• Wednesday 23 October, 2024 11:30 AM
  • Advertize
  • Aarudhal FM

ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர்

இலங்கை:

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து ஐந்துவருடங்கள் கடந்தாலும் இன்னும் அதன் வடு ஆறவில்லை. தாக்குதல்களில் உயிரிழந்தோர் ஒருபக்கம் இருக்க காயமடைந்தவர்கள், அவயங்களை இழந்தோர் இன்றும் உடல், உள வேதனைகளுடன் அன்றாடம் போராடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம், கிழக்கில் சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்தன.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தின ஆராதனை ஆரம்பித்து அது முடிவடைவதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது.

அந்தவகையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது மகனை இழந்து மாற்றுத்திறனாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த திலினா ஹர்ஷனி அண்மையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார். ஈஸ்டர் தாக்குதலில் பலியான 315ஆவது நபர் அவராவார்.

திலினா ஹர்ஷனி மனவலிமை மிக்க, ஆற்றல்கள் நிறைந்த பெண். எத்தகைய விமர்சனங்கள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை புன்சிரிப்புடன் எதிர்கொள்வார். நீர்கொழும்பிலுள்ள பிரபல கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். பாடசாலையில் அனைவராலும் அறியப்பட்ட நடனக்கலைஞராகவும் இருந்தார்.

அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கவில்லை. தனது மூன்று பிள்ளைகளுடன் அவருடைய வாழ்க்கை அழகாய் நகர்ந்தது. எனினும் உயிர்த்த ஞாயிறு திருப்பலிக்காக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு சென்ற அவருக்கு எதிர்பாராத இழப்புகளும் ஏமாற்றங்களும் கிடைக்கும் என்பதை அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஒருநொடியில் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது.

அன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிறைவடைவதற்கு சிறிதுநேரமே இருந்தது. அனைவரும் உயிர்த்த இயேசுவின் திருச் சொரூபத்துக்கு முன்பாக ஆசிர்வாதத்துக்காக காத்திருந்தனர். அப்போது திலினவின் கையிலிருந்த ஆசிர்வதிக்கப்பட்ட நூல் கழன்றமையால் அதை கட்டுவதற்காக மூத்த மகனை தூக்கி தனது மடியில் அமர்த்திக்கொண்டார்.

அப்போது திடீரென ஒரு பயங்கர சத்தம், மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் அங்கும் இங்கும் ஓடினர். திலின பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அவரின் பின்னால் அமர்ந்திருந்த தாய் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். தாயார் உடனே பதறியடித்துக் கொண்டு மகளின் மற்றைய இரண்டு பிள்ளைகளையும் தேடி ஒருவழியாய் கண்டுபிடித்தார். அவர்கள் இருவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியிருந்தனர். எனினும் திலினவின் மடியிலிருந்த மூத்த மகன் உயிருடன் இருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து திலினவை தாயார் தேடியபோது அவர் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தார். உயிர் ஊசலாடிகொண்டிருந்து. அவரைச் சுற்றி இரத்த வெள்ளமாக காட்சியளித்தது. உடனே தாய் அங்கிருந்தவர்களின் உதவியுடன் திலினவை முச்சக்கர வண்டியில் ஏற்றி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்தார். 14மாதங்களின் பின்னர் இடது கண்ணை இழந்த நிலையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மீண்டு வீட்டுக்கு வந்தார் திலின, அப்போது தான் மூத்தமகன் உயிருடன் இல்லையென்பதை அவர் அறிந்துகொள்கின்றார். அவரால் அதை தாங்கிகொள்ளவே முடியவில்லை. கடைசியாக தனது மடியிலே மகனின் உயிர் பிரிந்ததை எண்ணி எண்ணி மனம் நொந்தார். எனினும் எந்த சூழ்நிலையிலும் அவர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. படுக்கையிலேயே இருந்தார். கிட்டதட்ட 5 பெரிய சத்திரசிசிச்சைகள், 3 சிறிய சத்திரசிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டிருந்தன. இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத போதும் மற்றைய கண்ணை பாதுகாப்பதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திலினவுக்கும் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் கத்தோலிக்க திருச்சபை பெரும் பலமாக இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கரித்தாஸ் அமைப்பின் ஊடாக திலினவுக்கான பிரத்தியேக அறையொன்று நவீன வசதிகளுடன் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் திலினவுக்கு பக்கபலமாக இருந்தனர். திலினவை காப்பாற்ற போராடினர். இலங்கையிலுள்ள முன்னணி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடமும் ஆலோசனைக்காக திலினவைக் கொண்டுசென்றனர். வைத்தியர் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைத்ததுடன் அதற்கு பெருந்தொகைப் பணம் செலவாகும் எனவும் தெரிவித்தார். குடும்பத்தினர் ஆரம்பத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்த போதிலும், அவருக்கு அனைத்து மருத்துவக் கட்டணங்களும் மருத்துவமனையால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் எந்தவொரு முயற்சியும் கைகூடவில்லை. நீண்டகால போராட்டத்துக்கு பின்னர் அவர் கடந்த 29ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்சமயம் பிள்ளைகள் இருவரும் தாத்தா, பாட்டியின் பாராமரிப்பில் இருந்து வருகின்றனர்.

திலினவின் இறந்த மூத்த மகனுக்கு அரசாங்கத்தால் வழக்கப்பட்ட நஷ்டஈட்டு தொகையையும் அவர் செலவழிக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதை ஒருகாலத்தில் பிள்ளைகள் இருவரும் எடுத்துக் கொள்ளட்டும் என்று திலின வைப்பிலிட்டதாகத் தெரியவருகின்றது. அதுமட்டுமின்றி அவருக்கு கிடைத்த உதவித்தொகையும் பிள்ளைகளுக்காக வைப்பிலிட்டதாக தெரியவருகின்றது.

எதுஎவ்வாறாயினும் திலின போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வசந்தா அருள்ரட்ணம்

பல கோடி செலவில் காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்

தாய்வான்: தாய்வான் நாட்டில் சீயாயி கவுண்டியில் அமைந்துள்ளது காலணி வடிவ கண்ணாடி தேவாலயம். தேவாலயம் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் இது வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முன்பு போட்டோசூட் மற்றும் திருமண விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்திற்குள் காதலர்களுக்கான நாற்காலி, பிஸ்கட்டு, கேக்குகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இதில் 32 க்கும் மேற்பட்ட நிறமுள்ள கண்ணாடி பேனல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. 1060களில் வாங் என்ற பெயர் கொண்ட 24 வயது  பெண் பிளாக் ஃபுட் நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் திருமணமானது நின்று போனது. அதன் பின்னரான காலத்தை அந்த பெண் திருமணமாகாமல் தேவாலத்திலேயே கழித்ததாக கூறப்படுகிறது. இவர் நோயால் பாதிக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் பெண்கள் தங்களுடைய மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகவே இந்த தேவாலயம் காலணி வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்குத்துப் பாறை மேல் குகைக் தேவாலய கட்டிடம்

அபுனா யெமடா குஹ் என்பது வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் அமைந்துள்ளது. ஒரு பெரிய மலைப் பாறையைக் குடைந்து செதுக்கிக் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஸ்துவ மத தேவாலயமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,580 மீட்டர் (8,460 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கெரால்டா மலைகளில் உள்ள அமைதியும் தூய்மையும் கொண்ட ஒரு குன்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது, இது உலகின் எளிதில் அணுக முடியாத தேவாலயங்களில் ஒன்றாகும்.

தேவாலயம் ஒரு குன்றின் விளிம்பில் உள்ள திடமான பாறையால் செதுக்கப்பட்டது. அதை அடைய, பார்வையாளர்கள் செங்குத்துப் பாறை முகத்தில் ஏற வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பாறையில் அமைந்திருக்கும் கைப்பிடிகள் மற்றும் கால்தடங்களைத் தான் பயன்படுத்தித் தான் ஏறுக்கிறார்கள். இதற்கு நல்ல உடல் தகுதி தேவை.

6ஆம் நூற்றாண்டில் பைசண்டைன் பேரரசில் இருந்து எத்தியோப் பியாவிற்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த ஒன்பது பேரில் ஒருவரான அபுனா யெமாதா குஹ் என்பவரால் இது உருவாக்கப்பட்டுள்ளது. தேவாலயம் இன்னும் செயலில் உள்ள வழிபாட்டுத் தலமாக உள்ளது. பாதிரியார்களும் சுற்றுலாப் பயணிகளும் இதைக் காண்பதற்கான பயணத்தைத் தவறாமல் மேற்கொள்கின்றனர்.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் நடந்து சென்று பார்க்கும் வகையில் உள்ளது.

Nandi Statue, Christian Church - A historical wonder buried in Mettur Dam நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

நந்தி சிலை

மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆன நிலையில், அணை கட்டப்பட்ட போது 60 சதுர மைல் பரப்பளவு, நீர்த்தேக்கப் பகுதியாக அளவீடு செய்யப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறும்போது, வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுச் சென்றனர். இவ்வாறு நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில் மற்றும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தை மக்கள் இடிக்காமல் விட்டுச் சென்றனர். சுண்ணாம்பு கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வழிபாட்டு தலங்கள், ஆண்டுக்கணக்கில் தண்ணீரில் மூழ்கி கிடந்தாலும் சிதிலமடையாமல் காணப்படுகிறது.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

புகழ்பெற்ற நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியும் சமயங்களில், வெளியே தெரியும் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை சிலர் பரிசலில் அருகில் சென்று பார்த்து வருவது வழக்கம். அப்போது, சமூக விரோதிகள் சிலர் நாச வேலையில் ஈடுபட்டதால், கிறிஸ்தவ இரட்டை கோபுரத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. நந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஆனால், அணைக்கான நீர்வரத்து திருப்திகரமாக இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக சரிந்தது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுவதால் மேட்டூர் அணையில் உள்ள நீர் அதிரடியாக சரிந்து வருகிறது. எனவே, தற்போது மேட்டூர் செல்லும் சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் இல்லத்தில் இருந்து பரிசல் மூலம் மேட்டூர் அணை அடியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் தற்போது காண முடிகிறது.

இதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் மேட்டூர் பண்ணவாடிக்கு சென்று ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நந்தி சிலையை வழிபட்டு வருகின்றனர்.

நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.

செல்லும் வழி: 

சேலத்தில் இருந்து மேட்டூர் சென்று அங்கிருந்து மூலக்கடை, சின்ன மேட்டூர், கொளத்தூர் வழியாக 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணவாடி பரிசல் இல்லம் சென்றடைந்தால் கரையில் இருந்து பார்க்கும் தொலைவில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் தெரியும்.

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் பண்ணவாடி பரிசல் துறைக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற பின் கட்டணம் செலுத்தி பரிசல் மூலமாக ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தை அருகில் சென்று காண முடியும். ஆனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் நடந்துசென்று பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து பண்ணவாடி பரிசல் துறைக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகம் இதற்கு தீர்வு காணும் விதமாக விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அதிக அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

மரம் வீழ்ந்து தேவாலயத்திற்கு சேதம்

இலங்கை: மாரவில – தல்வில பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில், அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

நேற்று (03 June 2024) ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இருந்த பெரிய மரம் சரிந்து தேவாலயம் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த தேவாலயத்தின் ஒரு பகுதி மற்றும் கூரை என்பவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற போது, அந்த தேவாலயத்திற்குள் எவரும் இருக்கவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தேவாலயத்தின் மீது வீழ்ந்த மரத்தின் கிளைகளையும், சேதமடைந்த கட்டிடங்களையும் அப்பகுதி மக்கள் அகற்றி வருகின்றனர்.

அண்ணாமலை தருமபுரி கிறிஸ்தவ தேவாலயத்தில் என்ன செய்தார்? எதிர்ப்பும், வழக்கும் ஏன்?

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு, வழக்கு - என்ன நடந்தது?

11 ஜனவரி 2024

தருமபுரியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றதாகவும் கூறி பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அங்கே என்ன நடந்தது?

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இரு இடங்களிலும் நடப்பதாக இருந்தது.

இதற்காக அண்ணாமலை சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தின் பொம்மிடி வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் உள்ள பி.பள்ளிப்பட்டியில் இருக்கும் புனித லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அண்ணாமலை அன்று மாலை 5.50 மணி அளவில் அவர் ஆலயத்திற்கு வந்து லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறுக்கிட்டு அவரைத் தடுத்து நிறுத்தினர்.

“எங்கள் மக்களைக் கொன்றார்கள், எங்கள் தேவாலயங்களை இடித்தார்கள்” என்று சில இளைஞர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

அவர்களிடம் சென்று பேசிய அண்ணாமலை, “அண்ணே, நான் சர்ச்சுக்கு வருவதில் என்ன பிரச்னை?” என்று கேட்டார். “அங்கு நடந்தது மத பிரச்னை அல்ல. இரு பழங்குடியினர் இடையிலான பிரச்னை. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதிதாக ஒரு சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து கொடுத்ததை மற்றொரு பிரிவினர் எதிர்த்தார்கள்.

இரு பிரிவுகளிலுமே இந்துக்களும் இருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இதில் மத அரசியல் செய்யக்கூடாது. இதில் மத அரசியல் செய்வது யார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். சண்டை நடந்தது அவர்களுக்குள். இதில் மாநில அரசுக்கு என்ன தொடர்பு?

உயர் நீதிமன்ற ஆணையின்படி இது அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முழு துணை ராணுவப் படையும் உள்ளே சென்றது. எல்லோரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். 2009இல் இலங்கையில் ராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பிரச்னை நடந்தது. 1,60,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்றைக்குப் பேசுபவர்கள் எங்கே போனார்கள்? ஆகவே மதத்தை கோவிலுக்குள்ளும் தேவாலயங்களுக்கு உள்ளும் கொண்டு வராதீர்கள்,” என்றார்.

அதற்குப் பதிலளித்த இளைஞர், “மதத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. யார், என்ன என்ற சுய அறிவோடு பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதில் நிறைய படிச்சிட்டேன். மத்திய அரசு அவர்களைத் தடுக்கவில்லை,” என்றார்.

கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு, வழக்கு - என்ன நடந்தது?

இதையடுத்து, “அரசியல் கட்சி ஆளும் தி.மு.க.காரன் பேசுற மாதிரி பேசக்கூடாது” என்றார் அண்ணாமலை. இதற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில், கோபமடைந்த அண்ணாமலை, “சர்ச் உங்க பேரில் இருக்கா? எல்லா மக்களுக்கும் உரிமை இருக்குல்ல. தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. 10,000 பேரைக் கூட்டி வந்து தர்ணா பண்ணா என்ன பண்ணுவீங்க,” என்று கேள்வியெழுப்பினார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞர்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்குப் பிறகு லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை, தேவாலயத்திற்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். இந்தக் காட்சிகள் எல்லாம் வீடியோவாக பதிவு செய்யபட்டன, பின்னர் சமூக ஊடகங்களில் பரவின.

இதற்குப் பிறகு இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்டில், “இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்,” என்று கூறி, புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

இதற்குப் பிறகு பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பொம்மிடி காவல்துறையில், புகார் அளித்தார். அந்தப் புகாரில், 10,000 பேருடன் வந்து தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு அண்ணாமலை மிரட்டியதாக புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியைக் குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்ற நிலையில், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வருவதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கும் இளைஞர் கார்த்திக்கிடம் பேசினோம்.

அவர், “கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் எல்லோரும் வரலாம் என்பது உண்மைதான். தேவாலயத்தில் இருந்து யாரும் அவரை அழைக்கவில்லை. உடன் இருக்கும் சிலர் ஏற்பாடு செய்துதான் அவர் வந்தார்.

ஆனால், பிற மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது பா.ஜ.க. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதால் அதைப் பற்றிக் கேட்டோம். அதனால்தான் அவர் வரக்கூடாது என்று சொன்னோம். இதை அரசியல் ரீதியாகச் செய்யவில்லை. இப்போது அவர் பேசிய வார்த்தைகளை வைத்து அவர் மீது புகார் கொடுத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

ஆனால், கடவுளை வழிபடச் சென்றவரைத் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழிபடச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அராஜகம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி.

“எல்லோருக்கும் சென்று வழிபடக் கூடிய பொதுவான ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் யாரையும் வரக்கூடாது எனத் தடுப்பது அராஜகம். அப்படித் தடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல், வழிபடச் சென்றவர் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்?

அண்ணாமலை கிறிஸ்தவ மதத்தைப் போற்றத்தானே அங்கே சென்றார்! ஆனால், அவர் மீது எதற்காக வழக்குப் பதிந்திருக்கிறார்கள்? உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை அழிப்பேன் என்கிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார் நாராயணன் திருப்பதி.

கேரளாவில் குண்டு வெடிப்பு எதிரொலி: கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.  

police protection for churches

தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழந்தார். 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர், மேலும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

police security 2

இந்த சம்பவத்தின் எதிரொலியாக  கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கோவை மாநகரின் முக்கியமான 15 தேவாலயங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

police security 3

மேலும், 2 வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் மாநகர் மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.