• Tuesday 10 December, 2024 12:09 AM
  • Advertize
  • Aarudhal FM

இந்தியா வந்த மிஷனரி – இராபர்டு கால்டுவெல்

இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும்பழங்கிரேக்கத்திலும்தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.[1] திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.

இளமைக் காலம்

இவர் 1814-ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார்.தமிழ் மொழி .[2]

மொழியியல் ஆய்வுகள்

1841-இல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.”[3]

குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்

வரலாற்று ஆய்வுகள்

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள்நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக “திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட்டு எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.[4]

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

நற்கருணை தியான மாலை (1853)

  • தாமரைத் தடாகம் (1871)
  • ஞான ஸ்நானம் (கட்டுரை)
  • நற்கருணை (கட்டுரை)
  • பரதகண்ட புராதனம்

கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
  • திருநெல்வேலி அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)
  • தின்னவேலி (திருநெல்வேலி) சாணர்கள்: அவர்களின் மதம், மற்றும் ஒரு சாதியாக அவர்களது நெறிகள் மற்றும் குணங்கள்; அவர்களிடையே கிறிஸ்தவம் பரவுவதற்கு உள்ள வசதிகள் மற்றும் தடைகள் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் – ஒரு வரைவு (The Tinnevelly Shanars: A Sketch of – Their Religion, and Their Moral Condition and Characteristics, as a Cast; with Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, 1849)[5][6]
  • திருநெல்வேலி உயர் வகுப்பு மற்றும் உயர் சாதியினரிடையே கிறிஸ்தவ மதமற்றத்திற்கு செய்யப்பட்ட பணிகள் (Evangelistic Work amongst the Higher Classes and Castes in Tinnevelly. Rev. Dr. Caldwell’s Third Journal. [1876.])
  • மதத்தின் உள்ளிருக்கும் கோட்டை (The Inner Citadel of Religion. S.P.C.K.: London, [1879.])
  • காப்பாற்றப் படாதவர்களின் அணிவகுப்பு [மதத்தின் வழியில்.] (The March of the Unsaved. [A religious tract.] G. Stoneman: London, [1896.])
  • திருநெல்வேலியில் வேல்ஸ் இளவரசர் மற்றும் “டெலாகே சாலையிலிருந்து இடையான்குடி வரை” (The Prince of Wales in Tinnevelly, and “From Delahay Street to Edeyengoody.”. London : S.P.C.K., 1876.)
  • குடுமியின் மீதான அவதானிப்புகள் (Observations on the Kudumi. J. J. Craen: [Madras?] 1867.)
  • இந்தியாவில் மிசனரிப் பள்ளிகளில் கிறிஸ்தவரல்லாத மாணவர்களுக்கு மதக்கட்டளைகளை தெரிவிப்பதை நிறுத்திவைத்தல் தொடர்பாக- மதறாஸ் பங்குத்தந்தைக்கு ஒரு கடிதம் (On reserve in communicating religious instruction to non- Christians in mission schools in India: a letter to the Right Reverend the Lord Bishop of Madras. Madras : S.P.C.K. Press, 1879.)
  • கிறிஸ்தவத்துக்கு இந்து மத்ததுடன் உள்ள தொடர்பு (The Relation of Christianity to Hinduism. R. Clay, Sons, & Taylor: London, [1885.])
  • திருநெல்வேலி கிறிஸ்தவ மிசனின் ஆரம்ப கால வரலாற்றுப் பதிவுகள் (Records of the Early History of the Tinnevelly Mission, etc. Higginbotham & Co.: Madras, 1881.)
  • மூன்று பாதை வழிகாட்டிகள் (The Three Way-marks. Christian Vernacular Education Society: Madras, 1860.)

இந்தியா வந்த மிஷனரி – பர்த்தலோமேயு சீகன் பால்க்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 – பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682 ஆம் ஆண்டு, ஜூலை 10 ஆம் நாள் செருமனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் (Pulsnitz) என்னுமிடத்தில் பர்த்தலோமேயு – கத்தரின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையார் பர்த்தலோமேயு, நவதானியங்களை விற்பனை செய்து வந்த ஓர் வணிகர், செல்வந்தர். சீகனுக்கு நான்கு மூத்த சகோதரிகள் இருந்தனர். சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே, இறைப்பற்று மிக்க அவரின் தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும், அதன்பின்பு ஒரு வருடம் கழித்து ஒரு சகோதரியையும் இழந்தார்.

கல்வி

சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் (Görlitz) என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் அவரது பெயருக்கு அருகில் “சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன்” (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது.

17ஆவது வயதில் சீகன் உள்ளத்தில் ஜேக்கப் பாக்மி (Jakob Böhme) யின் புரிந்து கொள்ள முடியாத பரவச மனநிலையில் ஆன்மிக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் (mysticism) கொள்கைகள் விதைக்கப்பட்டன. குழப்பத்திலிருந்த அவர், வேதத்தை நன்கு கற்றிருந்தபடியால் பல மாதப் போராட்டத்திற்குப் பின்பு அதிலிருந்து விடுதலை பெற்றார்.

1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார். சுகவீனம் காரணமாக அவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமானார். “நான் எங்கிருந்தாலும் சிலுவை என்னைத் தவறாமல் பின் தொடர்கிறது”, என்று தன் சரீர பலவீனத்தைப் பற்றி சீகன் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் எபிரேய மொழியைக் கற்றார்.

அருட்பணி தேர்வு

டென்மார்க் மன்னர் 4ஆம் பிரடெரிக், டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் காலனிக்குட்பட்ட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி அருட்செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். டென்மார்க் லுத்தரன் திருச்சபை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே மிஷனெரியைத் தெரிவு செய்யும் பணி ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய சரீர பலவீனத்தினால், இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளுட்ச்சோ (Heinrich Plütschau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர்.

கடற்பயணம்

1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் நாள் இருவரும் மன்னர் சார்பில், அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்ட சீகன்பால்க் தனது கடற்பயணத்தை, “மரணக் கல்விச் சாலை” (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது Allgemeine Schule der wahren Weisheit என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.

இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில், 1706 ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர். மன்னர் அவர்களை அனுப்பியிருந்தால், அவர்கள் மன்னரின் உளவாளிகளாய் இருப்பார்கள் என்ற சந்தேகத்தால் அவர்களுக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை. அவர்களின் வருகை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னருக்கும், டேனிய போதகர்களுக்கும் அதிருப்தியை அளித்தது. அவர்கள் கப்பலிலிருந்து கரை வந்து சேர மூன்று நாட்கள் படகுகள் கொடுக்கப்படவில்லை. கவர்னர் ஹாசியஸ் (Hassius) யைச் சந்திக்க காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை காத்துக் கிடந்தனர். பல மணி நேரம் சந்தை வெளியில் தனித்து விடப்பட்டனர். முடிவில் போர்ச்சுக்கீசியருடைய அடிமைகள் தங்கும் இடத்தில் தங்கினர். ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மானியர்கள் சீகனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர்.

அருட்பணி தொடக்கம்

சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார். ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார்.

சீகன்பால்க், ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் நாள், இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயம் (புதிய எருசலேம் ஆலயம்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 1717 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் லுத்தரன் திருச்சபைக்காக இத்தேவாலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் நிற்கிறது.

சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.

சிறைவாசம்

சீகனின் மிஷனெரிப் பணிக்கு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் பிறமதத்தவர்களைச் சீகனுக்கு விரோதமாய் ஏவி விட்டார். ஐரோப்பியர் பலர் இந்தியரை அடிமைகளாய் வேலை வாங்கி வந்தனர். பொறையாரில் போதகர் ஒருவர் தாய்நாடு திரும்பும் போது தன் அடிமையை ஒரு பெண்ணிடம் விற்று விட்டுச் சென்றார். சீகனும், புளுட்ச்சோவும் இதை எதிர்த்தனர். ஓர் ஏழை விதவைக்கு நியாயம் கோரும் விஷயத்தில் ஹாசியஸ் சீகன் மேல் கோபம் கொண்டார். 1708 நவம்பர் மாதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சீகனின் வீட்டிற்குள் நுழைந்து, ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த அவரைக் கைது செய்து கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும், மையும் சீகனுக்குக் கொடுத்து உதவ, ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார்.

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு

[தொகு]

புதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே, சீகன், 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழி அவருக்குப் புதிது. அதோடு இந்தியாவில் அப்போது யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை. ஆகவே வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சுலபமானதாக இல்லை. கத்தோலிக்க சபையார் ஏற்கனவே தமிழ் ஆராதனை முறையில் சில பதங்களை மொழி பெயர்த்திருந்தனர். அவர்கள் பயன்படுத்திய முக்கியமான வார்த்தைகளையே சீகனும் உபயோகித்தார். உதாரணமாக கடவுள் என்னும் பதத்தை மொழிபெயர்க்க அவர்கள் உபயோகித்த ‘சர்வேசுரன்’ என்னும் வார்த்தையையே சீகனும் உபயோகித்தார். ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழிபெயர்த்திருந்தார். (சீகன் பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் (Rev. Benjamin Schultze) முடித்து அச்சேற்றினார்). இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்தியச் சரித்திரத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற அநேகத் தடைகள் ஏற்பட்டன. ‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (S P C K – Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன. மேலும் அச்சு எந்திர முதலாளி வரும் வழியில் இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர். இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின் 1715ஜூலை 15 ஆம் நாள் தமிழ்ப் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. அவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். வீரமாமுனிவர் என்று போற்றப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் நடையை ஆதரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே! முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்தான்.

1715ஆம் ஆண்டு, சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிக்குப் பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். அவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மரியா டாரதியை திருமணம் செய்தார். இந்த புதுமணத் தம்பதியர் 1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.

சீகன்பால்க் நூல்கள்

மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில நூல்களையும் எழுதினார். தென் இந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும் (Ausführliche Beschreibung des malabarischen Heidentums), தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் (Genealogia der malabarischen Götter) எழுதினார். நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் (Grammatica Tamulica) எழுதினார். தமிழ் – ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா – விடை புத்தகமும் சீகனால் எழுதப்பட்டது. இவர் தமிழ்நூல்களின் நூற்பட்டியல் (Verzeichnis der malabarischen Bücher) ஒன்றையும் தொகுத்துள்ளார்.

தமிழ் மொழிப்பற்று

ஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகராகக் கருதினர். சீகன்பால்க்கும், புளுட்ச்சோவும் தொடக்கத்தில் இந்த எண்ணத்திலேயே இருந்தனர். அவர்கள் தமிழுடனும், தமிழருடனும் நெருங்கிய உறவு கொண்ட பின்னரே இந்த எண்ணம் நீங்கிற்று. இதுபற்றி சீகன்பால்க் குறித்திருப்பதாவது:

நானும் முதலில் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும், தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன், உறவாடினேன். அதன் பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக் கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள். பல கலைகளில் புலமை எய்தியவர்கள். வாணிபத்திலும், ஓவியத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுடைய ஆட்சிச் சட்டமும், நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை. மனோதத்துவ வேதாந்தப் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது. வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

மறைவு

முதல் இந்திய புராட்டஸ்டண்ட் மிஷனெரியும், முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். 1719ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதி தரங்கம்பாடியில் காலமானார். அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டது.

thanks to https://ta.wikipedia.org/s/81y