• Tuesday 18 February, 2025 10:22 AM
  • Advertize
  • Aarudhal FM

பாதுகாக்கும் தேவன்

பாதுகாக்கும் தேவன் (1 சாமுவேல் 19ம் அதிகாரம்)

சவுல் தாவீதின் மேல் பொறாமை கொண்டு தந்திரத்தினாலும் வஞ்சனையினாலும் அழித்துப்போட முயற்சித்தான் (1 சாமு 18 அதி). ஆனால், கர்த்தர் தாவீதோடிருந்தபடியால் (1 சாமு 18:12, 14, 28) அவரை காப்பாற்றி கனப்படுத்தினானர் (1 சாமு 18:30).

வஞ்சனையும் சூழ்ச்சியும் கைகொடாதபடியினால், தற்போது சவுலே களத்தில் இறங்கி தாவீதை கொன்றுபோட முயற்சிக்கின்றான் (1 சாமு 19:1). அந்த தீமையான யோசனைகளில் தேவன் தாவீதை எவ்விதமாக பாதுகாத்தார் என்பதை இந்த அதிகாரம் நமக்கு கற்றுத் தருகிறது.

“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங் 121:4) என்கிற வேத வசனத்தின்படி, நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளின் நடுவே, “பாதுகாக்கும் தேவன்” உண்டு என்பதை நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்துவோம்.

தாவீதை நான்கு வித சூழ்நிலைகளில் இந்த பகுதியில் கர்த்தர் பாதுகாத்தார்.

1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்தினார்.” (1 சாமு 19:1-7)

சவுல் யோனத்தானோடும், தன் ஊழியக்காரர்களோடும் பேசி தாவீதை கொலை செய்ய முயன்ற போது, யோனத்தானின் ஆலோசனையின் மூலம் (1 சாமு 19:4,5) தாவீதுக்கு ஏற்பட இருந்த “தீமையை தடுத்து நிறுத்தினார்.”

நம்முடைய வாழ்விலும் நமக்கு நேரிட இருந்த தீமைகளை தடுக்கும் படிக்கு, நல்ஆலோசனை கொடுக்க தேவனால் அனுப்பப்பட்ட யோனத்தான்களுக்காக கர்த்தரை துதிப்போம்.

2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவித்தார்.” (1 சாமு 19:8-10)

தாவீதை கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்ட சவுல், தாவீதின் உயர்வைக் கண்டு, மறுபடியும் அவனை கொன்று போட வேண்டும் என்று மனம் மாறினார். ஆகையால், தன் வீட்டில் இருந்த போது, தன் ஈட்டியை கையில் பிடித்து (வீட்டில் இருக்கும் போது சவுலின் கையில் ஆயுதம் எதற்கு), தாவீதை குத்தி போடுவதற்கு திட்டமிட்டு அதை முயற்சித்தான்.

தேவனோ, சவுலின் சதி திட்டத்திலிருந்து, “தன்னை தப்புவித்துக் கொள்ள தாவீதிற்கு ஞானத்தை கொடுத்தார்.” 

  • சவுல் இரண்டாம் முறை ஈட்டியை எறிகிறதற்கு தாவீது இடம் கொடுக்கவில்லை. (ஒப்பிடுக: 1 சாமு 18:11= 1 சாமு 19:10)

நமக்கு எதிரான சதி திட்டங்களில் இருந்து “தப்புவித்துக்கொள்ள” ஞானத்தை அருளுகின்ற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.” (1 சாமு 19:11-18)

தாவீதை அவன் வீட்டிலேயே கொன்று போடும்படி சவுல் சேவகர்களை அனுப்புகின்றான். ஒருவேளை தன் மகள் மீகாள் தனக்கு ஒத்தாசையாக இருப்பாள் என்று சவுல் எண்ணி இருக்கலாம் (1 சாமு 19:17). ஆனால் மீகாளோ, தாவீதை எச்சரித்து, தப்பி ஓட பண்ணினாள்.

தாவீதிற்கு மீகாளின் மூலமாக தயவு கிடைத்தாலும், தாவீதை தப்புவிக்க அவள் நாடகமாடுகிறாள், பொய் சொல்லவும் தயங்கவில்லை (1 சாமு 19:13, 17). தன் வீட்டிலே சுரூபத்தை வைத்திருந்த மீகாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்ணாக தோன்றவில்லை.

இதனால், நாம் நம்மை பாதுகாக்க பொய் சொல்லி நாடகமாடலாம் என்று அர்த்தமல்ல. நன்மையை பயக்கும் என்றாலும் பொய் பொய்யே, பாவம் பாவமே. 

ஆனால், நாம் கற்றுக் கொள்ளும் பாடம். தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு நன்மை செய்யவும் பூரணமற்ற மனிதர்களையும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

எ.கா:-

  • வேசியாகிய ராகாப் (யோசு 2:1-13)
  • பெர்சிய ராஜாவாகிய கோரேஸ் (எஸ் 1:1,2)

சிந்தனைக்கு: தேவபக்தியுள்ள யோனத்தானின் மூலமும் தாவீதை தப்புவித்தார். தேவபக்தி இல்லாத மீகாளின் மூலமாகவும் தாவீதை தப்புவித்தார். இதற்காக, “அவர்கள் இருவரும் கையாண்ட முறைகள்” அவர்கள் யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளில் எவரைக் கொண்டும் நமக்கு “தயவு செய்கின்ற” தேவனுக்கு ஸ்தோத்திரம்.

4. எதிராய் வந்தவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.” (1 சாமு 19:18-24)

இறுதியாக தாவீது தன்னை தப்புவித்துக் கொள்ள சாமுவேலிடத்தில் அடைக்கலம் புகுந்தான். இதனை அறிந்த சவுல் தாவீதை பிடித்து வரும்படி தனது சேவகர்களை மூன்று கூட்டமாய் அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தேவ ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதாவது தாங்கள் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, வேறொரு காரியத்தை செய்யும் படியாய் தேவன் அவர்களைத் தாண்டிப்போக பண்ணினார். சவுலுக்கும் அதே கதி தான் நேர்ந்தது.

எதிராய் வந்தவன் தான் எதற்காக வந்தேன் என்பதை மறந்து, வஸ்திரம் இல்லாது ஒரு நாள் முழுவதும் விழுந்து கிடக்கிறான். இது தாவீது தப்பி போக ஏதுவாக இருந்தது.

நமக்கு எதிராய் வருகிறவர்களையும் கட்டுப்படுத்தி, அவர்களை திசை திருப்பி! நம்மை அவர்கள் தாண்டி போகச் செய்து, நம்மை பாதுகாக்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

பாதுகாக்கும் தேவன்

1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்துகின்றார்.”

2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவிக்கின்றார்.” 

3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.”

4. எதிராய் வருகின்றவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.”

கே. விவேகானந்த்

மாபெரும் விலை

தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர் இஸ்ரவேலை வாதித்தார். தேசத்தின் மேலே நியாயத்தீர்ப்பு வந்தது.

கர்த்தர் மூன்று காரியங்களை தாவீதுக்கு முன்பாக வைத்தார். மூன்று வருஷ பஞ்சமோ? பகைஞரின் பட்டயம் பின்தொடர சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடும் மூன்று மாத சங்காரமோ? அல்லது கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலெங்கும் சங்காரமுண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றை தெரிந்துகொள்ளும்படி தாவீதிடமே விடப்பட்டது. மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. கொடிய இடுக்கண்ணில் அகப்பட்ட தாவீது கர்த்தருடைய கரத்தில் விழுந்தார். கர்த்தர் தேசத்தின் மீது கொள்ளை நோயை வரப்பண்ணினதினால் இஸ்ரவேலிலே 70,000 பேர் மடிந்து போனார்கள் (1 நாளாகமம் 21:1,7-14). பாவத்திற்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேறியது.

தேவனுடைய பிரமாணம் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நீட்டப்படுகிறது. முதல் மனிதனும் தேவனுடைய கட்டளைய மீறி பாவம் செய்தபோது, ஏதேனிலே சுடரொளிப்பட்டயம் வைக்கப்பட்டு, மனுகுலமும் தேவ கோபாக்கினைக்கு என்று நியமிக்கப்பட்டது (ஆதியாக. 3:24), அவ்விதம் ஒரு மனிதனுடைய மீறுதலினாலே, பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணமும் நம் எல்லோரையும் ஆண்டுகொண்டது (ரோமர் 5:17).

எருசலேமுக்கு வந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்ட கர்த்தர், கர்த்தருடைய தூதன் நின்ற ஓர்னானின் களத்திலே பலிசெலுத்தும்படி தாவீதுக்கு கட்டளையிட்டார் (1 நாளா. 21:15,18). தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறுத்தப்பட பலி செலுத்த வேண்டும், இதுவே பிரமாணம். தாவீது போய், ஓர்னானிடத்திலே அந்த களத்தை கேட்டார், இலவசமாக அல்ல, அதுபெறும் விலையை (அதற்குரிய சரியான விலையை) தருவேன் என்றார். 600 சேக்கல் பொன்னை நிலத்திற்குரிய பெறும் விலையாக கொடுத்து, நிலத்தை வாங்கி அங்கே கர்த்தருக்கு பலியிட்டார், வாதை நிறுத்தப்பட்டது (1நாளா 21:24-28). வாதை நிறுத்தப்பட விலை கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தது (1நாளா. 21:22).

பாவத்தினிமித்தம் நாமும் கோபாக்கினைக் கென்று நியமிக்கப்பட்டிருந்தோம், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நமக்கு விரோதமாக நீட்டப்பட்டதாக இருந்தது. ஆனால் எருசலேமுக்கு வந்த தீங்கை கண்டு மனஸ்தாபப்பட்ட கர்த்தர் (1 நாளாகமம் 21:15) நமக்காகவும் மனமிறங்கினார்.

அன்றைக்கு கோபாக்கினை மாற்றப்பட பலிசெலுத்தும்படி எருசலேமிலே ஓர்னானின் களம் தெரிந்துகொள்ளப்பட்டது. நமக்கோ கொல்கொதாவின் கொலைக்களம் தெரிந்து கொள்ளப்பட்டது. அன்றைக்கு நிலத்திற்கு பெறும்விலை கொடுக்கப்பட்டது. நமக்கோ “மாபெரும் விலை” கொடுக்கப்பட்டது. அது 600 சேக்கல் பொன்னல்ல, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே!

“அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18,19).

மாபெரும் விலையாக, நம்மை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனையே இயேசு கிறிஸ்து நமக்காக கொடுத்தார் (மாற். 10:45). இஸ்ரவேலிலே வாதை நிறுத்தப்பட விலைகொடுக்க வேண்டியதாயிருந்தது. நம்மேலிருந்த கோபாக்கினை மாற்றப்பட தேவகுமாரன் தன்னையே பதில் விலையாக கொடுத்தார்.

நாம் பெற்ற இரட்சிப்பு இலவசமானாலும் அதை நமக்கு சம்பாதித்து கொடுக்கும்படி மாபெரும் விலை சிலுவையில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

நம்மை மீட்க தன்னையே பலியாக கொடுத்த கிறிஸ்து இயேசுவை நினைவுகூர்ந்து பிதாவாகிய தேவனை தொழுதுகொள்வோம்! ஆமென்.

Thanks to Bro.Vivekananth

கர்த்தருடைய கண்கள்

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை, அவருடைய கண்கள் எங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. மனுபுத்திரர்களை கண்ணோக்கிக் கொண்டிருக்கிறது என்று வேதாகமம் சொல்கிறது.

கர்த்தருடைய கண்களை குறித்து தேவனுடைய மனிதர்களது சாட்சியையும், கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கப் போகிறோம்.

கர்த்தரது கண்களைக் குறித்த தேவனுடைய மனிதர்களின் சாட்சி:

1. ஆகார் : நீர் என்னைக் காண்கிற தேவன். ஆதி : 16 : 13

2. யோபு : உம்முடைய கண்கள் என் மேல் நோக்கமாயிருக்கிறது. யோபு : 7 : 8

3. தாவீது : என் கருவை உமது கண்கள் கண்டது. சங் : 139 : 16

4. பேதுரு : நீதிமான்கள் மேல் நோக்கமாக இருக்கிறது. 1 பேதுரு : 3 : 1

5. எரேமியா : உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது. எரே : 5 : 3

கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் நோக்கமாயிருக்கிறது.

1. தேசத்தின் மீது கர்த்தருடைய கண்கள். (Eyes on the Nation) உபா : 11 : 12

2. ஆலயத்தின் மீது கர்த்தருடைய கண்கள். (Eyes on the Temple) 2 நாளாக: 6 : 20, 7:15, சங்கீதம் : 11 : 4, நெகேமியா : 1 : 6

3.  பூமியின் மீது கர்த்தருடைய கண்கள் (Eyes on Earth) 2 நாளாக : 16 : 9, சங்கீதம் : 14 : 2; சங்கீதம் 33 : 13,14, சங்கீதம் 102 : 20

நம்முடைய கண்கள் – Our Eyes.

  • ஒத்தாசைக்கு நேராக  சங் : 121 : 1
  • வேலைக்காரரின் கண்களைப் போல. சங் : 123 : 1 , 2

கர்த்தரின் கண்கள்:

  • தேசத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது
  • ஆலயத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது
  • பூமியின் மீது வைக்கப்பட்டிருக்கிறது.
  • நல்லோர் மீதும் தீயோர் மீதும் அவர் கண்ணோக்கமாயிருக்கிறார்.
  • உங்கள் ஜெபத்திற்கு அவரது கண்கள் திறந்த வண்ணமாய் இருக்கிறது.
  • அவர் கண்கள் உங்கள் மேல் நோக்கமாய் இருக்கிறது.

“கர்த்தருடைய கண்கள் எப்போதும் என்மேல் நோக்கமாக இருக்கிறது” என்று சொல்லுங்கள்.

தேவகிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமேன்.

போதகர். ஜாண்ராஜ், மும்பை

இப்போதும் யாக்கோபே பயப்படாதே

இஸ்ரவேல் ஜனங்களின் மேல்  இரக்கமாயிருக்கின்ற தேவனைத் தான்  ஏசாயா 43ம் அதிகாரத்தில்  பார்க்கின்றோம். 

தமது ஜனங்களை பார்த்து “பயப்படாதே” என்றார் (ஏசா 43 :1, 5). அவர்களின் பாவமே பயத்தின் காரணம் (ஏசா 42 :24). ஆனாலும் மன்னித்து மறக்கிற கர்த்தர் நான் என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் (ஏசா 43 :25). 

நமது பாவத்தினிமித்தம் அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கும்போது, மனந்திரும்பி அவரண்டை வந்தால், அதை மன்னித்து மறக்கிற கர்த்தர் மட்டுமல்ல, அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். தம்முடைய ஜனங்களின் மேல் தேவன் எவ்வளவாய் அன்புள்ளவராய் இருக்கிறார் என்பதை தான் இந்த அதிகாரத்தின் முதல் பகுதி விளக்குகிறது (ஏசா 43 :1-7).

 இப்போதும் யாக்கோபே பயப்படாதே ஏசாயா 43:1 

  1. நீ என்னுடையவன். (ஏசா 43 :1)

உன்னை  சிருஷ்டித்தேன், உருவாக்கினேன், மீட்டுக்கொண்டேன், பேர்சொல்லி அழைத்தேன்.

  1. நான் உன்னுடன் இருக்கிறேன். (ஏசா 43 :2)

தண்ணீரை கடக்கும்போதும், ஆறுகளை கடக்கும்போது, அக்கினியில் நடக்கும்போதும் உடனிருந்து பாதுக்காப்போன்.

சோதனை வேளைகளில் கலவரப்படாமல் அதை பொறுமையாய் நடந்து செல்லுங்கள் (ஓட வேண்டாம்). நான் உங்களுடன் இருக்கிறேன் என்கிறார்.

  1. உன்னை விலை கொடுத்து மீட்டிருக்கிறேன். (ஏசா 43 :3)

நம்மை மீட்கும் பொருளாய் தமது சொந்த குமாரனையே தந்திருக்கிறார்.

  1. நீ எனக்கு முக்கியமானவன்(ள்). (ஏசா 43 :4).

நம்மை விலைமதிபுள்ள பொக்கிஷமாய் எண்ணுகிறார்.

  1. நான் உன்னை சிநேகித்தேன். (ஏசா 43 :4).

நம்மேல் அவர் கொண்ட அன்புக்காக எதையும் தர அவர் ஆயத்தமாயிருக்கிறார். தமது சொந்த குமாரனையே தந்துள்ளாரே!

  1. நான் உன் சந்ததியை கூட்டிச்சேர்ப்பேன். (ஏசா 43 :5-7).

உன்னை பழைய நிலைக்கு திரும்பப்பண்ணுவேன்

நமக்கு எதிர்கால நம்பிக்கையை தருகிறார். 

  1. உன்னை என் நாம மகிமைக்கென்று சிருஷ்டித்தேன். (ஏசா 43 :7).

நம்மூலமாய் அவர் மகிமைபடுவார். அதற்காகவே நம்மை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். (ஏசா 43: 21).

ஆகையால் யாக்கோபே, பயப்படாதே!

கே. விவேகானந்த்

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா 9:6) என்றான். கர்த்தத்துவம் என்பது “ஆளுகை” அல்லது “அரசாட்சியை” குறிக்கும். நம்முடைய ஆண்டவர் இராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

“இஸ்ரவேலை ஆளப்போகிறவராக” (மீகா 5:2) மீகாவும், “இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோலாக” (எண் 24:17) பிலேயாமும், இயேசுகிறிஸ்துவை முன்னுரைத்தது அவர் தோளின் மீதிருந்த கர்த்தத்துவத்தை (இராஜரீகத்தை) தூரத்திலேயே கண்டதினாலே.

அவருடைய மானிட வாழ்விலும் அவரின் தோளின் மேலிருந்த கர்த்தத்துவத்தை ஜனங்கள் கண்டார்கள்.

* கிழக்கிலிருந்து தேடி வந்த சாஸ்திரிகள். (மத் 2:1,2,11).

* நாத்தான்வேல் (யோவா 1:48,49).

* எருசலேமின் ஜனங்கள் (யோவா 12:13).

சிலுவையிலும் அவர் கர்த்தத்துவம் மாறவில்லை, என்பதை அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் வார்த்தைகள் புலப்படுத்துகிறது (லூக் 23:42). அவரை பரிகாசம்பண்ணும்படியாக “நசரேயனாகிய இயேசு யூதருடைய இராஜா” என்று எழுதப்பட்டதும் (யோவா 19:19), அவரின் கர்த்தத்துவம் வெளிப்படும்பொருட்டே.

உயிர்தெழுந்த கிறிஸ்துவாய் தம்மை சீஷர்களுக்கு வெளிப்படுத்தினபோது, “ஆண்டவரே இக்காலத்திலா இராஜியத்தை இஸ்ரவேலுக்கு திரும்ப கொடுப்பீர்” (அப் 1:6) என்று கேட்டதும், அவர் தோளின்மீதிருந்த கர்த்தத்துவத்தினிமித்தமே. மகிமையிலும் அவர் இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்.

ஆனால், கர்த்தத்துவத்தை சுமந்த அதே தோள், சாபத்தின் சின்னமாகிய சிலுவையை சுமந்ததை யோவான் 19:17-ல் வாசிகிறோம். சிலுவையை சுமந்தார் என்றால் நம்முடைய துக்கங்களை (ஏசா 53:4), அக்கிரமங்களை (ஏசா 53:11), பாவங்களை (ஏசா 53:120 சிலுவையின் உருவில் சுமந்தார். நாம் அனுபவிக்க வேண்டிய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். “நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சுமந்தார்” (1 பேதுரு 2:24). நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கவே அவர் வெளிப்பட்டார் (1 யோ 3:5). உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானார்.

அவர் சிலுவையை சுமந்தது துக்கத்தோடே அல்ல; தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டே (எபி 12:2). அது எந்த சந்தோஷம் தெரியுமா? நம்மை அவர் தோளின் மீது சுமக்கப்போகிற சந்தோஷம் (லூக் 15:5,6). ஆம், காணாமல் போன ஆட்டை கண்டுபிடித்த மேய்ப்பன் தன் தோளின் மீது ஆட்டை சுமந்து கொண்டு சந்தோஷப்பட்டதுபோல, நம்மை அவரின் கர்த்தத்துவமுள்ள தோளில் உட்கார வைத்து சந்தோஷப்படுகிறார். அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக!

தாவீதின் திறவுகோலை உடையவரின் கர்த்தத்துவமுள்ள தோலில் நாம் இராஜரீக கூட்டமாய் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 2:9). அவருடைய அன்பு அளவிடப்படமுடியாது.

அவர் தோளில் அமர்ந்திருக்கும் நாம் சிலுவையின் உருவில் நம்முடைய பாவங்களை சுமந்த தோளிலுள்ள காயங்களை முத்தம்செய்து, கர்த்தத்துவமுள்ள தோளில் கனிவாய் நம்மை அமரவைக்க கடினசிலுவை சுமந்தவரை நினைவுகூர்ந்து கருத்துடனே தொழுதிடுவோம்! ஆமென்.

Thanks to Bro. vivekananth

அழுகையின் ஆற்றல்

“அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து…”  சங் 86:6

அழுகை – சூழ்நிலைக்கேற்ற நிலைகளில் 

  • குழந்தை தாய்ப்பாலுக்கும், 
  • பிள்ளைகள் தேவைகளுக்கும், 
  • நாம் நமது உடலில் உண்டாகும் வேதனையிலும், 
  • மன அழுத்தங்களிலும், 
  • தவறுகளை உணரும்போதும், 
  • வெற்றியிலும், தோல்வியிலும், 
  • உறவுகள் நெருங்குகையிலும் விலகுகையிலும், 
  • லாபத்திலும் நஷ்டத்திலும், 
  • விவஸ்தையே இல்லாம அழுகுறீயே என காரணமின்றியும். 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அழுகை இடம்பெறுகிறது. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதும் அழுதுகொண்டே பிறக்கும் நாம், போகும்போது அநேகரை அழ வைத்து விட்டும் போகிறோம், இவையெல்லாம் இயற்கை. ஆயினும்…, 

ஆண்டவர் சமூகத்தில் அழுவது ஆற்றல் மிக்கது

ஏனெனில், தேவ சமூகத்தில் அழும்போது… 

1.  தேவனின் – கனிவான கவனம் நம்மீது திரும்புகிறது. லூக் 23:27-28

2. தேவன் – எழுந்து தம் ஜனங்களுக்காக செயல்படுகிறார். யோவேல் 2:17-18

3. தேவன்– வனாந்தரத்திலும் வாக்கருளி, வழி காட்டுகிறார். ஆதி 21:16-22

4. தேவன் – நாம் இழந்ததையெல்லாம் திரும்பக்கொடுக்கிறார். 1 சாமு 30:1-19

5. தேவன்– முன்னோக்கி ஓடின காலத்தின் கடிகாரத்தின் முள்ளை, பின்னோக்கித் திருப்பினார். ( ஆரோக்கிய வாழ்வுக்காக ) ஏசா 38:2-8

6. தேவன் – எதிரான காரியங்களை மாற்றியமைக்கிறார். எஸ் 9:1-8:3

7. தேவன் – தம்முடைய, நிலையான ஆசீர்வாதங்களைத் தருகிறார். ஓசி 12:4

சில நேரங்களில் அழுகை அவசியமற்றது எனத் தோன்றலாம், ஆனால் 

தேவ சமூகத்தில் அழுகை ஆற்றல்மிக்கது 

கே. விவேகானந்த்

தேவன் இப்போதும் நம்மோடு பேசுகிறாரா?

இந்த கேள்வி சில தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய சிருஷ்டிகர் தம்முடைய சிருஷ்டிப்போடே எப்பொழுதும் பேசவே விரும்புகிறார். ஆம், அவர் பேசுகின்ற தேவன் (ஆதி 3 : 9 ; 6 : 13 ; 12 : 1).

நம்முடைய தேவன் ஏன் நம்மோடு பேச விரும்புகிறார், எப்படி பேசுகிறார், யார் மூலமாக அல்லது எதன் மூலமாக பேசுகிறார், பேசுகிறது அவர்தானா? என்பதை நாம் சிந்தித்து அறியவேண்டியது அவசியம்..

தேவன் ஏன் நம்மோடு பேசுகிறார்?

முதலாவது நாம் தேவனுடைய பிள்ளைகள். தகப்பன் எப்பொழுதுமே தன் பிள்ளைகளோடு பேசவே விரும்புகிறார். நம்மோடு அவர் பேசுவதன் மூலம் அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை புரிந்துகொள்ள செய்கிறார். காரணம், நாம் அவருடைய சித்தத்தின்படி நடக்க வேண்டுமென அவர் விரும்புகிறார் (யோவா 10:3,4). அவர் நம்மோடு பேசுகிறபோது நாம் அவருக்கு செவி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எபி 12 : 25ல் வாசிக்கிறோம் பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்.

தேவன் எப்படி பேசுகிறார்?

தேவன் நம்மோடு நேரடியாகவே பேச விரும்புகிறார் “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபிரேயர் 1:1,2) என்று வேதம் சொல்லுகின்ற பிரகாரமாய், வார்த்தையாகிய தம்முடைய குமாரன் மூலமாகவே நம்மோடு பேசுகிறார்.

  • வேத வாக்கியங்களின் மூலமாய் நம்மோடு பேசுகிறார். 2 தீமோ 3:15-17

எழுதி கொடுக்கப்பட்ட வேதாகமம் தேவசித்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது.நாம் நன்றாய் அறிந்திருக்கிறபடி, தேவன் என்னோடு பேச வேண்டுமென ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும் போது வேத வசனத்தின் மூலமாக தேவன் நம்மோடு நேரிடையாகவே பேசுகிறார். “வேதம் தேவனின் குரலிலேயே நம்மோடு பேசுகிறது” என்றார் சி.எச். ஸ்பர்ஜன்.

நாம் ஆயத்தத்தோடே அவர் பேச காத்திருக்கவேண்டும் (சங் 119 : 148), 

தேவனோடுகூட செலவிடும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நிச்சயமாய் நமக்கு பிரயோஜனமுள்ளதாயிருக்கும் (ஏசா 48 : 17).

  • தம்முடைய தாசர்களைக் கொண்டு தேவ சமூகத்தில் கூடிவரும்போது நம்மோடு பேசுகிறார்

தேவன் நம்மோடு நேரடியாய் வேத வசனத்தின் மூலம் நம்மோடு பேசின காரியங்களை நாம் தேவ சமூகத்திற்கு செல்லும்பொழுது, தேவன் நமக்கு கொடுத்திருக்கிற மேய்ப்பர்களைக் கொண்டு நம்மோடு பேசின விஷயத்தை உறுதிப்படுத்துகிறார் (எசே 43 : 6, அப் 10 : 33)

  • தேவ பிள்ளைகளைக் கொண்டு பேசுகிறார் (அப் 18 : 26)
  • ஆவியானவர் மூலமாக நம்மோடு பேசுகிறார் (அப் 11 : 12, 28; 1கொரி 2 : 10, எபி 3 : 7)
  • ஏன் சமயங்களில் மிருக ஜீவன்களை கொண்டுக்கூட பேசுகிறாரே (எண் 22 : 30, 1சாமு 15 : 14, வெளி 5 : 13). 

ஆக, தேவன் நம்மோடு பேசுகிறார் என்பது உண்மை. 

ஆனால் தேவன் தான் நம்மோடு பேசுகிறாரா என்பதை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது (1தெச 5 : 21), ஏனென்றால் பொல்லாத சத்துருவாகிய வஞ்சகம் நிறைந்த சாத்தானும் போலியாக நம்மோடு பேசி நம்மை வஞ்சிக்க பார்ப்பான் (ஆதி 3 : 1, 1 சாமு 28 : 14 – 19, யோபு 1 : 16). 

தேவ சத்தத்தையும் சத்துருவின் சத்தத்தையும் எப்படி கண்டுபிடிப்பது ?

முதலாவது தேவசத்தம் பரத்திலிருந்து வருகிறதாயும் சாந்தமும் சமாதானம் நிறைந்ததாய் இருக்கும் (யாக் 3 : 17), சத்துருவின் சத்தமோ கேள்வியும் வஞ்சகமும் நிறைந்ததாய் இருக்கும் (ஆதி 3 : 1, 1இராஜா 13 : 18; 22 : 22, லூக் 4 : 3).

தேவன் நம்மோடு பேசும் விதங்கள்.

தேவன் நம்முடைய சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பேசுகிறார். 

  • சில நேரம் அமைதியாக பேசுகிறார்  – நம்மை கேட்கச்செய்யும்படி (1 இராஜா 19 : 12,13). 
  • சில நேரம் பொறுமையாக பேசுகிறார் – நமக்கு நம்பிக்கை உண்டாகும்படி (ரோ 15 : 4). 
  • சில நேரம் கோபமாக பேசுகிறார் – நம்மை உணர்த்தும்படி (யோபு 38 : 1). 
  • சில நேரம் எச்சரிப்பாக பேசுகிறார் – அவருக்குப் பிரியமில்லாததையும் பொல்லாங்கையும் விட்டுவிலகும்படி ( ஆதி 31 : 24, யாத் 19 : 12; 23 : 21, உபா 4 : 23, 6 : 12; 8 : 17, 2இராஜா 6 : 10, மத் 16 : 6, லூக் 11 : 35; 12 : 15; 21 : 8..).

இப்படியாக நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து போகும் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார் என்னே தேவனுடைய அன்பு!

தேவன் நம்மோடு பேசினவற்றுக்கு நாம் கீழ்ப்படியும் போது நமக்கு என்ன நன்மைகள் உண்டாகிறது?

  • இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறோம் (அப் 8 : 30 – 38).
  • தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறோம் (ஆதி 6 : 22 – 7 : 1, 9 : 1 ; 22 :17, 18)
  • ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறோம் (சங் 19 : 7, நீதி 4 : 11).
  • தேவ சாயலைப் பெற்றுக்கொள்கிறோம் (யோவான் 1 : 39, 46; 4 : 29, 11 : 34; மாற் 14 : 70).
  • தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொள்கிறோம் (பிலிப் 4 : 9).
  • தேவ கிருபையைப் பெற்றுக்கொள்கிறோம் (யாக் 4 : 4 , 5).
  • பரலோக வாழ்வின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்கிறோம் (மத் 7 : 21).

நிறைவாக

நாம் வேதத்தின் அடிப்படையில் சிந்தித்தபடி, தேவன் இப்போது மட்டுமல்ல எப்போதும் நம்மோடு திட்டமும் தெளிவுமாய் பேசுகின்ற ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். 

ஆகவே, ஆபத்து நிறைந்திருக்கிற, அடுத்து என்ன என்கிற பயம் சூழ்ந்திருக்கிற, கவலைகளும் கஷ்டங்களும் நெருக்கித் தள்ளுகிற இந்த போராட்டமான வாழ்வில் நாம் சமாதானத்தோடு நம் இலக்கை அடையவேண்டுமானால், நம்மோடு பேசுகின்ற தேவனாகிய கர்த்தருக்கு நாம் செவி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். 

வேதத்தில் அநேகர் தேவ சத்தத்திற்கு செவி கொடாமல் வழி விலகிச் சென்று தேவ ஆசீர்வாதத்தை இழந்தது மாத்திரமல்லாமல், அதற்குரிய விளைவுகளையும் பெற்றுக் கொண்டதை நாம் கவனமாய் பார்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தேவ பிள்ளைகளே, தேவன் இன்றும் நம்மை நேசிக்கிறார் நம்மில் அன்பு கூறுகிறார் நம்மோடு இடைபட விரும்புகிறார். நம்மோடு பேசுவது அவர் உரிமை; அதைக் கவனித்துக் கேட்டு அதன்படி செயல்பட வேண்டியது நம்முடைய கடமை.

ஆகவே, இப்போதும் நம்மோடு பேசுகின்ற உயிருள்ள தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுத்து அவர் சித்தம் செய்வோம், அவருடைய பரிசுத்த நாமம் என்றென்றும் மகிமைப்படுவதாக. ஆமென். 

S. ஜெயச்சந்திரன்

சகோதர சுவிசேஷக் கூடம் – மதுரை

அங்கீகரிக்கப்படாத காயீன்

காயீனும், ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தனர் (ஆதி 4:1). ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்தார், காயீனின் காணிக்கையோ அங்கீகரிக்கப்படவில்லை. காரணம், ஆபேலின் காணிகை அங்கீகரிக்கப்படும் முன் தேவன், ஆபேலை அங்கீகரித்தார் அதனிமித்தம் அவன் காணிக்கையும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், தேவனோ காயீனை அங்கீகரிக்கவில்லை, காரணம் காயீனின் காணிக்கைக்கு அப்பால் தேவன் காயீனை நன்றாக அறிந்திருந்தார். அவன் காணிக்கையை அங்கீகரியாததால் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தேவன் வெளிப்படுத்தினார் (நீதி 21:27).

1. விசுவாசமில்லாதவன் ஆதி 4:3,4 (எபி 11:4)

2. கோபக்காரன் ஆதி 4:5

3. உணர்வற்றவன் ஆதி 4:6,7

4. சதிகாரன் ஆதி 4:8

5. கொலைகாரன் ஆதி 4:8

6. பொய்யன் ஆதி 4:9

7. தர்க்கிக்கிறவன் ஆதி 4:9

நாம் தேவனுக்கு பிரியமாயிருக்கும்போது மட்டுமே நம்முடைய செயல்களும் தேவனுக்கு பிரியமாயிருக்கும். நாம் தேவனுடைய பார்வையிலே அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, நம்முடைய செயல்களும் தேவனால் அங்கீகரிக்கப்படும். “காயீனைப் போலிருக்க வேண்டாம்” (1 யோவா 3:12)

Thanks To Vivekanath

ஆபிரகாமின் வீடு

மனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1).  ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9; ஆதி 12:8), அவருடைய வீட்டையும் (குடும்பத்தையும்), வீட்டாரையும் குறித்தும் வேதத்தில் வாசிக்கிறோம் (ஆதி 14:14; 18:19;). அந்த வசனங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது ஆபிரகாமின் வீடு அல்லது அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாம் அறிய முடியும்.

  1.  அகற்றிவிட்ட வீடு.  ஆதி 12:1 

“கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு.”

தன் வாழ்க்கையில் கர்த்தர் அகற்றிவிட  சொன்னவைகளை அவர்   அகற்றிவிட்டார்.

  1.  ஆயத்தமான வீடு.  ஆதி 14:14

“தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து.”

தன் வீட்டில் உள்ளவர்களை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

  1. இசைகின்ற வீடு. ஆதி 17:27

“வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.”

வீட்டார் யாவரும் எந்த காரியத்தையும் ஒன்றாய் செய்கின்றார்கள்.

  1.  ஈகையின் வீடு. ஆதி 18:1-4

“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.”

அந்நியரை / தேவதூதர்கள் உபசரித்தார்.

  1.  உபதேசிக்கும் வீடு. ஆதி 18:19

“ கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்.”

 கர்த்தரை தன் வீட்டாருக்கு கற்றுக்கொடுத்தார் / யேகோவாயீரே

  1.  ஊன்ற கட்டப்பட்ட வீடு. ஆதி 24:2

“ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்”

ஆபிரகாம் அவர் அறிந்த சத்தியத்தில் / விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்.

  1.  எச்சரிப்பின் வீடு. ஆதி 12:8-10

“அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று.”

பலிபீடத்தை விட்டு தூரம் போன வாழ்க்கை, பஞ்சத்தை கொண்டுவந்தது. இது நமக்கு ஓர் எச்சரிப்பு.

  கே.   விவேகானந்த்

நீ கர்த்தரை ருசித்து பார் அவரில் வளருவீர்கள்

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34:8) என்று சங்கீதக்காரன் சொல்லும்போது, பேதுருவோ “கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” என்று எழுதுகிறார். அதாவது, சந்தேகத்தின் தொனியோடு அல்ல; “நீங்கள் கர்த்தரை ருசிபார்த்திருக்கின்றபடியால்” அவரிலே வளர வேண்டியதின் அவசியத்தை வற்புறுத்துகிறார்.

அப். பேதுரு தனது முதலாம் நிருபத்தில் விசுவாசிகளுக்கு சில “புத்திமதிகளை” (5:12) எழுதுகிறார். இந்த நிருபத்தின் முதலாம் அதிகாரத்தில் வேத வசனத்தின் மூலமாக மறுபடியும் ஜெநிப்பிக்கபடுதலை (1:3, 23) குறித்து சொல்லிவிட்டு, அதை தொடர்ந்துள்ள இரண்டாம் அதிகாரத்தில் “புதிதாய் பிறந்தவர்கள்” (“இப்படியிருக்க”  2:1) வளர வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார் (2:3).

“இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” (1 பேதுரு 2:1)

அவரில் வளரும்படி… (1 பேதுரு 2ஆம் அதிகாரத்திலிருந்து)

1. ஒழித்துவிடுங்கள்  2:2

கர்த்தரை ருசிபார்த்தவர்களாகிய நாம், வளரும்படி தடையாயிருகிற 5 விதமான காரியங்களை ஒழித்துவிடுங்கள்.

ஒழித்துவிட்டால் மட்டுமே ஓங்கி வளர முடியும்.

2. வாஞ்சையாயிருங்கள்  2:3

புதிதாய் பிறந்த குழந்தை பால் அறுந்த வாஞ்சையாயிருப்பதுபோல், களங்கமில்லாத ஞானப்பாலாம் வேத வசனங்களை வாசிக்க வாஞ்சையாயிருங்கள்.

வேதவசனத்தின் மீதுள்ள வாஞ்சையே நம்மை வளர வைக்கும்.

3. கிறிஸ்துவோடு சேர்ந்திருங்கள்  2:4

முன்னே தேவனை விட்டு தூரபோயிருந்த நாம், இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் அவரில் நாம் வளரும்படி, அவரோடுள்ள தனிப்பட்ட உறவில் (ஜெப வாழ்வு) சேர்ந்திருங்கள்.

கிறிஸ்துவோடுள்ள தனிப்பட்ட உறவில் வீழ்ச்சியடைந்தோமானால், வாழ்வின் எல்லா இடங்களிலும் நமக்கு வீழ்ச்சி உண்டாகும்.  

ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவோடு சேர்ந்திருக்கும் உறவை விட்டுவிடாதிருங்கள்.

4. ஆவிக்கேற்ற மாளிகையாயிருங்கள்  2:5

ஜீவனுள்ள கல்லாகிய ஆண்டவர் (2:4) நம்மையும் அவரைப்போல ஜீவனுள்ள கற்களாக மாற்றியிருக்கிறார். காரணம், நாம் ஆவிக்குரிய பலிகளை செலுத்தி தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய வேண்டிய ஆசாரியக்கூட்டம்.

ஜீவனுள்ள கற்களின் இணைப்பாகிய ஆவிக்குரிய மாளிகையாம் சபையோடு தொடர்பிலிருக்கிறீர்களா?

5. கிறிஸ்துவில் விசுவாசம் வையுங்கள் 2:7,8

கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தினாலேயே நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோம். மறுபடியும் பிறந்தவர்களான நாம் எந்த சூழ்நிலையிலும் கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டியது அவசியமாகும்.

  • இந்த விசுவாசம் சோதிக்கப்படும் (1:7).
  • இந்த விசுவாசத்தில் நாம் உறுதியாயிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நாம் களிகூர முடியும் (1:8).
  • இந்த விசுவாசத்தின் உறுதிக்காகவே தேவன் தமது குமாரனை உயிரோடு எழுப்பினார் (1:21).

கிறிஸ்துவின் மேல் வைத்துள்ள விசுவாசம் ஒரு நாளும் நம்மை வெட்கப்படுத்தாது.

6. திருவசனத்திற்கு கீழ்ப்படியுங்கள்  2:7,8

முன்னே நாம் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாயிருந்தோம் (1:14). இப்பொழுதோ, நாம் கீழ்ப்படிதலுக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டோம் (1:2). ஆகையால், திருவசனத்திற்கு கீழ்ப்படியும்படி நம்மை ஒப்புவிக்கும்போது, எவ்விதத்திலும் இடறாது நாம் வளர முடியும்.

நாம் வளரும்படி, ஆவியினாலே திருவசன சத்தியத்திற்கு கீழ்ப்படிவோம் (1:22).

7. அறிந்தவரை அறிவியுங்கள்  2:9

அந்தகார இருளிலிருந்த நம்மை ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்திருக்கிறார். வரவழைத்தவரின் புண்ணியங்களை ருசித்தறிந்த நாம், இன்னும் இருளுக்குள்ளிருக்கும் ஜனங்களும் அவரை ருசித்தறிய, அவருடைய புண்ணியங்களை அறிவிப்போம்.

அறிந்தவரை அறிவிப்பதே வளர்ச்சியின் அடையாளம்.

“அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே 
உம் அநுகிரகம் தரவேண்டுமே”

கே. விவேகானந்த்