- 29
- 20250904

கிறிஸ்தவ பள்ளியில் படித்த.. நிர்மலா சீதாராமனை மதம் மாற்றினார்களா?
- கேரளா / டெல்லி
- 20250801
- 0
- 20
டெல்லி: மதமாற்ற புகாரில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சிபிஎம் கட்சியின் கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ், “நிர்மலா சீதாராமன் கிறிஸ்தவ பள்ளியில் படித்தார் அவரை யாராவாது மதம் மாற்றினார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் ரயில் நிலையத்தில், கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மத மாற்றம் செய்தல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவர்கள் ஊழியம் செய்வதற்காக நாராயண்பூர் என்கிற ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு பழங்குடியின குடும்பத்தினருக்கு கிறிஸ்தவ மதம் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு கன்னியாஸ்திரிகள் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்திருக்கிறார்கள். மூன்று கன்னியாஸ்திரிகள் மற்றும் நாராயண்பூரை சேர்ந்த 21 வயது பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் துர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நபர்கள், இளம்பெண்ணை மதமாற்றம் செய்து கடத்துவதாக ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாஸ்திரிகளை கைது செய்திருக்கின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 21 வயது இளம்பெண், தன்னை யாரும் கடத்தவில்லை, விருப்பப்பட்டுதான் கன்னியாஸ்திரிகளுடன் சென்றேன் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிபிஎம் கட்சியின் கேரள எம்பியனா ஜான் பிரிட்டாஸ் குரல் எழுப்பியிருக்கிறார். அவர் பேசியதாவது, “பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் அனைவரும் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். நீங்கள் கிறிஸ்தவராகிவிட்டீர்களா? இல்லையே, இந்துவாகத்தானே இருக்கிறீர்கள்.
அதேபோல, மருத்துவ சேவை மற்றும் கல்வித் துறைகளில் பாராட்டத்தக்க சேவை வழங்கும் கிறிஸ்தவர்களையும், கன்னியாஸ்திரிகளையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. இத்தகைய செயல்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கேரள பாஜக இந்த விவகாரத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. கன்னியாஸ்திரிகள் ஜாமீன் கோரி துர்க் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று கேரள பாஜக கூறி வந்திருந்தது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாமீனை எதிர்த்தனர். எனவே, கேரள பாஜகவின் கூற்று பொய் என நிரூபணம் ஆகி இருப்பதாக சிபிஎம் விமர்சித்திருக்கிறது.
Did Nirmala Sitharaman, who studied in a Christian school, convert to Christianity?