் கண்டு, மறுபடியும் அவனை கொன்று போட வேண்டும் என்று மனம் மாறினார். ஆகையால், தன் வீட்டில் இருந்த போது, தன் ஈட்டியை கையில் பிடித்து (வீட்டில் இருக்கும் போது சவுலின் கையில் ஆயுதம் எதற்கு), தாவீதை குத்தி போடுவதற்கு திட்டமிட்டு அதை முயற்சித்தான்.
தேவனோ, சவுலின் சதி திட்டத்திலிருந்து, “தன்னை தப்புவித்துக் கொள்ள தாவீதிற்கு ஞானத்தை கொடுத்தார்.”
- சவுல் இரண்டாம் முறை ஈட்டியை எறிகிறதற்கு தாவீது இடம் கொடுக்கவில்லை. (ஒப்பிடுக: 1 சாமு 18:11= 1 சாமு 19:10)
நமக்கு எதிரான சதி திட்டங்களில் இருந்து “தப்புவித்துக்கொள்ள” ஞானத்தை அருளுகின்ற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.” (1 சாமு 19:11-18)
தாவீதை அவன் வீட்டிலேயே கொன்று போடும்படி சவுல் சேவகர்களை அனுப்புகின்றான். ஒருவேளை தன் மகள் மீகாள் தனக்கு ஒத்தாசையாக இருப்பாள் என்று சவுல் எண்ணி இருக்கலாம் (1 சாமு 19:17). ஆனால் மீகாளோ, தாவீதை எச்சரித்து, தப்பி ஓட பண்ணினாள்.
தாவீதிற்கு மீகாளின் மூலமாக தயவு கிடைத்தாலும், தாவீதை தப்புவிக்க அவள் நாடகமாடுகிறாள், பொய் சொல்லவும் தயங்கவில்லை (1 சாமு 19:13, 17). தன் வீட்டிலே சுரூபத்தை வைத்திருந்த மீகாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்ணாக தோன்றவில்லை.
இதனால், நாம் நம்மை பாதுகாக்க பொய் சொல்லி நாடகமாடலாம் என்று அர்த்தமல்ல. நன்மையை பயக்கும் என்றாலும் பொய் பொய்யே, பாவம் பாவமே.
ஆனால், நாம் கற்றுக் கொள்ளும் பாடம். தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு நன்மை செய்யவும் பூரணமற்ற மனிதர்களையும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
எ.கா:-
- வேசியாகிய ராகாப் (யோசு 2:1-13)
- பெர்சிய ராஜாவாகிய கோரேஸ் (எஸ் 1:1,2)
சிந்தனைக்கு: தேவபக்தியுள்ள யோனத்தானின் மூலமும் தாவீதை தப்புவித்தார். தேவபக்தி இல்லாத மீகாளின் மூலமாகவும் தாவீதை தப்புவித்தார். இதற்காக, “அவர்கள் இருவரும் கையாண்ட முறைகள்” அவர்கள் யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.
நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளில் எவரைக் கொண்டும் நமக்கு “தயவு செய்கின்ற” தேவனுக்கு ஸ்தோத்திரம்.
4. எதிராய் வந்தவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.” (1 சாமு 19:18-24)
இறுதியாக தாவீது தன்னை தப்புவித்துக் கொள்ள சாமுவேலிடத்தில் அடைக்கலம் புகுந்தான். இதனை அறிந்த சவுல் தாவீதை பிடித்து வரும்படி தனது சேவகர்களை மூன்று கூட்டமாய் அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தேவ ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அதாவது தாங்கள் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, வேறொரு காரியத்தை செய்யும் படியாய் தேவன் அவர்களைத் தாண்டிப்போக பண்ணினார். சவுலுக்கும் அதே கதி தான் நேர்ந்தது.
எதிராய் வந்தவன் தான் எதற்காக வந்தேன் என்பதை மறந்து, வஸ்திரம் இல்லாது ஒரு நாள் முழுவதும் விழுந்து கிடக்கிறான். இது தாவீது தப்பி போக ஏதுவாக இருந்தது.
நமக்கு எதிராய் வருகிறவர்களையும் கட்டுப்படுத்தி, அவர்களை திசை திருப்பி! நம்மை அவர்கள் தாண்டி போகச் செய்து, நம்மை பாதுகாக்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
பாதுகாக்கும் தேவன்
1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்துகின்றார்.”
2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவிக்கின்றார்.”
3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.”
4. எதிராய் வருகின்றவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.”
கே. விவேகானந்த்