
TN 12th Result 2025: சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் +2 தேர்வில் தேர்ச்சி.. சோகத்தில் குடும்பத்தினர்
- Dindukal
- 20250508
- 0
- 547
வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்.
தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இத்தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சுகுமார்(18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுதேர்வு எழுதி முடித்திருந்தார். இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி சுகுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 433 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றிருந்தார். சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.