• Friday 24 January, 2025 02:16 AM
  • Advertize
  • Aarudhal FM

உங்கள் ஆன்மீகத்தை செயலில் காட்டுங்கள்.

நண்பர் ஒருவருடன் பேசியபடி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென எங்களை உரசியபடி பறந்தது ஒரு கார். அதிர்ச்சியுடன் பார்த்தேன். காரின் பின் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிலுவையின் படமும்.

“சிலுவை படம் போட்டு, வசனமும் ஒட்டிகிட்டு எப்படி ஓட்றான் பாத்தீங்களா ?” என்றார் அருகில் நின்றிருந்த நண்பர். வசனங்களை காரில் ஒட்டியதால் ஒருவன் நல்லவனாய் மாறிவிட முடியாது என்றேன் சிரித்துக் கொண்டே.

உண்மை தான். ஏதேதோ மத வாசகங்களுடன் வருகின்ற கார்களில் முக்கால்வாசி அச்சுறுத்தியபடி தான் பறக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த மதங்களின் மீது மக்களுக்கு மரியாதை வருவதற்குப் பதில் அருவருப்பே எழும் என்பதிலும் சந்தேகமில்லை.

உங்கள் ஆன்மீகத்தை செயலில் காட்டுங்கள்.

நிதானமாய் வண்டி ஓட்டலாம். சாலை கடக்க நினைப்பவர்களுக்காய் காத்திருக்கலாம். அவசர வாகனங்களுக்கு வழி விடலாம். தவறிழைக்கும் தருணங்களில் ஒரு புன்னகையுடன் மன்னிப்பு கேட்டு கடந்து செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு வசனங்களை கண்ணாடியிலும், வெறுப்பை மனதிலும் எழுதியபடி வாகனம் ஓட்டுவதில் எந்த பயனும் இல்லை.

சிந்திப்போம்