• Saturday 1 November, 2025 08:11 AM
  • Advertize
  • Aarudhal FM
மதவெறி தாக்குதலால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு மீண்டு வந்து சாதித்து இயேசுவுக்கு நன்றி கூறிய ஜெமிமா

மதவெறி தாக்குதலால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு மீண்டு வந்து சாதித்து இயேசுவுக்கு நன்றி கூறிய ஜெமிமா

  • india
  • 20251031
  • 0
  • 17

மும்பை: மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இயேசு கிறிஸ்துவத்துக்கு என் நன்றிகள்.. அவர்தான் என்னுடைய ஆட்டத்திற்கு காரணம் என்று ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் இந்த வெற்றி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வழிவகுத்தது. இப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்திய அணி துரத்திப் பிடித்தது. நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய மகளிர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதிகபட்ச ரன் சேஸிங்

டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய மகளிர் அணி, 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ரன் சேஸிங்காகப் பதிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் அதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 339 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷஃபாலி வர்மா (10 ரன்கள்) சீக்கிரமே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கிம் கார்த் வீசிய பந்தில் வெளியேறிய ஷஃபாலியைத் தொடர்ந்து, 13/1 என்ற நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார்.

இந்திய அணி வெற்றி

ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் இணைந்த ஸ்மிருதி மந்தனா, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். எனினும், 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை கார்த் கைப்பற்றினார். இதனால், 9.2 ஓவர்களில் 59/2 என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவனமாக ஆடினார். மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். இருவரும் இணைந்து 53 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். ஜெமிமா 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஹர்மன்பிரீத் தனது பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்தப் பார்ட்னர்ஷிப் 99 பந்துகளில் 100 ரன்களையும், 140 பந்துகளில் 150 ரன்களையும் கடந்தது. ஹர்மன்பிரீத் தனது 65 பந்துகளில் அரை சதம் அடித்தார், இது உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அவரது மூன்றாவது அரை சதமாகும். 31.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகளும், நெருக்கடியும் அதிகரிக்கவே, அன்னபெல் சதர்லேண்ட் வீசிய பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்கள்) ஆட்டமிழந்தார். 35.3 ஓவர்களில் இந்திய அணி 226/3 என்ற நிலையில் இருந்தது. ஹர்மன்பிரீத் – ஜெமிமா ஜோடி 167 ரன்கள் சேர்த்து புதிய உலகக் கோப்பை நாக் அவுட் சாதனை படைத்தது.

தீப்தி ஷர்மா

இதையடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மா (24 ரன்கள்), அதிரடியாக விளையாடினாலும், ரன் அவுட்டாகி வெளியேறினார். 40.5 ஓவர்களில் 264/4 என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். 115 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அணியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. ரிச்சா கோஷ் அதிரடியாக சிக்ஸர்களை விளாசி, வெற்றி இலக்கை நெருங்க உதவினார். இறுதி 8 ஓவர்களில் இந்தியாவுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. சவுதர்லேண்ட் மற்றும் கார்னர் பந்துகளில் பவுண்டரிகளை விளாசி, ரிச்சா கோஷ் (26 ரன்கள்) இந்தியாவுக்கு 34 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி 24 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சோஃபி மோலினெக்ஸின் 47வது ஓவரில் ஜெமிமா பவுண்டரி அடித்து ரன்களைக் குறைத்தார். சவுதர்லேண்டின் 48வது ஓவரில் ஜெமிமா 2 பவுண்டரிகள் அடிக்க, கடைசி 14 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. டைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், அமன்ஜோத் சிங் வெற்றிக்கான ரன்களை எடுத்தார். இந்திய அணி 9 பந்துகள் மீதமிருக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

ஜீசசுக்கு ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இயேசு கிறிஸ்துவத்துக்கு என் நன்றிகள்.. அவர்தான் என்னுடைய ஆட்டத்திற்கு காரணம் என்று ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி தெரிவித்தார். வெற்றிக்குப் பிறகு ஜெமிமா கூறுகையில், “இந்த வெற்றிக்காக இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் தனியாக இதை செய்திருக்க முடியாது. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், மற்றும் என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி. கடந்த ஒரு மாதம் மிகவும் கடினமாக இருந்தது. இது ஒரு கனவு போல உணர்கிறேன், இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை,” என்றார். மேலும், “மூன்றாவது பேட்டிங் வரிசையில் ஆடியது குறித்து கேட்டபோது, “நான் மூன்றாவது வரிசையில் ஆடுவது எனக்குத் தெரியாது. களத்திற்குச் செல்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் மூன்றாவது வரிசையில் பேட் செய்யப் போவதாகக் கூறப்பட்டது. இது என்னைப் பற்றியது அல்ல. இந்தியாவுக்காக இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்கு முன் முக்கியமான போட்டிகளில் தோற்றிருக்கிறோம். இன்று எனது அரை சதம் அல்லது சதம் பற்றியது அல்ல, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்,” என்று அவர் விளக்கினார்.

ஜெமிமா சர்ச்சை

முன்னதாக ஜெமிமா ரோட்ரிகஸின் தந்தையான இவான் ரோட்ரிக்ஸ், மும்பையில் உள்ள பிரபல கர் ஜிம்கானாவில் கிறிஸ்துவ மத கூட்டங்களை நடத்தியதாக புகார் வைக்கப்பட்டது. அவர் அனுமதி வாங்கியே கூட்டங்களை நடத்தி இருந்தார். இருந்தாலும் இது மதமாற்றக் கூட்டங்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்போது ஜெமிமா கடுமையான அழுத்தத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவரின் கிரிக்கெட் வரலாற்றில் அது மிக மோசமான காலம் ஆகும். இப்போது அதே ஜெமிமா.. இந்திய அணியை வெற்றிபெற வைத்து நன்றி ஜீசஸ் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Jemima thanks Jesus for coming back from being ostracized from the team due to a racist attack

Post Tags: