• Monday 9 September, 2024 09:18 AM
  • Advertize
  • Aarudhal FM

இளையோரும், இணைய தளங்களும்

விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். அந்த வலையானது நல்ல மீன்களையும், கெட்ட மீன்களையும் இழுத்து வருகிறது. நல்லவை கூடையில் சேர்க்கப்படும், கெட்டவை வெளியே கொட்டப்படும் என இயேசு ஒரு முறை விண்ணரசைக் குறித்து உவமை ஒன்றைச் சொன்னார். அதை இன்றைய இணைய வலையோடும் ஒப்பிடலாம்.

இணைய வலையானது டிஜிடல் தகவல்களை சகட்டு மேனிக்கு அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறது. அவற்றிலிருந்து நல்லவற்றைப் பொறுக்கி கூடையில் வைக்க வேண்டும், கெட்டவற்றை வெளியிலே கொட்ட வேண்டும். அப்போது அந்த வலை பயனுள்ளதாய் இருக்கும். அதை விட்டு விட்டு, நல்லவற்றை நிராகரித்து விட்டு தீயவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது வலையானது நமது கழுத்தை இறுக்கும் சுருக்காக மாறிவிடுகிறது.

சிறு வயதுக் கதைகளில் வேடன் வலையை விரித்து, அதில் தானியத்தை பரப்பி வைப்பான். அந்தத் தானியத்தின் வசீகரத்தைக் கண்டு பறவைகள் அதில் வந்து அமரும் போது அவை வலையில் சிக்கிக் கொள்ளும். அவற்றை அவன் வந்து சாவாகாசமாகப் பிடித்துச் செல்வான். இன்றைக்கு இணையமும் அப்படித் தான், பல வசீகரத் தானியங்களை வலைத் தளங்களில் விரித்து வைத்து இளைஞர்களின் ஆர்வத்தை தவறான வழியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

குறிப்பாக சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் எந்த ஒரு தனிநபர் தகவலையும் கொடுக்காமல் இருப்பது மிக மிக முக்கியம். குறிப்பாக இளம் பெண்கள் இந்த வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு அவசியம். ஒரு தேவையற்ற புகைப்படமோ, ஒரு தேவையற்ற மின்னஞ்சலோ, ஒரு தேவையற்ற வாட்சப் உரையாடலோ போதும் காலமெல்லாம் நமது நிம்மதியைக் குழி தோண்டிப் புதைக்க.

காலங்கள் கடந்தாலும் சோதனைகள் தீர்வதில்லை. ஒவ்வொரு காலத்திலும் சாத்தான் தனது சோதனையை வேறு வேறு விதமாகத் தந்து கொண்டே இருப்பான். ஆதியில் பழத்தைக் காட்டி ஏவாளை வசீகரித்த சாத்தான், இன்றைக்கு தளத்தைக் காட்டி இளைஞர்களை இழுக்கப் பார்க்கிறான்.

ஒன்று மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சாத்தானால் சோதனைகளைத் தர மட்டுமே முடியும், அதில் விழுவதா இல்லையா எனும் முடிவு நம்மிடமே இருக்கிறது. பழத்தைச் சாப்பிடும் ஆசையை சாத்தான் தூண்டினான், ஏவாள் விழுந்தாள். பாவத்தை அரவணைத்தாள். கல்லை அப்பமாய் மாற்றிச் சாப்பிட இயேசுவின் ஆசையைத் தூண்டினான். இயேசு நிமிர்ந்தார், புனிதத்தை தேர்ந்தெடுத்தார். அது தான் வித்தியாசம். சோதனைகளின் வசீகரத்தில் வழுக்கிவிட்டால், ஆன்மிக முதுகெலும்பு உடைந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துமே இணைய இழைகளால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. எனவே இணையத்தைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்தல் என்பது ஏறக்குறைய சாத்தியமற்ற நிலை என்று கூடச் சொல்லலாம். இந்த சூழலில் கவனமாக வாழவேண்டியது நமது தேவை. எப்படி இயேசு அழைத்தபோது, “வலைகளை விட்டு விட்டு” இயேசுவை சீடர்கள் பிந்தொடர்ந்தார்களோ, அது போல நாம் ‘இணைய வலையை’ விட்டுவிட்டு இயேசுவைப் பின்செல்லத் தயாராய் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நன்மையைப் பற்றிக் கொள்வதும், தீமையை விட்டுச் செல்வதும் நமது கையில் தான் இருக்கிறது. இயேசு “வலப்பக்கமாக வலைகளை வீசுங்கள்” என்றார். வலப்பக்கம் என்பது விண்ணகத்தின் பக்கம். வலப்பக்கமாய் வீசும் வலை என்பது நல்ல விஷயங்களைப் பெற்றுக் கொள்ள இணையத்தைப் பயன்படுத்துதல் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இணைய தளத்தைத் தவிர்த்தல் சாத்தியமற்ற இன்றைய சூழலில் எப்படியெல்லாம் இணையத்தை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்வது பயனளிக்கும்.

1. கலைகளை வளர்க்கலாம்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கலைகளை வளர்த்தெடுக்க இணையம் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இசைக்கலைஞன் எந்த ஒரு இசைக்கருவியையும் வாங்காமலேயே பாடல்களுக்கு இசையமைக்க முடியும். செலவில்லாமலேயே பாடி ஒரு பாடலை தரமான முறையில் உருவாக்கவும் முடியும். எந்த கலை நமக்குப் பிடித்திருக்கிறதோ, அந்தக் கலையைக் குறித்த அதிக தகவல்களை இணையம் இலவசமாகவே அள்ளித் தருகிறது.

எழுத்தாளர்கள் தளங்களை ஆரம்பித்து தங்கள் சிந்தனைகளை எழுதி வைக்கலாம். ஓவியர்கள் டிஜிடல் ஓவியங்களை அழகாக உருவாக்கலாம். பாடகர்கள் தங்களுடைய குரலை பதிவேற்றி அங்கீகாரம் பெறலாம். இப்படி எந்த ஒரு கலையையும் வளர்க்கலாம். இந்த கலைகளையெல்லாம் இறைவனுடைய மகிமைக்காகச் செய்யும் போது அவை அர்த்தம் பெறும்.

2. சிந்தனைகளைப் பகிரலாம்.

இன்றைக்கு இணையதளத்தை மிகவும் பாசிட்டிவாகப் பயன்படுத்தும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக யூடியூப் சேனலை எடுத்துக் கொண்டால், நிறைய கிறிஸ்தவ படைப்புகள் சார்ந்த தளங்கள் இருக்கின்றன. நம்முடைய சிந்தனைகளை வீடியோவாகப் பதிவுசெய்து வைக்கும்போது அவை சர்வதேச அளவில் மக்களுக்குப் பயனளிக்கின்றன. தொலைக்காட்சியைப் போல, ‘ஆன்லைன் தொலைக்காட்சிகள்’ உருவாக்குவதும் எளிதாகியிருக்கிறது. இவையெல்லாம் இளைஞர்கள் தங்களுடைய சிந்தனையை நல்ல முறையில் காட்சிப்படுத்த உதவும்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள், கிறிஸ்தவம் சார்ந்தவ விஷயங்கள் என சமூகத்துக்குத் தேவையான, பலருக்கும் பயனளிக்கக் கூடிய விஷயங்களை இத்தகைய இணைய தளங்களில் பதிவிடலாம். கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு எதிரான எதையும் பதிவிடக் கூடாது என்பது மட்டுமே சிந்தையில் கொள்ள வேண்டிய விஷயம்.

3. தொடர்பில் இருக்கலாம்.

நண்பர்களோடும், உறவினர்களோடும், ஆசிரியர்களோடும், ஆன்மிக வழிகாட்டிகளோடும் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு இன்றைக்கு இணையம் உதவுகிறது. முன்பு இத்தகைய வசதிகள் இல்லை. நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தான் தொடர்பு கொள்ள முடியும் எனும் நிலை இருந்தது. இந்த தொடர்பு விஷயத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நன்மையும் தீமையும் முடிவு செய்யப்படுகிறது. தேவையற்ற அரட்டைகளில் மூழ்கி, டிஜிடல் வெளிச்சத்தில் நாளெல்லாம் புதைந்து கிடந்தால் நமது வாழ்க்கையும், ஆரோக்கியமும் பாழாகிவிடும்.

தேவையான அன்பையும், நட்பையும் இணையத்தின் மூலம் பகிரவும், பெறவும் செய்தால் நாட்கள் இனிமையாகும். எந்த வகையிலும் நேரடியான மனித உறவுகளை, சந்திப்புகளை, அரவணைப்பை இந்த டிஜிடல் பரிவர்த்தனை இடமாற்றம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

4. தொழில்கள் செய்யலாம்.

இன்றைக்கு ஃபிரீலேன்சர்கள், அதாவது சுதந்திரமாக தொழிலைச் செய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு இணைய தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. வீட்டில் இருந்தபடியே வேலைகளைச் செய்யவும், அவற்றை இணையத்திலேயே பதிவேற்றி பணம் பெற்றுக் கொள்வதுமான கிரவுட் சோர்சிங் முறையிலான வேலைகள் அதிகம் காணப்படுகின்றன. நாணயமான, நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய பணிகளை இளைஞர்கள் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

அதே நேரம், இணையத்தில் ஏமாற்றுபவர்களும் ஏராளம் உண்டு என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம். தவறான செயல்களில் ஈடுபடுவது நமது அமைதியான வாழ்க்கையையே மிக எளிதில் அழித்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5. நேரத்தை மிச்சப்படுத்தலாம்

இணையமும், இணையதளங்களும் நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. ஒரு ரிக்கார்ட் எழுதவே லைப்ரரிகளில் மாதக் கணக்கில் நூல்களைப் புரட்டிய காலங்கள் மலையேறிவிட்டன. இன்றைக்கு இருக்கும் இடத்திலிருந்து கொண்டே தகவல்களை உலகில் எந்த மூலையிலிருந்தும் இழுத்து எடுக்கலாம். மிக எளிதாகக் கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கின்ற வங்கி வேலைகள் நமக்கு நேரத்தை சேமித்துத் தருகின்றன.

இப்படி மிச்சப்படுகின்ற நேரங்களை மனித நேயப் பணிகளுக்கும், இறைமகன் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கும் நாம் செலவிட வேண்டும். அப்போது நமக்கு விண்னகத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

இப்படி இணைய தளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இணைய தளங்கள் இன்றைக்கு இறை தளங்களாகவும் இருக்கின்றன, சாத்தானின் தளங்களாகவும் இருக்கின்றன. எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பதில் இருக்கிறது நமது பயணத்தின் வெற்றி.

இணைய தளங்களை நாம் பயன்படுத்தும்போது ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்போம். இந்த இணைய தளத்தை நானும் இயேசுவும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா ? “முடியும்” என நீங்கள் தைரியமாகச் சொல்ல முடிந்தால் அந்தத் தளத்தைப் பாருங்கள். இல்லையேல் தவிர்த்து விடுங்கள். நீங்கள் பாவத்தில் விழ மாட்டீர்கள்.

thanks to Bro. சேவியர்